கைனா என் பால்ய காலத்து நண்பன்

கல்யாணக்கிருஷ்ணா
எங்கிருக்கிறாய் நீ...
ஐந்தாம் வகுப்பில் ஒன்றாய் படித்து
ஆறாம் வகுப்பில் தொலைந்து போய்விட்டாய்...
பெரிய கண்களுமாய் படிய வாரிய
நீள் வட்ட முகத்தோடு
உன் அரை டவுசர் உருவம் இன்னமும்
ஞாபகம் இருக்கிறது ...

உன் பெயரை “கைனா” என்று அழைத்ததும்…
பள்ளியின் காலை நேர கடவுள் வாழ்த்துக்களில்
`நீ சுருண்டு விழுந்ததும்… உன் வீட்டுக்கு என்னை
அழைத்து செல்கையில் சிகப்பு புடவை
அணிந்திருந்த உனது அம்மா நமக்கு உணவிட்டதும்…
உனது வீட்டு வாசலில் ஒரு அழகான நாய்க்குட்டி இருந்ததும்…
என் ஞாபகங்களில் பத்திரமாக இருகின்றன...

நீ இன்றைய நாளில்
முகத்தோல் தடித்தோ தலை நரைத்தோ
காணப்படலாம்... ஆனால்
உன் பழைய பால்மாறா முகமும்
சூட்டிகையான சிறு பையன் மொழியும்
இன்னும் சொச்ச நினைவுகளும்
பனிமலையில் படிமங்கள் போல
என்னிடம் உறைந்து கிடக்கின்றன...
அந்த பழைய கல்யாணக்கிருஷ்ணனை உன்னிடமே
சிலாகிக்க விருப்பம்...
முகநூலில் எங்கிருக்கிறாய்?
இப்பவும் உன்னை “கைனா” என்றா
அழைக்கிறார்கள்?

எழுதியவர் : சிவா. அமுதன் (26-Apr-19, 9:20 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 280

மேலே