அடக்கமுடைமை - கலி விருத்தம்

வெண்டலை பயிலும் கலிவிருத்தம்

ஆக்கப் படுக்கும்; அருந்தளைவாய்ப் பெய்விக்கும்;
போக்கப் படுக்கும்; புலைநரகத்(து) உய்விக்கும்;
காக்கப் படுவன இந்திரியம் ஐந்தினும்
நாக்கல்ல(து) இல்லை நனிபேணு(ம்) ஆறே. 13

- அடக்கமுடைமை, வளையாபதி

பொருளுரை:

ஒருவனுடைய நாவினில் தோன்றும் சொல் அவனைச் செல்வம் முதலிய பேறுகள் உடையவனாக உயர்த்தவும் செய்யும். அல்லது பிழைப்பதற்கரிய கடுமையான சிறைக்குள் செலுத்தினாலும் செலுத்தும். இன்பம் தரக்கூடிய போக பூமியுள் பிறந்து அனுபவிக்கவும் முடியும்; அல்லது இழிவுடைய நரகத்தில் செலுத்தவும் செய்யும்;

ஆதலால் மனிதராகப் பிறந்தவர்கள் தம் அறிவாலும், திறமையாலும் காத்தற்குரியனவாகிய பொறிகள் ஐந்தனுள்ளும் மிகவும் விழிப்புடனிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நாக்கு அல்லாது வேறொன்றுமில்லை எனப்படுகிறது.

விளக்கம்:

மக்களுக்கு ஆக்கந்தருவதும், அவரைச் சிறைக்குள் புகுவிப்பதும் நாவே; வாழ்வில் உயர்வைத் தருவதும் அதுவே, நரகத்தில் வீழ்த்துவதும் அதுவே. ஆதலால், மெய் முதலிய ஐந்து வகைப் பொறிகளுள் நாவே பெரிதும் விழிப்புடன் பேண வேண்டும்.

இக்கருத்தை வலியுறுத்தி வள்ளுவர் இல்லறவியலில், அடக்கமுடைமை என்னும் அதிகாரத்தில்,

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 127

’காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்கவேண்டும்; காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்’ என்று குறிப்பிடுகிறார்.

எண்ணிறந்த அறிவுரைகள் நா நலமும் தீங்கும் பற்றி நல்லிசைப் புலவர்களால் சொல்லப்பட்டிருப்பது அந்நா காக்கும் காப்பே தலை என்பதனை உணர்த்துகின்றன.

இனி, இச் செய்யுளில் நாவினை ஐம்பொறிகளுள் ஒன்றென்றலின், நாவினால் நுகரும் சுவை கருதி ஊன் முதலிய நுகர்ந்து நரகத்து வீழ்தலும், நல்லுணவே உண்டு துறக்கம் புகுதலும் பிறவும் நாவால் விளையும் தீமையும், நலங்களுமே ஆவதால் இவ்வாற்றானும் நாவடக்கம் இன்றியமையாதது என்று உணரவேண்டும்.

கருத்துரை:

மெய்யன் நடராஜ் • 24-Jun-2015 10:46 am

நேரிசை வெண்பா

அடக்கம் அடைந்தே அடங்குகின்ற நாவின்
அடக்கம் புகன்ற தருமை. -அடங்கா(து)
உதிர்க்கும் அவச்சொல் விடுத்து நிதமும்
புதுச்சொல் பகர்வோம் புரிந்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-19, 9:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே