கடனும் இரப்பும் வறுமை ஈன்ற உடனுறை மக்கள் – கடன், தருமதீபிகை 260
நேரிசை வெண்பா
கடனும் இரப்பும் கடுவறுமை ஈன்ற
உடனுறை மக்களாய் ஓர்க; – மடமிகுந்து
தொட்டாய் அவற்றைத் தொலைந்தாய்; துயரத்துட்
பட்டாய் பரிந்து பதைத்து. 260
-கடன், தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
கடனும் யாசகமும் கொடிய வறுமையின் குட்டிகளெனத் தெரிந்து கொள்; கெடுதல் அளிக்கும் அவைகளைச் சோம்பலினாலும் அறிவின்மையினாலும் மேற்கொண்டாயானால், மிகவும் அல்லல் பட்டு உன் இனிய வாழ்க்கையைத் தொலைத்தவனாகிறாய். துயரத்தில் ஆழ்ந்து மிகவும் துன்பத்தில் வருத்தப்பட்டு உழல்வாய்.
கடன் கோடல் இழிவானது எனவும், அப்பழி நிலையில் இழியலாகாது என்று முந்தைய பாடல்களில் உரைத்து, இப்பாடலில் அவற்றோடு இரத்தலின் இழிவையும் எடுத்து உரைக்கிறார்.
பிறரிடம் திரும்பத் தருவதாகப் பொருள்களை இரவலாக வாங்கிக் கொள்வது கடன்; மீண்டும் தராதபடி கேட்டு வாங்கிக் கொள்வது இரப்பு;
பொருள் இல்லாமை காரணமாக இந்நிலை ஏற்படுகிறது; எனவே, கடனும் யாசகமும் கொடிய வறுமையின் குட்டிகளென உருவகம் பெற்றன. வறுமையை விட அதன் குட்டிகளான கடனும், யாசகமும் தீயவை.
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். 796 நட்பாராய்தல்
வறுமையுற்ற போதுதான் உறவினர் மற்றும் நண்பரின் தன்மை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. வறுமை கொடியதெனினும், அந்தச் சமயங்களில் அடக்கம், அமைதி, பணிவு, தெய்வ சிந்தனை முதலியவற்றால் மனதை ஒருமுகப் படுத்தவேண்டும்.
கடன் மானத்தைக் கெடுக்கும்; மரபைக் குலைக்கும்; இரப்பு ஈனத்தை விளைக்கும்; இழிவைக் கொடுக்கும்; யாரொருவனும் கடன் வாங்காமலும், பிறரிடம் கையேந்தாமலும் இழிவான இன்னிலைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.