நூறுக்கு நடுவில்

......................... காலை எட்டு மணிக்கு காரியாலயத்தின் கேட் கதவைத் திறந்து வைத்தது அந்த உருவம். "டாக் டாக்" என்ற சீரான நடையுடன் வராண்டாவில் நடந்து எல்லா அறைக் கதவுகளையும் திறந்து வைத்த பின்னர் அங்கிருந்த நாற்காலியில் இரண்டு கால்களை நீட்டிக் கொண்டு உட்கார்ந்த அந்த உருவத்தின் அடையாளம் 0076 என்பது. நான்கு நிமிடங்கள் உட்கார்ந்து விட்டு சார்ஜ் ஸ்டேஷன் எனப்படும் மின்னோட்ட முனையத்துக்குச் சென்றது. அங்கு எல்லாவற்றையும் ஒரு தடவைக்கு நான்கு தடவை சரி பார்த்து வைத்துவிட்டு தனக்கு ஒதுக்கப்பட்ட சிற்றறைக்குள் புகுந்து கொண்டது.

..................... ஒன்பது மணிக்கு வந்த காமாட்சி தமிழ்ப் பாட்டுப் பாடிக் கொண்டே பரத நாட்டியம் ஆடியபடி முழு காரியாலயத்தையும் சுத்தம் செய்தாள். “ஓகோ இன்று திங்கட்கிழமையா..!” என்று நினைத்துக் கொண்டது 0076. திங்கட்கிழமையானால் தமிழ்ப் பாட்டும் பரத நாட்டியமும் ஆடிக் கொண்டே காரியாலயத்தை சுத்தம் செய்வாள் காமாட்சி. செவ்வாய்க் கிழமைக்கு தெலுங்குப் பாட்டும் குச்சுப்புடியும். புதன் கிழமை பங்க்ரா நடனமும் பஞ்சாபி பாடலும். இப்படி ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு ஆடல் பாடல் அவளது வழக்கம்.

மானிட்டரில் ஏதோ சத்தம் வர, வெளியே ஓடியது 0076. காமாட்சி தடுக்கி கீழே விழுந்திருந்தாள். அவளை எழுப்பி உட்கார வைத்தது 0076.

பத்து மணிக்கு மானேஜர் நமசிவாயம் தமது சகாக்கள் சூழ உள்ளே வந்தார். 0076 போய் வணக்கம் சொன்னது. இடப்பக்கம் 40 டிகிரி கோணத்தில் திரும்பி 5 சென்டிமீட்டர் அளவாய்ப் புன்னகைப்பது அவர் வழக்கம். எகத்தாளமாய்ச் சிரித்து வெடுக்கென்று போனார் அவர். தலைமை எழுத்தர் ஏதோ கோப்பு பற்றி தொணதொணத்துக் கொண்டே பின்னால் நடந்தார்.

காரியதரிசி மல்லிகாவின் பச்சைப் பசேல் என்று செழித்த உடம்பில் வெண் தழும்பாய் இருந்த ஒன்றை 0076 கவனித்தது.

0076 தனது சிற்றறைக்குப் போய் சில விசைகளை முடுக்கியது. திரையில் 0075 தெரிந்தது.

“ ஏம்ப்பா 0075, என்னப்பா ஆச்சு? அந்த ஆபிஸ் பெருக்கற காமாட்சி ரோபோ படி தடுக்கி திரும்பத் திரும்ப கீழே விழுது. இந்த மானேஜர் ரோபோ ராட்சசன் மாதிரி போகுது. கிளார்க் ரோபோ ஆபிசுக்கு வெளியே ஃபைலைப் பத்தி பேசுது... மல்லிகா ரோபோவோட ரெக்ஸின் தோல் பிய்ஞ்சிருக்கு...! ”

0075 தேநீர்க் கோப்பையும் கையுமாகத் தெரிந்தது. “ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மின்னல் தாக்கி வோல்டேஜ் கொஞ்சம் அதிகமாயிடுச்சி.. அதான்.. நீ போயி கேபிள் ஏதும் எரிஞ்சிருந்தா வேற மாத்திடு... சரியாயிடும்.. ” 0075 சொல்லியது.

“ ஹூம்...! நூத்தி இருபத்தேழு ரோபோக்கள் வேலை செய்யற இடத்துல நானும் நீயும் மட்டும்தான் மனுசன். நமக்கு நம்பரு... அதுங்களுக்குப் பேரு... ! ரோபோக்களுக்கு நட்டு மாட்டவும் ஒயரைச் செருகவும் மட்டும் மனுசப் பயக.. ! "

“ காலம் மாறிடுச்சில்ல.. இது ரெண்டாயிரத்தி நூத்தி பத்தொன்பதாம் வருசமாச்சே... சீக்கிரம் போ.. சூப்பர்வைசர் ரோபோ வந்தா சம்பளம் கட் பண்ணிடும்... ”

“ போறேன்...! போய்த் தொலையறேன்...! ” 0076 ஸ்பானரைத் தூக்கிக்கொண்டு போனது.

பகல் பதினோரு மணிக்கு மின்னோட்ட முனையமெங்கும் சார்ஜரை தங்கள் தலையில் செருகியபடி சக்தி எடுத்துக் கொள்ளும் ரோபோக்களின் மெல்லிய சிரிப்புச் சத்தம் கேட்டது. 0076 இயந்திரத் தனமாக தேநீரையும் பிஸ்கெட்டையும் சாப்பிட்டது. அதற்கும் சக்தி வேண்டுமல்லவா..?

..........................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (6-Jun-19, 1:05 pm)
Tanglish : NOORUKKU naduvil
பார்வை : 195

மேலே