பாலைவனமானதடா
நீரோடும் வைகையிலே நீரு மில்லை
நீள்விழியாள் நெஞ்சத்தில் நேச மில்லை !
காரோடும் வான்வெளியில் காரு மில்லை
காரிகையின் கவின்சிரிப்பில் கனிவு மில்லை !
ஏரோடும் வயலினிலே ஏரு மில்லை
ஏந்திழையாள் இதழ்களிலே ஈர மில்லை !
தேரோடும் வீதியிலே தேரு மில்லை
தேன்மொழியாள் வார்த்தைகளில் தேனு மில்லை !!
பாலைவன மானதடா பாவை யுள்ளம்
பசுமையான நினைவுகளி லில்லை கள்ளம் !
சோலையிலே மதுமலரைத் தென்றல் மோதும்
சுட்டதுபோல் மலரதுவும் உதிர்ந்தே போகும் !
காலையெழும் இளங்கதிரும் கனலைக் கக்கும்
கன்னத்தில் நீருருள வார்த்தைத் திக்கும் !
ஓலைவரும் நாளதனை எண்ணிப் பார்க்கும்
உடைந்தமனம் விதியைநொந்து திட்டித் தீர்க்கும் !!
சியாமளா ராஜசேகர்