உற்ற குடியை உயர்த்திக் கொற்றமுடன் நிற்கும் குலமகன் - வாழ்க்கை நிலை, தருமதீபிகை 250

நேரிசை வெண்பா

உற்ற குடியை உறுதி பெறவுயர்த்திக்
கொற்றமுடன் நிற்கும் குலமகனை - மற்றிந்த
ஞாலமெலாம் ஆளும் நலமருளி; நல்லிறைவன்
மேலவனாய்ச் செய்வன் விரைந்து. 250

- வாழ்க்கை நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தான் உரிமையாகப் பிறந்த குடியை உறுதிபெற உயர்த்தித் தலைமையாகச் செய்தருளும் குலமகனை இறைவன் உலகம் எல்லாம் ஆளும்படி பெருமை செய்தருளும். இது, குடியை ஆள்பவன் படியை ஆள்வான் என்கின்றது.

தன்னைத் தலைவனாகப் பெற்ற குடும்பத்தை உறுதி பெற உயர்த்தலாவது பொருள் புகழ்களால் தலைமையாக்கி என்றும்.எவரும் மதித்து வரும்படி தன்குடியை நன்கு நிலைபெறச் செய்தலை உற்ற குடி என்றது.

கரும வீரனாய் நின்று யாண்டும் சலியாமல் முயன்று தன் குடியை உயர்த்திக் காரிய சித்தி பெற்றுள்ளமையால் வெற்றியாளனாய் அவன் வியந்து போற்ற நேர்ந்தான். கொற்றம் - வெற்றி

சிறந்த ஆண்மகனாய் விளங்கி வருவதை குலமகன் என்றது. தான் பிறந்த குடி உயர்ந்து திகழ முயன்று வந்தவனாதலால் குலமகன் என உலகம் கொண்டாட அவன் உயர்ந்து நின்றான்.

சேர்ந்த குடும்பத்தை நன்கு பேணி உயர் நிலையில் செய்த அவனை அனைவரும் உவந்து கொள்கின்றார்; அதனால், பதவியில் உயர்கின்றான்; உதவிகள் வளர்கின்றன.

அவனது மேனிலையை நினைந்து மனைவாழ்வை இனிது பேணினவன் பின்பு மாநிலம் ஆளவும் நேர்வன் என்றது.

இறை என்பது கடவுளையும் அரசனையும் குறித்துவரும் இருபொருள் ஒருசொல்; நாம் தெரிந்து எல்லார்க்கும் நன்மை செய்யும் தன்மையே இறைமையின் உரிமையாதலால் நல்இறை என வந்தது. முறை செய்பவனை இறைவன் நிறை செய்கின்றான்.

தன் வீட்டை இனிது பேணி வந்தவன் நாட்டையும் நன்கு பாதுகாப்பான் என்று கருதிக் தன் ஆட்சியில் சிறந்த பதவியை உதவி அரசன் அவனை விழைந்து ஆதரித்து வருவான்.

மனையாளனது வினை ஆண்மையை மதியுடையார் எவரும் மதித்து மகிழ்கின்றார். கரும நிலையில் உயர்ந்தவன் தரும நிலையிலும் உயர்ந்து பெருமை மிகப் பெறுகின்றான்.

இவ் வினையாளனைக் கடவுளும் கனிந்து நோக்கி உலகம் ஆளும் தலைமையை அவனுக்கு உவந்து அருளுகின்றார்.

"ஞாலம் எல்லாம் ஆளும் நலம் அருளி இறைவன் மேலவனாய்ச் செய்வான்' என்றதனால் மனை வாழ்வைப் புனிதமாக நடத்தினவனது கண்ணியமும் புண்ணியப் பேறும் இனிது புலனாம்.

உற்ற வாழ்வை எவ்வழியும் புனிதமாகப் பேணி மனிதன் மகிமையுடன் ஒழுக வேண்டும் என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jun-19, 10:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே