ஒளிந்து கொண்ட தூரிகை

பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே
புத்தகப் பக்கங்கள் திருப்புவது போல
வானம் திருப்புகிறது
வண்ணங்களை...
குங்குமப் பூ ஊறிய பால் நிறமாய்
தங்கத் திடலாய் விரிந்திருந்த வானம்
பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே
மாலையின் பொன் சோம்பல் முறிவைத் தொடர்ந்து
வழக்கத்திற்கு முன்பாகவே இருளை இழுத்துக்கொண்டு
நிலவை சந்திக்க ஆயத்தமானது
எப்படி என்றே தெரியவில்லை
ஒளிமொட்டுகளாய்த் தாரகைத் தோரணங்கள்
இரவு பூத்துவிட்டது அதற்குள்
இப்படித்தானோ
பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே
திரண்டு வந்து தீண்டிச் சென்று-பின்
தேடிக்கொண்டே இருக்க வைக்கும் காதல். . .

எழுதியவர் : மதுமதி.H (29-Apr-19, 6:48 pm)
சேர்த்தது : மதுமதி H
பார்வை : 52

மேலே