ச துரை கவிதைகள்
கொடி கட்டப்பட்டது
உப்புகரித்த நாவால் தலைவன்
பாடுகிறான் மீன்களை
முந்தானைக்கொண்ட தலைவி
பெரும் விமோசனங்களை உண்பதற்க்கு
நுண் பாவங்கள் சமைத்தாள்
பிறகு அவளே தன் விழியிழந்த
குழந்தைகளுக்கு மெல்லிய சதைகளை
ஊட்டி முட்களால்
படம் வரைந்து காண்பிக்கிறாள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாடியில் இருந்து கீழ்நோக்கி
இடுப்புவரை ஒரு கோடு உருவாகியிருந்தது
கடைசி ஒரு வாரத்தில் கோட்டின்
இடதுபுறத்தில் கிடார் வாசிக்கிற
சிறுவனொருவன் வந்தமர்ந்தான்
வலதுபுறத்தில் ஒரு பெரும் புயலை
கப்பலில் கட்டித் தூக்கியபடி
மாலுமியொருவர் கரையைப் பார்த்தபடி நின்றார்
இது என்னவென்று கேட்டேன்
பதிலுக்கு வயிரும்
யாரிந்த மாலுமி
யாரிந்த கிடார் சிறுவன்
இந்தக் கடல் எங்குள்ளது
இவனுக்கு யார் கிடார் வாசிக்கக் கற்றுத் தந்தது
“எனக்குத் தலை சுற்றுவது மாதிரியிருக்கிறது வயிறே”
நேற்றிரவு கோட்டின் வலதுபுறத்தில்
புயலைக் கரைக்குக் கொண்டு வந்த
மாலுமி மது அருந்தினான்
சிறுவன் கிட்டார் வாசித்தான்
இரவு முழுக்க உறங்கவேயில்லை
வெகு அதிகாலையிலே வீட்டுக்காரர்
மனைவியோடு கதவைத் தட்டினார்
இனி இம்மாதிரியான கச்சேரிகளைச்
செய்வதாய் இருந்தால் நீங்கள்
தாராளமாக வேறு வீடு பார்க்கலாம்
எனக்கு வேறு வீடு பார்ப்பதெல்லாம்
பிரச்சனையில்லை வீட்டுக்காரரே
அத்தனைக்கும் காரணம் இந்த
மாலுமிதான் அவனையும் கொஞ்சம்
கேளுங்களென்று வேகவேகமாக
பனியனைக் கழற்றினேன்
அங்கு சிறுவனுமில்லை
மாலுமியுமல்லை
பிறகென்ன எல்லாம் நடந்தாகிவிட்டது
இது புதுவீடு இப்போது முதுகில்
நேர்குறுக்கில் நான்கு கோடுகள்
ஒருவன் ஜெபம் பாடுகிறான்
மற்றொருவன் சொற்பொழிப்பு நிகழ்த்துகிறான்
இன்னொருவன் மீன் பொறிக்க
முகம் தெரியாத மாதிரி ஒருவன்
குப்புறப்படுத்திருக்கிறான்.
எழுதியவர்: ச.துரை
----------------------------------------------
வார்த்தை - ச.துரை கவிதை
----------------
பின்சாயங்காலத்தில்
தானியங்களுக்கு பதிலாக இறந்த
நீளமான வார்த்தையொன்றை சுமந்து வந்தார் என் தந்தை
திண்ணையில் அதை கவிழ்த்தி இறுக்க
கட்டியணைத்து அமர்ந்துகொண்டார்
நாங்கள் எல்லோரும்
ஒரு பெரிய பேரல் நிறைய மஞ்சள்
கலந்த நீரை ஊற்றி கழுவினோம்
வெற்றிலை பாக்கு சாம்பிராணி ஏற்றி வைத்தோம் அண்டைவீட்டாளனுக்கு கூட கேட்காதபடி நாள் முழுக்க அழுதோம்
அன்றிலிருந்தே ஒரு வார்த்தையை
தேடுவதென்பதெனக்கு சுலபமானதாயில்லை
விளைநிலங்களை வற்ற செய்து பன்னாட்டு சந்தைகளில் விலை கொடுத்து வாங்குகிற
மாதிரியாகிவிட்டது
சில வார்த்தைகள் உயரமான
மலைகளின் உச்சிகளிலும் இன்னும்
சில வகைகள் நடுகடலின் திமிங்கலனுடன்
வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன
இவைகளையெல்லாம் கவர்வதென்பது
படு தீவிரமான புணர்தலின் போது
வருகிற ஒற்றைதலைவலியை மாதிரி இருக்கிறது.
-ச.துரை
--------------------------
கூடைக்குள் வைக்கப்படுகிற
ஆப்பிளைப் போல்தான்
ஒவ்வொரு இரவுகளிலும்
உன்னை தொட்டிலுக்குள்
வைப்பேன் மகளே
நீ அத்தனை சிவப்பு
மொழி அத்தனை இனிப்பு
அம்மா உனக்கு அழகான குடுமியிடுவாள்
அது அப்படியே ஆப்பிளின்
காம்பைப்போலவே இருக்கும்.
-ச.துரை
Share