பாதி சொன்ன பன்றிக்கதை

'அவன் காட்டை வென்றான்' கதையின் காடு என்னை பிரமிக்க வைத்தது. அந்த கிழவனோடு நானும் பன்றி மீட்க காட்டினுள் சென்றது போன்ற உணர்வை ஒரு இரவுகதையாக என் பிள்ளைகளிடம் விரித்தேன்.

'அப்பா எனக்கு mario கத சொல்லு.. இல்லல்ல fast and furious part 8 சொல்லுப்பா please ப்பா..' - இராகவன்.

'டேய்.. அப்பாக்கு டென்ஷன் குடுக்காத.. அப்பா பேய் கதையே சொல்லுவாங்க.. செமையா பயமா இருக்கும். நீ terror கதையா சொல்லுப்பா' - மாதவன்.

'டேய்.. யப்பா தங்கமணிங்களா, அப்பாக்கு பேய்கதயெல்லாம் தெரியாது. வேணும்னா ஒரு பன்னி கத இருக்கு சொல்றேன்..'

'யப்பா, பன்னிலாம் வேணாம்ப்பா. முயல், அணில் மாதிரி சொல்லு'

'இல்லப்பா நீ சிங்கம், யான கத சொல்லுப்பா'

'ஏன்டா பன்னிக்கென்னடா கொற'

' ஆமாப்பா... அது கருப்பாருக்கும்.. ஆய போய் திங்கும்'.

'ராகவ், அது சாக்கடயிலதான் தூங்கும்டா'

'சரி சரி, நா கொஞ்சம் கத start பண்றேன்.. பிடிச்சா மிச்சத்த சொல்றேன்.. இல்லன்னா யான கதயே சொல்றேன்.. சரியா?'

'சர்ர்ர்ரி...' இது வேண்டாவெறுப்பு சரி.

' சாயந்திரம் 6 மணி இருக்கும். கண்ணு முழுச்சி பாத்த தாத்தா, பன்னி மேச்சிக்கிட்டு காலைல போன பேரன காணுமேன்னு கவலையா திண்ணைல உக்காந்தார்.'

' எதுக்குப்பா பன்னி வளக்குறாங்க'

' வளத்து வித்துருவாங்க டா... வாங்குனவுங்க கறியா வெட்டி சாப்புட வித்துடுவங்க'

' அய்ய...யப்பா.. இந்த கத வேணாம்ப்பா' - இராகவன்

' ஆமாப்பா.. வேற சொல்லுப்பா' - மாதவன்

' நீங்க குறுக்க கேள்வி கேக்காம கதைய கேளுங்கடா... அப்பறமா சந்தேகம் கேளு.. அப்பா சொல்றேன்'

'சர்ர்ர்ரி...'

' வெளிநாட்லயெல்லாம் porkனு சொல்லுவாங்க.. எல்லாரும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.உடம்புக்கு ரொம்ப குளிர்ச்சி'

' foriegn ல சாப்பிடுவங்களா... அப்ப லூயிஸ் ஹாமில்டன் சாப்பிடுவானா?'

'யாருடா அவன்? உன் பிரெண்டா'

'யப்பா, அவன் கார் racer ப்பா.. செம ஸ்பீடா ஓட்டுவான்.. மெர்சிடிஸ் ஓட்டுவான் பாரு, அப்பிடியே அவன் காரு பின்னாடி நெருப்பு வச்சிட்டு போகும்'

' கத நான் சொல்லவா.. இல்ல நீங்களே சொல்றிங்களா?'

'நீயே சொல்லு.. நீயே சொல்லு.. இனிமே குறுக்க பேசல'

'ம்ம்.'

'எப்போதும் ரெண்டு பேருந்தான் போவாங்க..அஞ்சு மணிக்கெல்லாம் திரும்பிடுவாங்க. உடம்புக்கு நல்லாயில்லனுதான் அவன மட்டும் போக சொன்னாரு.

முந்தானாலுதான் ஒரு பன்னி பத்து குட்டி போட்டுச்சு. பன்னிங்க குட்டி போட்டா பத்து பன்னெண்டுனு நேரயா குட்டிங்க போடும்.'

பெரியவன் என்னமோ கேட்க நினைத்து அப்படியே வாயை மூடிக்கொண்டான்.

'குட்டி போட்ட கொஞ்ச நேரத்துக்கு அதுங்களுக்கு எதிர்ல நிக்கிறவன் வளத்தவனாலாம் தெரியாது. ரொம்ப கோவமா இருக்கும் அதோட குட்டிங்கள தூக்கிட்டு போய்டுவாங்களோனு ஒரு பயம். அதனால யாரையும் கிட்ட விடாது. அதுக்கு நகமும் பல்லும் கூரா இருக்கும் வேற.

ராத்திரி பூறாவும் கிழவன் தூங்காம கூண்டு ஒன்னு செஞ்சு தாயையும் குட்டிகளையும் பத்திரமாகிட்டார். ராத்திரி முழுசும் தூங்காம இருந்த கலைப்புலதான் பேரன மட்டும் போக சொன்னாரு.

இன்னைக்கோ நாளைக்கோ குட்டி போடா போற இன்னொரு பன்னியையும் தெரியாம அவன் மேய்க்க கூட்டி போய்ட்டான்.

கொஞ்ச தூரம் அவன தேடி போனவருக்கு எய்தாப்புல பன்னிங்களோட அழுதுகிட்டே வந்தான். மத்தியானம் கொஞ்ச நேரம் தூங்கின நேரத்துல அந்த சென பன்னி காணாபோய்ட்டுன்னு அழுதான்.'

சின்னவன் அசந்து தூங்கியிருந்தான்.

'அப்பா, அவன் அப்பயே தூங்கிட்டான். நீ சொல்லு'

நான் எழுந்து அவனை தூக்கி தலையணையில் போட்டேன். பின்தலை வியர்திருந்தது. கைலியால் துடைத்துவிட்டு படுக்க வைத்தேன். ஒரு அரவம் இல்லை. மதியம் பெரும்பாலும் தூங்கமாட்டான்.

' அவன போக சொல்லிட்டு இவர் மட்டும் கையில் கூரான பெரிய கம்பும், சின்ன கத்தியும் எடுத்துக்கிட்டு மல மேல எறுனாரு. மலைன்னா அது பெரிய மல.. நடுவுல ஒரு ஆறு ஓடும். அன்னிக்கி பௌர்ணமி. நல்ல வெளிச்சம் இருந்ததால சல் சல்லுன்னு மேல எறிட்டார். மணி ஓம்போது பத்து ஆயிருக்கும். அந்த பக்க ஏறக்கத்துல ஒரு சின்ன கொக இருக்கு. அங்கதான் அது குட்டிபோட போயிருக்கும்னு நெனச்சிகிட்டே போறாரு.

அவருக்கு நல்ல பசி. தாகம் வேற.. ஒரு ரெண்டு கிலோமீட்டர் மேல போனா மேல இருந்து வர ஆறு வரும். அங்க போய் தண்ணி குடிக்கலாம்.

அவருக்கு நாக்கு ரொம்ப வறண்டு போயிடுச்சு. மலையும் ரொம்ப குத்தா ஏறுது.

ஒரு வழியா ஆத்துபக்கம் வந்து, ஆத்துல மொகம் கழுவி வாய் கொப்பளிச்சி நெறய தண்ணி குடிச்சாரு. சில்லுன்னு தண்ணி குடிச்சத்தும் வயிறும் குலு குலு னு ஆயிடுச்சி. '

'அப்பா..கொஞ்சம் ஜில்லுதண்ணி எடுத்து குடேன்..'

பச்சதண்ணியும் கலந்து கொடுத்தேன்.

ஒரு சொம்பு தண்ணியையும் முட்ட குடித்தான்.

'செமப்பா.. அம்மாட்ட சொல்லாத.. ஒன்னதான் திட்டுவா. அப்புறம் என்னாச்சுப்பா'

'அப்புறம் என்ன.. தண்ணி குடிச்ச தெம்புல, விறு விறுன்னு கொகைக்கு பக்கமா போய்ட்டார். உள்ள குட்டிபோட்டு குப்புற படுத்து கிடக்கு அந்த பெரும்பன்னி. நிலா வெளிச்சத்துல மினுமினுன்னு குட்டிங்க மின்னுது. ஒவ்வொன்னும் ஒரு ஜான் அளவு கிடையாது. சண்ட போட்டுக்கிட்டு அம்மாகிட்ட பால் குடிக்கிது.'

ராகவன் என்னை கட்டிக்கொண்டான்.

' கொஞ்சம் கொஞ்சமா கிட்ட போய் சின்னதா ஒரு சத்தம் குடுத்தாரு. சடார்னு ஒரே பாச்சல் தான். இவர் மேலயே வந்து உழுந்துடுச்சு. கால்ல முதுகுல பேராண்டி உட்றுச்சி. கைல கத்தி கம்பு இருந்தும் இவர் ஒன்னும் செய்யல.. பலம் காட்டி அதை பேறட்டி போட்டுட்டு ஓடி போய் மரத்துமேல ஏறிகிட்டாறு. பன்னி மரத்த கொஞ்ச நேரம் சுத்தி சுத்தி வந்துட்டு மறுபடியும் போய் கொகைல குட்டிகளோட படுத்துகிச்சு. இவருக்கு தொடைல நல்ல காயம். ரத்தம் நெறய வெளியே போயிடுச்சு. மரத்தில இருந்த கொஞ்சம் எலய பறிச்சு காயத்துல வச்சி அழுத்தி பிடிச்சிக்கிட்டார். முதுகு காயம் கைக்கு எட்டல. கொஞ்சம் எலய கெளைல வச்சி முதுகு புண்ணோட வச்சி அழுத்திக்கிட்டார். '

'தூங்கிட்டியாடா?' , ' இல்லப்பா.. அவரு அந்த பையனயும் கூட்டிகிட்டு காலைல போயிருக்கலாம்ல?' வருத்தமாக கேட்டான்.

' இல்லடா, அந்த மல காட்டுல நெறய நரி, ஓநாய் எல்லாம் இருக்கு. அதுங்க கூட்டமா வந்தா அவ்ளோதான். பண்ணியயும் குட்டியையும் கொன்னு சாப்டுரும். அதான் அவர் இதுங்கள காப்பாத்தி கூட்டிட்டு போக ராத்திரியிலயே வந்துருக்காரு.

கொஞ்ச தூரத்துல ஒரு ஓநாய் வர்றத பாத்துட்டார். கத்தியும் கம்பும் கீழ கெடக்குது. கிட்ட வர்றதுக்கு முன்னாடி வேகமா கீழ ஏறங்கி சத்தம் காட்டாம ரெண்டையும் எடுத்துக்கிட்டு மேல வந்துட்டாரு. பண்ணி சின்னதா ஒரு உறுமல் போட்டுட்டு படுத்துகிச்சு. இப்ப அந்த ஓநாய் கொக வாசலுக்கே வந்துருச்சு. கூர் மொன முன்னாடி இருக்குற மாறி கம்ப தூக்கி புடிச்சிக்கிட்டு வசம் பாத்து ரெடியா நிக்கிறாரு கிழவன். ஒரு அடி அது கால முன்ன வச்ச ஒடனே கம்ப குறி வச்சி வீசுனாரு. கம்பு ஓநாயோட வயித்தை கிழிச்சிக்கிட்டு அந்த பக்கம் தரையில ஊணி நின்னுகிச்சு. பெரும் அலறல் போட்டு சாஞ்சிடுச்சு.'

'சூப்பர்ப்பா..'

'டேய்.. அப்பனும் மகனும் வெளிய போய் கதை பேசுங்கடா. கத சொல்ற நேரத்த பாரு.. நடுஜாமத்துல புள்ளைக்கு என்ன கத சொல்லணும்னு ஒரு அறிவு வேண்டாம்.. குத்துனான் கடிச்சான் னு.. பேசாம தூங்குங்க ரெண்டு பேரும், இல்லன்னா போய் மொட்டை மாடில நின்னு பேசுங்க.' - சரியான தூக்கம் பிடிக்காத கோபத்தை எங்கள் மேல் காட்டிய மனைவியை சமாதானப்படுத்த நாங்கள் மொட்டை மாடிக்கே போனோம். ராகவன் சுத்தமாக தூக்கம் கலைந்து நின்றான்.

' பன்னி வெளிய வந்து செத்துப்போன ஓநாய சுத்தி சுத்தி வந்துட்டு போய் மறுபடியும் படுத்துகிச்சு. கிழவன் கீழ மெதுவா போனாரு. கொடலையும் எலும்பையும் ஓடச்சிக்கிட்டு உள்ள போன கம்பை உருவ முடியவில்லை கிழவனால். வேற எதுவும் மிருகம் வருதான்னு பாக்க, திரும்ப மரத்துக்கு மேல ஏறி நின்னு சுத்தி பாத்துகிட்டாரு.'

பசுமலையில் இன்னும் வெளிச்சம் ஓயவில்லை. பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் தாஜ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார். விருந்து நடந்துகொண்டிருக்கலாம்.

ராகவன் கேட்டான் 'அப்பா, ஒரு நாளைக்கு நம்ம தாஜ் ஹோட்டலுக்கு போய் coffee குடிக்கலாம்பா, ஆசையா இருக்குப்பா.'

'அது ஏன்டா காப்பி? வேற எதுவும் வேண்டாமா??'

'அம்மா சொன்னா அந்த ஹோட்டல் ரொம்ப costly யாம், ஒரு coffee யே two hundred rupees வருமாம். அதான் வேற ஏதும் வேண்டாம். சும்மா மலைக்கு மேல ஏறி அங்க இருந்து மதுரைய பாதுகிட்டே coffee குடிக்கணும்'

தலையாட்டி வைத்தேன்.

'கிழவன் தூரத்துல மூணு ஓநாய்ங்க வர்றத பார்த்து மெரண்டு போய்ட்டார். ஒன்னொன்னும் ஒரு தெசையில வருது. கைல கம்பும் இல்ல.. சின்ன கத்திய வச்சி எப்புடி மூணுத்தையும் சமாளிக்கிறது. பன்னி வேற ரொம்ப முடியாம படுத்துருக்கு. மூணு ஓநாயும் ரொம்ப கிட்ட வந்துருச்சு'

ராகவன் கலவரமானான். கையை இறுக பற்றிக்கொண்டான்.

மெல்ல அவன் கையை பற்றினேன்

கேட்டான் ' தாத்தா பன்னியையும் குட்டிகளையும் காப்பாத்திடுவாரா அப்பா?'

'அவருக்கு அடிபட்டு இருக்கு.. ஆயுதம் வேற இல்ல..நீ காப்பாத்த போறியா ராகவன்'

' எங்கப்பா நான் போய் காப்பாத்துவேன்... நான் என்னப்பா செய்ய முடியும்'

' கத தானே டா.. நீயே யோசி.. அந்த கதைய அப்டியே நிப்பாட்டி, நீயே காப்பாத்த யோசி'

ராகவன் உற்சாகமானான்.. நம்பிக்கையுடன் தூங்க சென்றான்..

'உற்று நோக்கினான் கிழவன்.

குட்டிகளுக்கும் பன்றிக்கும் சிறகுகள் முளைத்து மெல்ல எழும்பி பறக்க தொடங்கின... ஓநாய்கள் தவ்வி பிடிக்க முயன்று, தோற்று பின் வானைப் பார்த்து ஊளையிட்டன.. கிழவன் துள்ளி குதித்து மரத்தையே ஆட்டி வனம் அதிர கத்தினான்.'

எழுதியவர் : சௌ.பாலாஜி பிரசன்னா (24-Apr-19, 1:53 pm)
சேர்த்தது : Balaji Prasanna
பார்வை : 150

மேலே