அளிவந்தார் பூங்கோதாய் - ஏலாதி 1

கீழேயுள்ள பாடலின் மூன்றாவது, நான்காவது அடிகளில் இடையின எதுகைகள் (அ'ளி'வந்தார், வ'ழி'வந்தார்) அமைந்த இருவிகற்ப நேரிசை வெண்பா

சென்ற புகழ்செல்வ மீக்கூற்றஞ் சேவகம்
நின்ற நிலைகல்வி வள்ளன்மை - என்றும்
அளிவந்தார் பூங்கோதா யாறு மறையின்
வழிவந்தார் கண்ணே வனப்பு. 1 ஏலாதி

அளி
1. Bee, beetle; வண்டு (திருவாச. 6, 10)

அழி:
Beetle; வண்டு. அழிமல்கு பூம்புனலும் (தேவா 78, 3)

அளிவந்தார் பூங்கோதாய் - அளி வந்து ஆர் பூங்கோதாய் - வண்டுகள் வந்து ஆரவாரம் செய்யும் பூக்களை யணிந்த கூந்தலையுடைய பெண்ணே! என்று பொருள்.

பொருளுரை:

வண்டுகள் வந்து ஆரவாரம் செய்யும் பூக்களை யணிந்த கூந்தலையுடைய பெண்ணே!யாவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட புகழும், செல்வமும், பெருந்தகைமையாக மதிக்கப்படும் சொல்லும், நின்ற நிலையினின்றும் வழுவாத ஆண்மையும், கல்வியறிவும், ஈகைத் தன்மையும் ஆகிய இவ்வாறு இயல்புகளும் உயர்மரபு வழிப் பிறந்து திருநான்மறை வழியில் ஒழுகுபவரிடத்திலேயே எந்நாளும் அழகாவனவாம்.

உரைநடைப் பகுதியில் இப்பாடல் கீழேயுள்ளவாறு தரப்பட்டு, பொருளுரையும் இதற்கேற்றபடி தரப்பட்டிருக்கிறது.

சென்ற புகழ்செல்வ மீக்கூற்றஞ் சேவகம்
நின்ற நிலைகல்வி வள்ளன்மை - என்றும்
வழிவந்தார் பூங்கோதா யாறு மறையின்
வழிவந்தார் கண்ணே வனப்பு. 1 ஏலாதி (உரைநடைப் பகுதி)

பாடல் பகுதியில் உள்ள வெண்பாவே சரியாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jun-19, 6:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

சிறந்த கட்டுரைகள்

மேலே