ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
#ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
நாணிக் கோணியவள் நடக்கின்றாள் வீதியிலே ராணியவள் தோற்பாளே என்னவளின் நடையினிலே
பூந்தோட்டம் நடந்திடுமா பார்ப்போரும் வியப்பாரே
கால்முளைத்தத் தோட்டத்தையே கண்டெவரும் ரசிப்பாரே..!
என்னவளும் பவனிவர மணந்திடுமே தெருவீதி
அன்னவளைத் தாலாட்டும் தென்றலது கவிபாடி
பொன்முகத்தின் பொலிவெல்லாம் கண்டிடவே கூசிடுமே
பூவையவள் நடந்திடவே தொடர்ந்திடுவேன் வண்டெனவே..!
அதிர்ந்த பேச்சில்லை அவளழகோ கொள்ளை
அன்பிலே மூழ்கடித்தாள் நானின்னும் எழவில்லை
முப்பொழுதும் சிறைப்பிடித்தாள் நினைவிலெல்லாம் அவளே
எப்பொழுதும் என்னுள்ளே நிறைத்திருப்பாள் திருமகளே..!
நாணதனை சூட்டியுமே நங்கையவளை சிறையிட்டேன்
நானன்றோ சிறையினிலே கைதியென
சிக்கிவிட்டேன்
ஆயுள்கைதி ஆகிவிட்டேன் மீளுகின்ற எண்ணமில்லை
தாயுமவள் ஆகிவிட்டாள் காண்கிறேன் வானவில்லை..!
சாதிக்க நினைத்தோமே சாதிகளை வெறுத்தோமே
மோதித்தான் பார்க்கட்டும் முட்டாளும் உறவாமே
ஒதுக்கித்தான் வைத்தோமே மதமேறிய உறவுகளை
உவகையுடன் வாழ்ந்திடவே விரித்தோமே சிறகுகளை..!
#சொ. சாந்தி