மானம் அழிய வருமிரவை யாவரே ஈனமுறக் கொள்வர் இசைந்து - இரப்பு, தருமதீபிகை 269

நேரிசை வெண்பா

உள்ளம் குலைய உறுதி நலனழிய
எள்ளல் இளிவெல்லாம் ஏறிவரத் - தள்ளரிய
மானம் அழிய வருமிரவை யாவரே
ஈனமுறக் கொள்வர் இசைந்து. 269

- இரப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உள்ளம் நிலை குலைய, உறுதி நலன் ஒழிய, இழிவுகள் பல விளைய, அரிய மானம் அழிய வருகின்ற இரவினை ஞானமுடைய மனிதர் யாண்டும் கொள்ளார் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் இரவால் நேரும் இளிவு நிலைகளை உணர்த்துகின்றது.

பிறரிடம் ஏதேனும் பெற விரும்பி ஒருவன் அவரை நாடிச் செல்லும் பொழுது அவன் உள்ளம் துடிக்கும்: "அவர் வீட்டில் இருப்பாரா? இருந்தாலும் கேட்டதைக் கொடுப்பாரா? இல்லை என்று சொல்வி விடுவாரா? அவ்வாறு தள்ளிவிடின் அது எவ்வளவு இளிவு! வேறு எவரிடம் செல்வது? யாது செய்வது? ' என இவ்வாறு பல பல எண்ணி நெஞ்சம் நிலை குலைவானாதலால் உள்ளம் குலைய என இரவலனது அல்லல் நிலை அறிய வந்தது.

ஊக்கம் உறுதி முதலிய ஆண்மைத் தன்மைகளும், மேன்மை நிலைகளும் எரிபட்ட பஞ்சு போல் இ்ரப்பதால் அழிபட்டு ஒழிவதால் இரவலன் எளிய பஞ்சையாய் இழி மகனாகின்றான்.

ஈயென்(று) இரவெழுந்தான் எண்சாணும் ஓர்சாணாய்ப்
போயிழிந்து புன்மை புகும்.

என்றமையால் இரவின் இளிவான புலை நிலை எளிது தெளிவாம்.

நெடிய திருமாலும் மாவலியிடம் இரவினை நச்சி வந்தமையினாலேதான் சிறிய குறள் வடிவாய்க் குறுக நேர்ந்தார் என்பர்.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

ஈசனாம் மாயனும் இரவை எண்ணவே
கூசியோர் குறளெனக் குன்ற நேர்ந்தனன்;
யாசகம் என்பதை யாவர் தீண்டினும்
நீசமே செய்திழி நிலையில் ஆழ்த்துமே.

உள்ளம் குலைந்து உடல் குன்றி இரந்து நின்ற வாமனன் மாவலியின் தாரை நீர் கைபட்டவுடனே வானுற வளர்ந்தான்.

கருதிய பொருள் மானம் அழியாமல் வந்தமையால் அம்மகிழ்ச்சியால் உயர்ந்தான்; அதிலிருந்துதான் தானம் தருபவர் நீர் வார்த்து உதவுவது என்னும் நிலைமை நேர்ந்தது.

இரவால் கருகி மறுகிய உயிர்ப் பதைப்பை நீக்கவே அந்த ஈகை நீர் வாகை செய்து வந்துள்ளது எனக் கவிகள் ஓகை செய்துள்ளனர்.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

ஒளிமுகம் இழப்பவந்(து) உற்ற நாணமீக்
கிளர்தர இல்எனக் கிளர்க்கும் மூர்ச்சனை
தெளிதர முகத்தினில் தெளித்தற்(கு) அன்றுகொல்
நளிபுனல் பொருளொடு நல்கு கின்றதே? – நைடதம்

இல்லை என்று சொல்லி இரக்குங்கால் மனிதன் உயிர் துடித்து மூர்ச்சித்து விழுகின்றான்; அந்த மயக்கத்தை நீக்கி அவனுக்குக் தெளிவு உண்டாக்கவே அருளுடையார் பொருளோடு நீரையும் தெளிக்கின்றார் என அதிவீரராம பாண்டியன் இதில் குறித்திருக்கும் அழகைக் கூர்ந்து நோக்குக. இரவின் பரிதாபக் கொடுமையை எவ்வளவு வினோதமாக இது விளக்கியுள்ளது!

இரவு மானக்கேடானதால் அதனை நினைத்தாலும் நல்ல உயிர்களும் உள்ளங்களும் பரிந்து பதைக்க நேர்கின்றன. யாரிடமும் யாண்டும் யாதும் இரவாதீர்கள் என மேலோர்கள் வேண்டி நிற்கின்றார்.

கரவா(து) உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும். 1061 இரவச்சம்

நேரிசை வெண்பா

கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை; - இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு. 305 இரவச்சம், நாலடியார்

அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

கண்ணிற் சிறந்தார் தம்மிடத்தும்
..காழ்த்த மானம் கெடநாவால்
பண்ணற் குரிய அறம்குறித்தும்
..படர்ந்தொன்(று) இரவார் பெருமையினால்
எண்ணிற் சிறந்தார் முயற்சியினால்
..ஏலா உப்பில் வறும்புற்கை
உண்ணற்(கு) அமைந்த(து) அமைந்ததென
..உவப்பர் ஏம கண்டனே. - விநாயக புராணம்

'கண்ணினும் இனியர் ஆகிக் கரவிலா உள்ளத் தோடும்
எண்ணிய(து) அளிப்பார் கண்ணும் இரவச்சம் உறுவர்’, - மெய்ஞ்ஞான விளக்கம்

கண் அனைய இனிய உரிமையாளரிடத்தும் யாதும் இரக்கலாகாதென இவை உணர்த்தியுள்ளன.

இரவாமை கோடி உறும் என்ற அருமைத் திருவாக்கின் உட்குறிப்பை ஊன்றி உணர வேண்டும். மானம் அழியாமல், மரியாதை குன்றாமல், மேன்மை குறையாமல் மேவி நிற்றலால் அந்த ஆன்ம ஊதியங்களையெல்லாம் கோடி என்னும் ஒரு சொல்லால் குறிப்பித்தருளினார். அற்பத்தை நாடி இ்ரவாது கைவிடின் அநேக கோடிகள் உனக்கு உறவாகியுள்ளன.

உரவோர் என்கை இரவா(து) இருத்தல்.
தோழ னோடும் ஏழைமை பேசேல்.

யாசகம் கூடாது என ஒளவையார் இவ்வாறு குறித்திருக்கிறார்.

இரத்தலின் ஊஉங்கு இளிவர வில்லை. – முதுமொழிக்காஞ்சி

இரவைப் போல் இளிவானது யாதுமில்லை எனச் சங்கப்புலவர் கூடலூர்க்கிழார் இங்ஙனம் உரைத்துள்ளார்.

நளன் அரசிழந்து வனம் போக நேர்ந்தபொழுது தனது தந்தையினுடைய அரண்மனையில் தங்கிருக்கும்படி தமயந்தி வேண்டினாள். அப்போது அந்த அருமை மனைவியை நோக்கி அம்மன்னன் சொன்னது அடியில் வருவது;

தமயந்திக்கு நளன் கூறுதல்
நேரிசை வெண்பா

சினக்கதிர்வேல் கண்மடவாய்! செல்வர்பாற் சென்றீ
எனக்கென்னும் இம்மாற்றங் கண்டாய் - தனக்குரிய
தானம் துடைத்துத் தருமத்தை வேர்பறித்து
மானம் துடைப்பதோர் வாள். 249 நளவெண்பா

என்ன துன்பம் தேர்ந்தாலும் பிறரிடம் இரந்து வாழாமையே உயர்ந்த மனிதத் தன்மையாம் என்பதை இதனால் அறிந்து கொள்கின்றோம்.

அருமை பெருமைகளை இரவு அறவே அழித்து விடுதலின் அச்சிறுமையை அறிஞர் இங்ஙனம் அஞ்சியிருக்கிறார். பழியை விலகி நல்வழியில் நடக்க வேண்டும் என்று கவிராஜ பண்டிதர் அறிவுறுத்துகிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jun-19, 9:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே