இதயம் பேசுகிறேன்

கவிஞர்கள் சங்கமம்

இதயம் பேசுகிறேன்

மனிதர்களே
உங்களில் பலர்
என்னை
கழற்றிவைத்துவிட்டு
ஆடையை அணிந்து
வெளியே செல்கின்றனர்

நெஞ்சிற்கு
ஆடையிட நினைக்கும்
நீங்கள்
இதயத்திற்கு ஆடையிடுவதில்லை

நான்
துடித்தால் தான்
நீங்கள்
நடிக்க முடியும்
நடக்க முடியும்
காலத்தைக்
கடக்க முடியும்
எளியோரை
அடக்க முடியும்

நீங்கள்
சிற்பி ஆகாவிட்டாலும்
பரவாயில்லை
என்னைக்
கல்லாக்காதீர்

உங்கள்
இரத்தத்தை சுத்திகரிக்கும்
என்னால்
என் மீது
உங்களால் ஏற்பட்ட
அழுக்கை சுத்தமாக்க
இயலவில்லை

நீங்கள்
வெற்றி அடையும்போது
கரும்பாகிறேன்
தோல்வி அடையும்போது
நான் இரும்பாகிறேன்
ஆனால்
நீங்களோ என்னை
இரும்புக்கடையில் போடுகிறீர்

என்னுள்
குடியிருந்த அன்பை
வெளியேற்றி விட்டு
அம்பை செலுத்தி
வலியேற்றுகிறீர்

நான்தான்
உங்கள்
காதலியின் வீடு
வஞ்சகங்களின் கூடு

உங்கள்
காதலில் விழுவோர்க்கு
என்னை தானம் செய்யும்
நீங்கள்
உதவி என்று
காலில் விழுவோர்க்கும்
என்னை
தானம் செய்யுங்களேன்

நான்
விரும்பாத பூ
கொழுப்பு
அப் பூ
நிறைந்தால்
ஏற்படுகிறது
என்னுள் அடைப்பு
அது
மரணதேவன்
எனக்கு அளிக்கும்
அழைப்பு

எழுதியவர் : புதுவைக் குமார் (25-May-19, 12:57 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : ithayam pesukiren
பார்வை : 410

மேலே