தொப்புள் கொடி

தாய் தன் குழந்தைக்கு சொல்வது,

எங்கள் உயிரும் மெய்யும் சேர்ந்து எழுதிய கரு எனும் கவிக்கு
என் உடல் வழி நான் அனுப்பிவைத்த காதல் காற்றாளன்.

எனக்குள் இன்னொரு நானுமாய்
உன் வெளி இன்னொரு நீயுமாய்
வாழ்ந்தமைக்கும்,

ஆண்டிடைவெளி உயிரறைத் தோழமையோடு
நமக்குள் நாமுமாய்
வளர்வதற்கும்,

பாசமுமாய் நேசமுமாய் அதையே
சுவாசமுமாய் நீள்வதற்கும்,
காரணப்பொருளாளன்.

உன் கருவோடு உருவாகி
உன் உயிரோடு உறவாகி
கணப்பொழுதிலும் உன்னைக் காத்திட்ட காதலன்.

உந்தித் தள்ளியோ
உயிர் சதைக் கிழித்தோ
உனை அள்ளி எடுக்கையில்
உனை முன் தள்ளி பின் வந்த
உயர் மிகு காவலன்.

உடலுக்குள் உயிர் வைத்து அந்த
உயிருக்குள் உயிர் தைத்த
காலங்காலமாய் கண்டறிய இயலா
வையக விய விந்தையின்
முதற் காரணன்.

உன் வரவை எனக்குணர்த்திய
பிள்ளைப் பேறானவன்.
என் வழி உனைச் சேரும்
தற்காலிகத் தாயானவன்.

என் கர்ப்ப நேசத்தையும்
உன்‌ இரத்தத்தின் சுவாசத்தையும்
ஒருங்கிணைத்து நமக்குணர்த்திய
தூய தூதுவன்.

சத்துக்களின் மொத்தத்தையும்
பித்தத்தின் நீட்சியையும்
பிரித்தாளிய போதகன்.

அறுத்தெறிந்தப் பின்னும் - அவன்
உரை நொடி உயிர்த்திருப்பான்.
அரையில் கட்டினால் அவன்
சீர் நோய் காத்திருப்பான்.

அவனை முறை காத்திட்டால்
ஆயுள் முழுதும் பிணிக்கெல்லாம்
பெரும் பிணக்காவான்.

ஆதலால் அவனே அரும்பெரும் மருந்தாளன்.

படைத்தலும் காத்தலும் அழித்தலும் இறை எனில்
அவன் இறைவனுக்கே இறையாளன்.

அவனே உயிர் தேசத்தின் ஒரே கொடியாளன் - எனும்
தொப்புள் கொடியாவான்.

தாய்மையின் உணர்தலோடு
யாழுமகிழ்.

எழுதியவர் : யாழுமகிழ் (30-May-19, 12:55 am)
சேர்த்தது : yazhu
பார்வை : 1063

மேலே