கேரா
கேரா
வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பில் கண்ட 'கேரா' எனும் நெல்லை வட்டார சொல்லுக்கான நம்மூர் வழக்குச் சொல்லை தேட மனம் போயிற்று. மேலே படிக்க முடியாமல், வரிகள் ஒரு கண் வழியே சென்று மறு கண் வழியவே புத்தகத்திற்குள் போயிற்று.மூளையில் உள்ள எல்லா அலமாரிகளுக்குள்ளும் மனம் குப்பைத்தொட்டியில் கட்டி வீசப்பட்ட நெகிழிப்பையை கிழித்து உணவு தேடும் நாய்ப்போல தேடி குதறிக் கொண்டிறுந்தது.
“ என்ன இது? ஒரு சின்ன வார்த்த. இத மறந்துருக்கோமே..”
காலை பால்காரர் கீழே மணி அடித்து 'கேரா' தேடலை கலைத்தார்.
“தோ வரேன்ணா”. இந்த சத்தம் வந்தால் இன்னும் 10 நிமிடம் ஆனாலும் திரும்ப மணி அடிக்க மாட்டார்.
பெரியவன் யூடியூபில் 5 mins crafts பார்த்து கொண்டிருந்தான். சிரித்த முகத்துடன் வெள்ளைக்கார பெண் வேகவேகமாக பற்பசைக்குழாயை பின்பக்கமாக சுருட்டிக்கொண்டிருந்தாள். சின்னவன் இன்னும் எழுந்திருக்கவில்லை. மனைவி அறைக்கதவை சாத்திகொண்டு உள் இருந்தாள். உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பாள்.
“நாமதான் கீழ போகணும்” நினைத்தபோதே, அத்தையின் குரல் அதை உறுதி செய்தது,
“கண்ணு, TV மேஜைல பால் குண்டான் வச்சிருக்கேன், ஒன்ற லிட்டர் கண்ணு”.
பாதி படிகள் இறங்கிய பிறகே நினைவுக்கு வந்தது,
”அய்யோ! கிரில் கதவு திறந்திருக்கணுமே. சாவி எடுத்து வரலாமா” என்று நினைக்கும்போது கீழே வந்துவிட்டேன். கதவு திறந்து தான் இருந்தது.
வண்டியை சாய்த்து அலுமினிய படியில் அளந்து ஊற்றினார். அவர் கொசுறு பிடித்து ஊற்றி நிமிரும் போதுதான் எனக்கு மீண்டும் கேராவின் நினைவு வந்தது. இதுதான் கேரா என்று தெரிகிறது. அவரிடமே கேட்டுவிடலாமா என்று நினைக்கும்போதே,
” பத்து லிட்டராக்கா, function 3 மணிக்குத்தானே, வந்துடறேன்க்கா” பதில் சொல்லி செல்போனை அணைத்து கிளம்ப தயாராகிவிட்டார். நானும் சிரித்து மேலே வந்துவிட்டேன்.
“அப்பா, எனக்கு sample paste வாங்கி தறியா” பெரியவன் கேட்டான்.
தலையாட்டி அவன் சிரிப்பிற்க்கு பதில் சிரிப்புடன் குளிக்க சென்றேன். வெளியே வந்த போது,
”என்னடா இவ்ளோ நேரம் இன்னைக்கு குளிச்சிருக்க, அஞ்சு நிமிஷம் ஆச்சு' கிண்டலாக கேட்டாள் மனை.
எப்போதும் நான் காக்கா குளியல்தான் குளிப்பதாக என் அம்மாவிடமும் சொல்லியிருக்கிறாள். அம்மா அறுவருப்பாக உடலை சிலிர்த்துக்கொள்வாள்.
குளிக்க நேரம் எடுக்க கேராதான் காரணம்.
'ச்சே! என்ன இது?'.மூளைக்குள் கொசு ரீங்காரமாய் கேராவின் சத்தம்.
இனிமே இதை நினைக்கவே கூடாதுனு நினைக்க நினைக்க என் உடல் பூராவும் கேரா பரவி, உடலில் உள்ள ஒவ்வொரு மயிரும் கேள்விக்குறிபோல வளைந்து படர்ந்தது போல இருந்தது.
நாலாவது முறை கேட்டாள்,”என்னடா ஆச்சு.. என்ன யோசன?”.
“ஒன்னும் இல்லப்பா..”
அவளிடம் கேட்கலாம்தான். கூகுளை கூடத்தான் கேட்கலாம்.சுய ஆணவம் தடுத்தது. உடை உடுத்தும்போது, தலை சீவிய போது, பணம் சரிபார்த்து பர்ஸை pant பின் பாக்கெட்டில் வைத்தபோது.. எனக்கு வியர்த்து கொட்டியது.. கையாலாகாத அறிவை மனம் திட்டி தீர்த்தது.வண்டியை உதைத்து கிளப்பினேன். வீட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம் அலுவலகம். மனைவியை இறக்கி விட்டு UTURN போட்டு என் அலுவலகம் வரவேண்டும்.
பசுமலை ரயில்வே கிராசிங் கடந்து மேலே வந்த போது வெய்யில் உக்காரமாய் இருந்தது.
” கேஸ் சிலிண்டர் பதியணும், மளிகைக்கு, அப்பறம் பெரியவன் பிறந்த நாளுக்கு DRESS எடுக்கணும். இந்த மாசம் ஒரு பத்து ரூவா மாத்தி விடுப்பா. அப்புறம் ஊருக்கு போய்ட்டு அப்டியே வேளாங்கண்ணி போவோமா?”- மனைவி.
“சரிப்பா. இன்னைக்கு அஞ்சு ரூவா போடறேன். மிச்சம் ஊருக்கு போய்ட்டு வந்து பாத்துக்கலாம். இப்ப ட்ரெஸ் மட்டும் எடுத்துக்குவோம்.”
சரியாக பசுமலை ஆர்ச்சை கடந்தபோது எங்கிருந்தோ ஒவ்வொரு எழுத்தாக என் மனதிற்குள் வந்து விழுந்தது கேராவின் என் ஊர் சொல்...
“ ஆங்.... கிருதா” கத்தி சொன்னேன்.
என் ஹெல்மெட்டின் உள்ளே விரல் விட்டு கிருதாவை தடவி பார்த்து அதிர்ச்சியாய் கேட்டாள்,” கிருதாவுக்கு என்ன ஆச்சு டா?''
“ஒன்னுல்ல...ஒன்னுல்ல”
ஒரு மணி நேரம் என்னை ஓடவிட்டு சிரித்த கிருதாவை அடுத்த முறை பாலு அண்ணன்ட்ட சொல்லி ஒட்ட நறுக்கணும்.