மழை நின்ற பின்னாளில்

மழை நின்ற பின்னாளில்

முகம் வெளிறிப் போன வானம்….
மேகக் குழந்தைகளைத் தேடியதாய்…..

புல்லரித்த பூமியில் கொப்பளிக்கின்றன
ஆங்காங்கே நீர்க்கட்டிகள்…..

நனைந்து விட்ட விருட்சங்களை……
தலை துவட்டிக் கொண்டிருக்கிறது காற்று….

மனித மூளைக்குள் சிக்காத
தொழில் நுட்பத்தின் காப்புரிமை பெற்றவராய்…
கூட்டோடு பறவைகள்….

காகிதக் கப்பல்களை சுமந்த கண நேர
நீரோட்டங்கள் பெரும் வியாபாரிகளாக்கின….
குழந்தைகளை….

குறித்த நாளில் மரணிக்கப் புறப்பட்டவர்களாய்….
ஒளியை வலம் வந்தன….
முகடெங்கும் விட்டில் பூச்சிகள்…

.
மழை அடையாளப் படுத்திய ஓட்டைகள்
மண் கோந்தினைத் தின்று கொண்டிருந்தன
பசி மிகுந்து கூரையில்…..

வீடு தந்த கதகதப்பில்……
மீண்டும் திண்ணை சேர
அடம் பிடித்து மறுப்பதாய்
செல்லப் பிராணிகள்….

மீண்டும் மீண்டும் வாயிலை நோக்கியவாறு….
குடியிருப்புக்குள் புலம் பெயருகின்றன…
மழையில் நனைந்து நீர் குடித்த பாத்திரங்கள்…..





சு.உமா தேவி

எழுதியவர் : சு.உமாதேவி (30-Apr-19, 8:27 am)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 60

மேலே