கன்னக் குழி அழகில் களவு போகுதே மனசு

கன்னக் குழி அழகில்
களவு போகுதே மனசு.!

கெண்டைக் கண்ணழகி குயிலுக் குரலழகி
தண்டைச் சிலம்பொலிக்க வந்தாளே விழுந்தேனே..!
வெண்கலமாம் பேச்சிருக்க பூசைமணி கினுகினுக்கும்
என்னைத்தான் மறந்திருப்பேன் எசப்பாட்டு முனுமுனுக்கும்..!

சங்குக் கழுத்தழகி சாடைப் பேச்சழகி
மங்காப் பேரழகி மயக்கிடுவா விழியாலே
அன்பினையே அளந்துரைக்க ஆகாயம் போதாதே
பண்பான பொன்மகளே நெனப்பெல்லாம் உம்மேலே..!

சீவிச்சடை முடிச்சி சிங்காரமாய் நடப்பா
திருவாரூர் தேரசைவாய் நெஞ்சத்தான் பறிப்பா
தாளமிடும் பின்னாலே பின்னலிலே குஞ்சலமும்
கோலமயில் எழிலாலே கொண்டிடுவேன் சஞ்சலமும்..!

மனசத்தான் படிச்சிடுவா மௌனத்தின் அகராதி
எனக்குள்ளே ஆனாளே என்னவளும் சரிபாதி
கன்னக்குழிச் சிரிப்பில் கவுத்துடுவா படுபாவி
என்னத்தச் சொல்லிடுவேன் கலந்தாளே உயிராகி..!

தென்பொதிகைச் சாரலவள் சில்லுன்னு தானிருப்பா
வெண்பஞ்சு மனசாலே வேதனைகள் தீர்ப்பா
கற்புள்ள கண்ணகிக்கு இணையான என்னவளாம்
அற்புதமாம் அவளுடனே எந்நாளும் திருநாளாம்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (8-May-19, 9:15 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 70

மேலே