ஆயுள் முழுதும் தேடுகிறேன்

ஆயுள் முழுதும் தேடுகிறேன்....!

என்னை வேண்டுமென்றே நிராகரிக்கின்றாய்...
என் தேடலை காண்பதில் அத்தனை சுகமோ...
அதுதான் உனக்கு இன்பம் என்றால்
ஆயுள் முழுதும் தேடுகிறேன்...

கண்கள் தானாய் கசியத்தான் செய்கிறது
உன் காட்சிகள் இதயத்தில் திரையிடும் போது
இதழ்கள் தானாய் தலையிட்டு
புன்னகைத்து அதை மறைக்கிறது

நெருப்புக் கடலில் நீத்தினாலும்
உன் நினைவுகள் என்னை குளிர வைக்கும்
ஆழ்கடலில் மூழ்கி ஆழ்ந்தாலும்
உன் நேசம் என் சுவாசம் இயக்கும்

கூடுவதும் கொஞ்சிக் குலாவுதலும் மட்டுமே
காதல் விளையாட்டின் வாடிக்கை அல்ல
தேடலும் உயிர் உருகி வாடலும் கூட
காதலின் உன்மத்தமான நிலை அன்பே...

என் கையிருப்பு நாட்கள் எத்தனையோ
கணித்த காலதேவனே அறிவான்
ஜனன மரண நியதியாலே எனை
கைகளில் ஒருநாள் ஏந்திச் செல்வான்

ஜென்மம் தொடர்ந்தால் மீண்டும் வருவேன்
என் தேடலில் மீண்டும் உன்சுகத்தைக் காண்பேன்
அதுவரை மறைந்தே எங்கேனும் நலமாயிரு அன்பே
மறந்தும் என் மரணத்திற்குமுன் வந்துவிடாதே...!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (26-Apr-19, 3:26 pm)
பார்வை : 77

மேலே