எங்கோ படித்த கதை

03.04.1998

நான் எழுதிய இந்த கதை ஏதோ ஒன்றை எனக்கு நினைவு செய்கிறது. அது முன்பே எழுதிய ஒரு கதையின் வாசிப்போ அல்லது பார்த்த ஒரு படத்தின் தாக்கமோ இருக்கலாம். உதவ வர வேண்டும்.

இந்த மெயில் பார்த்தவுடன் கண்ணனுக்கு போன் செய்தேன். நாளை மாலையில் கண்டிப்பாக வருகிறேன்.

நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். முப்பது வருடங்களுக்கு மேலும் இந்த அன்பு தொடர்கிறது.


04.04.1998

மாலை. கண்ணன் வீடு. நான் அவன் மற்றும் இதை வாசிக்கும் நீங்கள்.

அந்த கதையை படித்தபோது எனக்கு ஒன்றும் அதில் பிற பாதிப்பு தெரியவில்லை.

இருபது வருடங்களுக்கு முன் ஒருவன் மனைவி கொலை செய்யப்படுகிறாள். அதை துப்பறிந்து கண்டுபிடிக்க வரும் நபரை குழப்பி சாட்சியங்கள் வெகுவாக மறைக்கப்பட்டு இறுதியில் நியாயம் கிடைக்காமலும் முடிந்து போகிறது.

இருபது ஆண்டுகளுக்கு பின்னும் அப்படியே கிடக்கிறது அந்த வழக்கு. கதையும் அப்படியே முடிகிறது.

கொலைக்கதைகள் திரைப்படங்கள் எதனிலும் தப்பாது வரும் பற்பல அதே சங்கதிகள் உத்திகள் இதனிலும் உண்டு. உண்டு என்பதால்தான் எங்கோ படித்த நினைவு போலும்.

கண்ணா....இது புதுசு இல்லை. இருந்தாலும் பல்ப் பிக்ஸன் இல்லை.

நீ சொன்னா சரி..

முழு கற்பனைதானே இந்த கதை.

அப்படி தெரியலை. மின்னாடி படிச்ச பேப்பர் நியூஸ் வச்சும் கூட ஒருவேளை இதை நான் எழுதியிருக்க கூடும். இல்லை...கேள்விப்பட்ட ஒரு சம்பவம்...சரியா கண்டுபிடிக்க முடியலை.

அப்போ அனுப்ப வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும். பின்னாடி பார்ப்போம்.

சரி.

என்ன சாப்பிடலாம்.

உடுப்பி போகலாம். ஜெயா எங்கே கண்ணா?

அவ சித்தி வீட்டுக்கு போறேன் னு சொன்னா...

போய்ட்டு வரட்டும்.

கண்ணனுக்கு குழந்தைகள் இல்லை.
மருத்துவ ரீதியில் முயற்சிக்க விருப்பம் இல்லாது இருந்தனர் இருவரும்.

07.04.1998

தொலைபேசியில் அழைத்தேன்.

கண்ணா...

சொல்லுடா என்ன விஷயம்?

ஒரு ட்ரக்கிங் ப்ரோக்ராம். போலாமா?

என்னிக்கு?

அடுத்த வாரம்... மூணாறு பக்கம் டாப் ஹில்ஸ்...முடியுமா?

வித் பிளசர்...

சரி நாளைக்கு வீட்டுக்கு வரேன் கண்ணா நேரில் பேசி கொள்வோம்.

ஒரு நிமிஷம்டா...

என்ன...

அந்த கதையில் கொலையான பொண்ணு கல்யாணம் ஆகலை னு மாத்தி எழுதிட்டேன். மலையாளத்தில் ட்ரான்ஸ்லட் பண்ணி கௌமுதிக்கு அனுப்பி வச்சுட்டேன்.

ஓ...கிரேட்...நாளைக்கு வரேன்.


11.04.1998

கண்ணனை போனில் அழைத்தபோது அவன் எல்லா ஏற்பாடுகளும் முடித்து தயாராக இருந்தான்.

கண்ணா...டேப்லெட் எதுவும் மறக்காம எடுத்து வச்சுக்கோ...

அவன் சிரித்தான். சாரிடன் போதும் எனக்கு. உனக்குத்தான் முழங்கால் வலி.
ரொம்ப உயரமான மலையா அது...

அப்படி இல்லை. சின்ன குன்றுதான். அதுக்கு மேலே போய்ட்டா ரொம்ப செங்குத்தாக கீழே பார்க்க முடியும். ஆழம்.
கைட் வருவாங்க.

நைஸ் பிளேஸ். மிஸ் பண்ண கூடாதுடா.

அதுக்குத்தான் உன்னை கேக்காமலே உன் பேர் குடுத்துட்டேன்.

ஜெயா ரொம்ப மிஸ் பண்றா...அவளை கும்பகோணம் சூரியனார் கோவில் போக சொல்லிட்டேன்.

நல்லதாச்சுடா. அவங்களுக்கும் ஒரு பிரேக் வேணும். இந்த வாரம் குஷ்வந்த் சிங் இன்டெர்வியூ பார்த்தியா வீக்லி ல.

இல்லையே.

நாளைக்கி கட் பண்ணி கொண்டு வரேன்.


13.04.1998

மூணாறு

டாப் ஸ்டேஷன்.

ரொம்ப குளிருது இல்ல...

கண்ணா..அந்த ஜெர்கின் போட்டுக்கோ.

மிஸ்ட் எப்படி மூவ் ஆகுது பாரு.
அப்படியே சிறகு பறக்கிற மாதிரி.

கேசவதேவ் கதை ஒன்னு நினைவுக்கு வருது கண்ணா...

போன வாரம் நம்பியோட கவிதை ஒன்னு வந்திருந்தது தெரியுமா...

பாத்தேன். ஆறு வரியில் என்ன ஒரு சாத்யமின்மை...

கீழே பாரு கண்ணா...எத்தனை ஆழம்..

இதுதான் இயற்கை எங்கே இருக்கோமோ அதற்கு எதிர்ப்பக்கம் அழகை வாரி வழங்கிட்டு இங்கே வாயேன் னு கொஞ்சும். அந்த காமிராவை கொடு.

இங்கே இருந்து எடு கண்ணா..

இரு வரேன்.

அந்த கல் மேல் ஏறி நின்னுக்கோ...

சரி...

நல்லா போகஸ் பண்ணு...

பண்றேண்டா...

அப்போதுதான் அந்த தேள் கல் அடியில் இருந்து வெளியேறி வர "கண்ணா கீழே தேள்..பெரிய தேள்...

எங்கடா...

நான் கல்லை உதைக்கவும் அவன் தடுமாறும் போதுதான் கைட் பெரிதாய் கத்தினார்.

சார்ர்ர்.....

கண்ணன் கொஞ்சம் கொஞ்சமாய் வேகமாய் கீழே போய் கொண்டே இருந்தான்.நிற்காமல்...

17.04.1998.

நாளைக்கும் அலுவலகத்தில் விடுமுறை கேட்டு இருந்தேன். மேசையின் எதிரில்
குஷ்வந்த் பேட்டி கிழிக்கப்பட்டு இருந்தது.
கண்ணனுக்கு தந்திருக்க வேண்டிய ஒன்று.
கைட் அந்த தேள் அத்தனை விஷம் கொண்டது இல்லை. நீங்கள் இருவரும்
இப்படி பயந்து போய் இருக்க கூடாது என்றார்.

அந்த கல்லை உதைக்க அத்தனை பலம் எங்கிருந்து வந்தது என்பது இன்றுவரை
புரியவேயில்லை.

கண்ணா....

18.04.1998.

போன் அலுவலகத்தில் இருந்து.

மேனேஜர்.

நாளைக்கும் நீங்க லீவ்தானே

ஆமாம் சார். நான் லெட்டர் குடுத்துட்டு வந்தேன்.

ஓ..பார்த்தேன்...உங்கள் நண்பருக்கு இப்படி ஆனது கஷ்டம்தான். நாளைக்கு அவருக்கு காரியங்களா...

இல்லை சார்...
என் மனைவிக்குதான். இருபத்தி ஒண்ணாம் வருஷ காரியம்.

போனை வைத்தபோது வாசலில் ஜெயா நின்றிருந்தாள்.

எழுதியவர் : ஸ்பரிசன் (6-Jun-19, 11:37 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 202

மேலே