தீவிரவாதத்தை தீர்த்துக்கட்டுவோம்

தீவிரவாதத்தை தீர்த்துக்கட்டுவோம்....!

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு ... ஓர் அலசல்...

அன்று தேவமைந்தன் உயிர்த்தெழுந்த நாள்....
அமைதியாய் ஆலயத்தில் வெண்புறா கூட்டங்கள்....
பியானோ பின்னணியிசையில் தேவனின் மகிகை....
அதோ பிரார்த்தனை ஆரம்பம்....
“கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்
நான் தாழ்ச்சி அடையேன்
மரணப் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன்
என் ஜீவன் உள்ள நாளெல்லாம்
கர்த்தருடைய வீட்டில்
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்”....
ஆமென் என்ற ஒருமித்த ஒலியோடு
அன்பு சமாதானம் நெஞ்சில் நிறைந்தது....

அருகில் பேரொலியாய் வெடிக்கும் சப்தம்....
கண்ணிமைக்கும் நேரத்தில்...
சிதறிக் துடித்தன உடல்கள்
கதறி மடிந்தன உயிர்கள்
பதறி ஓடின உறவுகள்....
நொறுங்கி வீழ்ந்தது
தேவமைந்தன் மரித்த சிலுவை...
பாவிகள் இரட்சிக்கப் பட்டனர்
அப்பாவிகள் பரலோகம் போயினர்....

கொடூர கொலைவெறி குடியேற்றத்தால்
குபேரன் பூமி கோர பலிபீடமானது
ஓலமும் ஒப்பாரியும் தேசியகீதமாகி
செவிப்பறையை அறைந்து முகுளத்தை உறைத்தது
பீறிட்டக் குருதியால் தூர்ந்த வீதிகளில்
பிணவாடை நாற்புறமும் நாசியை நெறித்தது....

அன்று...
எங்கோ ஒருவனின் சாம்ராஜ்ஜிய வெறி
எங்கோ ஒருவனின் பழிதீர்க்கும் வெறி
எங்கோ ஒருவனின் அகங்காரத் திமிர்
எங்கோ ஒருவனின் அடங்காச் சினம்
எங்கோ ஒருவனின் இனத்தின்பால் வெறி
தீவிரவாதத்தை பற்றி எரியவிட
அது எம்முயிர் தமிழினத்தை பொசுக்கி
எங்கெங்கோ அகதிகளாய் ஓடவிட்டது....

இன்று.....
இனவெறி ஆட்டம் சற்றே ஓய்ந்திட
மதவெறி கொடியேற்றம் நடந்தேறியதோ...?
புத்த சன்மார்க்க சிங்களவ வெறியர்களால்
யுத்தக் காண்டம் ஒன்று புதிதாய் அரங்கேறியதோ...?
உளவுத்துறை எச்சரித்தும்
அரசு காட்டிய மெத்தனம்
சிங்களவ பௌத்த நாடாய்
இலங்கையை மாற்றிட பிரயத்தனமோ...?
ஆராய்ந்து அறிய வேண்டிய கட்டாயத்தில் நாம்.....

அண்டை நாட்டு நிகழ்வென
இந்திய அரசு மௌனம் காத்தால்....

வடகொரியா வரிசையில்
இலங்கையும் தனிமைப்படும்
நேபாளம் பர்மாவில் அடிபதித்த சீனா
அனுகூலமாய் இலங்கையில் அடித்தளம் அமைத்திடும்....
அடுத்து அரவமின்றி
இந்திய இறையாண்மைக்கு வேட்டு வைத்திடும்....

இனவெறி மதவெறி தூண்டிடும்
உயிரணுக்களை
கருச்சிதைவு செய்திட வேண்டும்...
உலக நாடுகள் ஒன்றாய் இணைந்து
அன்பு அஹிம்சை ஆயுதங்களை
பட்டைத்தீட்டி
தீவிரவாதங்களை தீர்த்துக்கட்டிட வேண்டும்....

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (26-Apr-19, 3:30 pm)
பார்வை : 32

மேலே