அன்போடு அறம்வளர ஆள்வானே இன்போடு உயர்வன் இனிது - வாழ்க்கை நிலை, தருமதீபிகை 249
நேரிசை வெண்பா
மக்கள் மனைவி மருவி அயலமர்ந்த
ஒக்கலிவர் எல்லாரும் உள்மகிழப் - பக்கமெங்கும்
அன்போ(டு) அறம்வளர ஆள்வானே எஞ்ஞான்றும்
இன்போ(டு) உயர்வன் இனிது. 249
- வாழ்க்கை நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை: மனைவி மக்கள் ஒக்கல் முதலிய உறவினங்கள் எல்லாம் உள்ளம் மகிழ அயல் எங்கும் தருமம் வளர, மனைவாழ்க்கையை ஆண்டு வருபவனே என்றும் இன்ப நிலையில் நீண்டு திகழ்வன் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
சிறந்த ஆண் மகனாய்ப் பிறந்தவன் தான் புரந்து வரவேண்டிய உரிமைகளையும் கடமைகளையும் இஃது உணர்த்துகின்றது.
தனது மனைவி மக்களோடு மட்டும் அமையாமல் உறவினரையும் பிற இனங்களையும் விரிந்த நோக்குடன் பேண நேர்ந்த பொழுதுதான் ஒருவனுடைய அருந்திறலாண்மையும் பெருந்தகைமையும் திருந்திய பண்பும் சிறந்து திகழ்கின்றன.
தன்னைச் சார்ந்தவர் யாவரும் யாதொரு கவலையும் இன்றிச் சுக சீவிகளாய் வாழ்ந்து வரும்படி சூழ்ந்து பேணுதல் எல்லாரும் உள்மகிழ ஆளுதல் எனப்படுகிறது.
உரிமையாளரைப் பாதுகாப்பதில் அன்பு வளர்கின்றது; அயலவரைப் பேணுவதில் அறம் விளைகின்றது.
ஒருவன் தாளாண்மை தன் வீட்டிற்கும் ஊருக்கும் நாட்டுக்கும் பயனாய்ப் பரந்து விரியின் அவனது ஈடட்மும் தேட்டமும் சிறந்த பண்பாடுடையனவாய் உயர்ந்து யாண்டும் இன்பம் மிகப் பெறுகின்றன.
மனிதன் இன்பத்தையும் உயர்வையுமே எங்கும் விரும்பி நிற்கின்றான். அவை புண்ணிய கருமங்களால் நலங்களைச் செய்து வந்தபோதுதான் அவன் எண்ணியபடியே உயர் நலங்களை எய்த நேர்கின்றான்,
ஒருவனது மனைவாழ்க்கை பலர்க்கும் உபகாரமாய்ச் சிறந்த குறிக்கோளுடன் உயர்ந்து வர வேண்டும்; அவ்வாறு வரின் எவ்வாற்றானும் அவன் திவ்விய நிலைமையை அடைந்து திகழ்வான்.
ஆள்வானே உயர்வான் என்றதனால் ஆளாதவன் இழிவான் என்பது பெறப்பட்டது. மனிதன் செய்வினையால் சிறந்து திகழ்கின்றான். அச்செயல் வழுவின் அவன் உயர்வு அழிகின்றான்.
உரிமையை உணர்ந்து உற்ற கடமையைச் செய்யாதவன் வேறு வழிகளில் வெற்றியாளனாய்த் தோன்றினாலும் அவனை உலகம் குற்றமே கூறும்.
"இல்லாளல் செய்யா இயல்பினான் எவ்வளவு
வல்லாள னாக வளர்ந்தாலும் - தொல்லுலகம்
எள்ளி அவனை இகழும் இழிபழியை
அள்ளி விழுவன் அயர்ந்து.
என்னும் இது ஈண்டு உள்ளி உணர்ந்து கொள்ளவுரியது.
இல்ஆளல் செய்யான் என்பதில் இரு பொருள்கள் மருவியுள்ளன. தன் மனைவியை மாண்புடன் ஆளாதவன்; மனை வாழ்க்கையை மாட்சியுறப் பேணாதவன் எனக் காணலாகும்.
அகத்தில் உள்ளதை அன்புடன் போற்றி ஆதரியாதவன் புறத்தில் பல காரியங்களுக்குத் தலைவனாய்ப் பிலுக்கித் திரிந்தாலும் அவன் பிழைபாடுடையவனாய் இழிவே அடைவான்.
வீட்டை ஆளத் தெரியாதவன் வெளியே மேட்டிமைகள் காட்டி நாட்டில் கோட்டி கொண்டாடி வருதல் பெரிய கோட்டித் தனமேயாகும்; உன்னைத் தாரகமாக நம்பியுள்ள குடியை முன்பு அன்பு செய்து பேணுக; பின்பு ஊருக்கும் உலகுக்கும் உரிய கடமைகளைச் செய்க என்கிறார் இப்பாடலாசிரியர்.
தெய்வம் நம் கையில் கொடுத்த காரியத்தைக் கண்ணும் கருத்துமாய்ச் செய்துவரின் எண்ணி எடுத்த புண்ணியங்கள் யாவும் இனிது செய்தபடியாம். உரியது புரிய அரியன அமையும்.
தன்னைக் கருதியுள்ள குடும்பத்தை இடும்பைகள் யாதும் அணுகாதபடி உரிமையுடன் போற்றுக; உலக நலன்களையும் கவனித்து உயர்வினை ஆற்றுக என்பது கருத்து.