நெஞ்சின் கதகதப்பு

அன்பு இல்லாத உலகத்தில்
வாழ்வது எப்படி இருக்கும்
நம் நெஞ்சின் கதகதப்பில்
தகிப்பதுபோல் இருக்கும்

ஆசைகள் இல்லாது பயணித்தால்
பயணங்கள் எப்படி இருக்கும்
காற்றில் மிதந்தபடியே
செல்லும் சிறகுகளைப்போலவே
இருக்கும் வாழ்க்கையும்

உயிருக்கும் உறவுக்கும் உள்ள
இடைவெளி எப்படி இருக்கும்
கர்ப்பப்பையின் வாசனையை
வெளிப்படுத்தியபடியே
(இருக்கணும்) இருக்கும்

நிறம் மாறாத இரவுகள்
எப்படி இருக்கும்
ஆடை அணியாத நிலவை
மொய்க்கும் மின்மினிகளாய்
தொடர்ந்தபடியே இருக்கும்

இத்தனையும் தெரிந்து கொண்ட
பின்பும் வாழ்க்கை எப்படி இருக்கும்
எதுவும் தெரியாததுபோலவே
நடித்துக்கொண்டிருக்கும்
இல்லையென்றால்

என்னைப்போல எதிர் வீட்டு
கொடி மல்லிகையின் சுகந்தத்தில்
மதிமயங்கி கால நேரத்தை
தொலைத்துக்கொண்டிருக்கும் !!......

வாழ்க்கையில் தடம்
பதிக்கப்போகிறேன் என்று
பூமியில் தன் தடங்களை
தொலைத்துக்கொண்டிருக்கலாம்!!......

எழுதியவர் : மேகலை (30-Apr-19, 9:11 am)
பார்வை : 93

மேலே