பின்தொடரும் இரவு
"சும்மாவே எத்தனை நாளுக்கு இருக்க போறே. வெறும் லட்சியம் அது இதுன்னு. பேசாம தமிழனுக்கு தமிழன் கட்சிலே போய் சேரு".
சித்தப்பா இப்படி சொல்வது ஒன்றும் புதிதல்ல. இருந்தும் இன்று எனக்கும் அப்படித்தான் தோன்றியது.
அங்கே நம்மாளு ஜனசங்கர் னு ஒருத்தர் இருக்கார். பெரும் படிப்பாளி. போய் நான் அனுப்பிச்சேன்னு சொல்லு...
அந்த அலுவலகம் எனப்பட்ட இடத்தில் நான் நுழைந்தபோது பாட்டில் பாட்டிலாய் குவிந்து கிடந்தது. அது வெறும் அறைதான். ஒரு கட்சிக்கொடி இருந்தது.
கட்சியின் தலைவர் கொஞ்ச நாள் சினிமாவில் க்ளாப் அடித்து கொண்டு இருந்தார். தமிழ் ஞானம் அபாரம். எப்படியோ கட்சி ஆரம்பித்து விட்டார்.
எப்படி ஆரம்பித்து இருப்பார்? அதுவும் முப்பத்தைந்து வயதுக்குள்..?
யாருய்யா நீ?
ஜனசங்கர் சாரை பாக்கணும். என் சித்தப்பா...
நீதானா...இப்படி பம்முரே..வா உக்காரு.
சரக்கு அடிப்பியா?
இல்லைங்க. பழக்கம் இல்லை...
கத்துக்க...நீ என்னமோ எழுதுவியாமே?
ஆமாங்க..
கம்முனிஸ்ட் கட்சிக்கு போறியா..நம்மாளு ஒருத்தன் இருக்கான்...சொல்லி விடறேன்.
இல்லீங்க..சித்தப்பா...
போனை அழுத்தி ஜனம் யாரிடமோ பேசிவிட்டு மீண்டும் என் பக்கம் திரும்பி யோவ் நம்ம கட்சிலே நீ இலக்கிய அணி மாவட்ட செயலாளர். சந்தோசமா?
பகீர்ரென்று இருந்தது.
ரொம்ப சந்தோசங்க...
இப்போ எலெக்ஷன்ல யாருக்கு வோட்டு போட்டே?
பிஜேபிக்கு.
ஏன் அங்கே போட்டே?
போர்ப்ஸ் ல ஒரு ஆர்டிக்ள் படிச்சேன். GST ல எதிர்காலம் எப்படி இருக்கும்னு...
உடனே போட்டியாக்கும்..
ம்ம்ஹ்.
அப்போ கார்டியன்ல மோடியை கிழிச்சானுங்க அது படிச்சா காங்கிரஸ் ல போட்டு இருப்பியா..?
இனிமே நீங்க சொல்றதுக்கு போடறேன்.
நான் என்ன சொல்றது? மாநிலத்தில் யாருக்கு போடுவே ஏடிஎம்கே தானே..?
இல்லீங்க...டிஎம்கே.
அது மட்டும் ஏன் அப்படி....நீ பாப்பார பையன்தானே...புளுகிரியா?
இல்லீங்க. எங்க மாமா அந்த கட்சிக்கு மட்டும்தான் போடுவார். கலைஞர் ஐயரை திட்டினாலும் அத்தைக்கு போன வேலை கெடைச்சதே அவர்னாலனு சொல்வார்.
உண்மைதான்யா..நெறிய செஞ்சிருக்கார்.
வெளிய இந்த பசங்களுக்கு வேண்டி திட்டினாலும் நல்ல பணக்கார ஐயருக்கிட்டே விசுவாசமா இருப்பார்.
நம்ம கொள்கை, என் வேலை இதெல்லாம் எப்படிங்க?
தம்பி..கொள்கைனு ஒண்ணும் இல்லை.
தமிழனை காக்க உயிர் கூட தரணும். சும்மா வாயிலதான் சொல்லறோம். அப்பறம் தேர்தல் வரும்போது தலைமை பேரம் பேசி ஒரு கட்சியின் பெயரை சொல்லும். அதுக்கு சார்பா பேசிட்டு இருந்தா போதும். ஆட்சிக்கு எல்லாம் வர மாட்டோம். அதுனால அப்படியே ஓட்டிட்டு காலத்தை முடிச்சுக்க வேண்டியதுதான்.
அவ்ளோதானா?
பின்னே...
இந்த அநியாயத்தை தட்டி கேக்கறது. மக்கள் நல்வாழ்வு, ஊழல் ஒழிப்பு...
ஜனம் விழுந்து விழுந்து சிரித்தார்.
எந்த காலத்துல இருக்க நீ...உன் பின்னாடி கிள்ளி பிடிக்க கறி இல்ல. இதை நீ எப்படி செய்வே?
நம்ம தலைவர் டீவி, மேடைன்னு தொண்டை கிழிய இதைத்தானே கத்துறார்...
தம்பி...தமிழ்நாட்ல டிஎம்கே ஏடிஎம்கே மாத்தி மாத்தி வருதே...அவங்க இதை ஒழிச்சாங்களா? மிடாஸ் னு ஒரு சரக்கு ஆலை இருக்கே. அதை ஏன் ரெய்டு விட்டும் மூடலை னு தெரியுமா?
கொஞ்சம் புத்தகத்தில் படிச்சு இருக்கேன்.
படிப்பே...ஒண்ணு அவாள் எழுதும். ஒண்ணு மீசை எழுதும். ரெண்டையும் வச்சு குண்டி தொடைக்கலாம். அவ்வளவுதான்.
புரிய மாட்டேங்குது சார்.
இப்படி உக்காரும். பாட்டிலை திறந்து நிரப்பி கொண்டார்.
நாட்ல மொத்தம் எத்தனை கட்சி இருக்கு?
ரொம்ப...
உனக்கு தெரிஞ்சது சொல்லு..
காங்கிரஸ்,பிஜேபி,பகுஜன்,சமாஜ்வாடி..
ம்ம்ம்...இங்கே?
அதான் பாமாகா தேமுதிக இன்னும்...
இது எல்லாமும் இன்னும் விட்டு போன எல்லாமும் ஒரே கட்சின்னு சொல்றேன்.
அது எப்படிங்க?
அதான் ஜனநாயகம்.
போங்க...டயர்நக்கினு சொன்னவர் எதை நக்கிட்டு கூட்டு வச்சார்னு யூட்டூயூபில் கேட்ட மாதிரியே பேசறீங்க.
அதான் தம்பி...இந்த யூட்டூயூப் மீம்ஸ் எல்லாம் அரைநிஜார் பசங்க பாத்து நாட்டை மாத்த போறோம்னு வாட்ஸாப்பு அது இதிலெல்லாம் எழுதிட்டு இருப்பானுங்க. படிச்சி அழிச்சிடு. நாம வேற மாதிரி பாக்கோணும்.
அது எப்படிங்க?
நம்ம ஆளுங்களை வச்சே பேசுவோமா?
ஏடிஎம்கே டிஎம்கே பத்தியா...
எல்லோரையும் சேத்துதான் தம்பி. உன் லெவலில் ஆரம்பிக்கலாம்.
பீடிய உருட்டி பிடிச்சு ஒருத்தர் பெரிய நடிகர் ஆயிட்டாரே...அவரு வீட்டுக்கு போய் நீ மாட்டுக்கறி கேட்டா என்ன ஆகும்?
என்ன ஆகும்?
பொலந்துருவங்க.
சரி. அதுக்கு...
அவரை வச்சு படம் எடுத்த இயக்குனர் இப்போ யாரோ ஓல்ட் மன்னரை பேசி முன் ஜாமினுக்கு திரியறாரே அவரு...மாட்டுக்கறி பெருமையெல்லாம் டீவியில் பேசினார் இல்ல...கேட்டியா?
கேட்டேன்..அதுக்கு..
இந்த பீடி வீட்டுக்கு அந்த கருப்பு போய் உக்காந்து மாட்டுக்கறி கேட்டா என்ன ஆகும்?
பொலந்துருவங்க...மாட்டாங்களா?
அடி விழும். அங்கே கருப்பு அப்படி பேசாது.
வேற மாதிரி பேசும். பீடியும் வேற மாதிரி பேசும்.
இதுல என்னங்க இருக்கு...
இதான் பாலிட்டிக்ஸ்.
இதை விட கேவலமான விஷயம் எல்லாம் படிச்சிருக்கேன்.
நெறைய படிச்சிருக்கியா தம்பி?
ரொம்ப ரொம்ப படிச்சிருக்கேன். என் நண்பர்கள், இலக்கியவட்டம் எல்லாம் குழுவா உக்கார்ந்து பேசி இருக்கோம்.
பேசி என்ன புடுங்க முடிஞ்சது?
கொஞ்சம் கொஞ்சமா விழிப்பு எல்லார் கிட்டையும் வர ஆரம்பிச்சிடுச்சுங்க..
அப்போ அதை முடிக்க என்ன செய்வோம் தெரியுமா? ஒரே வார்த்தை போதும்..
என்னங்க அது?
பார்ப்பனீயம்.
பெரியார் காலத்தில் இருந்து சொல்லிட்டே வறோம். நீயும் சொல்லணும். மேடையில்...
ஒரு ஜாதியை நானே மட்டமா பேசணுமா?
இப்போ திக காரங்களே பேசறது இல்ல.
அந்த காலத்துக்கு அப்படி பேசினோம். இப்போ வெறும் பார்ப்பனீயம் வார்த்தை மட்டும் போதும்.
அதவச்சு?
அதுதான் எல்லாம். நம்ம ஒரு திட்டம் போட்டு துட்டு அடிக்க முடியலைனா எதிர்க்கட்சி ஒரு நல்ல திட்டம் கொண்டு வந்தா ரெண்டுக்கும் இந்த வார்த்தையை யூஸ் பண்ணிக்கணும். அப்போ ஐயரை மொத்தமா நாடு கடத்த வேண்டியதுதானே னு யாரும் கேக்க மாட்டாங்க. நாங்களும் அதுக்கு விட மாட்டோம்.
எங்க நோக்கமெல்லாம் சிங்கத்தை சிறுத்தை சொரண்ட கூடாது. அவ்வளவுதான்.
இப்போ வட இந்திய பார்ப்பனீய ஆதிக்கம் னு சொல்லி எழுதறாங்களே?
எழுதட்டும். அவனுக்கு புரியவா போகுது?
உ.பி காரனை பாத்து இருக்கியா? ஓங்கி மிதிச்சான்னா கொட்டை தெறிச்சிரும்.
ஏன்? பாகிஸ்தான்காரன் அவனைத்தான் குறி வைப்பான். நம்மகிட்ட வர நேரம் ஆகும்.
நாமளும் முஸ்லிம்கிட்ட மாமன் மச்சான்னு பழகிட்டு வரோம். எதுக்கு?
ஓட்டுக்குத்தான். அப்போ நார்த் இண்டியாவை என்ன பேசினாலும் ஆளரவங்க அங்கே போய் காலில் விழுந்து சரி பண்ணிடுங்க.
சரிங்க...ஆனா மாமன் மச்சான்னு பொண்ணு கேட்டு பொண்ணு கொடுக்க முடியுமா? சகோதரர்னு சொல்லிடலாமே.
அது டெல்லி சொல்லும். நாம இப்படி சொல்லணும். இங்கே நமக்குள்ளே பொண்ணு எடுத்தாக்கூடியும் வெட்டுவோம்.
அதுவும் பார்ப்பனீய சதியா?
அந்த பப்பு வேகலை. ஆதிக்க சாதின்னு சொல்லிட்டாங்க. எதிர்காலத்தில் பாத்துப்போம்.
அப்போ ஊழல் ஒழிப்பாவது செஞ்சா நாடு கொஞ்சம் மாறுமே?
தம்பி...நட்டு, ஸ்க்ரு,கரும்புசக்கை,பழைய பேப்பர்,மாட்டுசாணி..இதுவெல்லாம் என்ன?
ஒருவிதத்தில் கச்சாப்பொருள்.
மக்களும் நமக்கு அப்படித்தான். ஒட்டு போட்டதும் அவங்களோட பொழப்பை பாக்க போயிடுவாங்க. நாம நம்ம பொழப்பை பாக்க போய்டனும்.
அவங்களும் கேக்க மாட்டாங்க. நாமளும் சொல்லி தரக்கூடாது. அஞ்சு வருஷம் சைலெண்ட்டா பங்கு பிரிக்க ஒரு பிரச்சனையும் வராம பாத்துக்கணும்.
வந்தா..?
களத்தில் இறங்கிடனும். போராட்டம்.
என்ன போராட்டம் பண்ணலாம்?
எதை வச்சும் பண்ணலாம். எவர்க்ரீன் பிரச்சனை. சிலோன் பிரச்சனை. அது தீரவே தீராது.ஸ்டெர்லைட் அது இதுன்னு.
எங்க மக்கள் பிரச்சனை தீரவே தீராதா?
பாவம் இல்லையா அவங்க?
பிரச்சனை தீர்ந்து போய்ட்டா நீ எப்படி பொழைப்பே? ஆயிரம் வருஷம் ஆனாலும் ஜாதி ஒழியாம இருக்க என்ன செய்யணுமோ அதை பெரியார் பண்ணிட்டு போய்ட்டார்.
அவர் என்ன பண்ணினார்?
கடவுள் மறுப்பு போதுமே?
அது எப்டீங்க?
உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
இல்லை.
எனக்கு இருக்கு. மாசிக்கொடைக்கு நான்தான் முன்னாடி நிப்பேன். ஆனா கட்சிக்குள்ளே பேசும்போது பெரியாரை வச்சுதான் பேச ஆரம்பிப்பேன்.
ஊர் மக்கள் எப்படி நம்புவாங்க?
கேம்பலிங்...
கருப்பு தொழில்நுட்பம்..புரியுதா?
புரியலிங்க.
திரைக்கதை. இப்போ புரியுதா?
இலேசா புரியுது.
சினிமா சொன்னவுடனே புரியுது பத்தியா..அதுதான். இப்போ சயின்ஸ் ரொம்ப முன்னாடி போயிடுச்சு தம்பி.
விளக்கி சொல்லுங்க...
சொல்றேன். மனுஷனுக்கு உள்ளே எப்பவும் ரெண்டு கேரக்டர் ஓடும். நல்லவன் கெட்டவன்னு. அதை திட்டமிட்டு அரசியலாக்கிட்டு வந்தா நாம ராஜா...
இதுக்கு படம் காட்ட தெரிஞ்சா போதும்.
அப்பப்ப சில்லறைய வீசிட்டா போதும்.
இந்த தடவை வோட்டுக்கு காசு வாங்கினியா?
எப்பவும் இல்லீங்க..
அப்போ நீ நினைச்சமாதிரி அரசியல் சுத்தம் ஆகி நல்ல நிலைமைக்கு வந்திருச்சா...
அதுவும் இல்லீங்க.
வராது. ஒரு மாவட்ட கலெக்டர் சொத்து விவரத்தை மொத்தமா வெளியிட எவ்ளோ நேரம் ஆகும். அதுவும் ஆதார், பேன் கார்டு வந்த பின்னாடி... வெள்ளை அறிக்கையா வெளியீடு செய்ய எந்த கட்சியாவது சட்டம் போடணுமுன்னு சொல்லி இருக்கா?
இதே மாதிரி பியூன் ல ஆரம்பிச்சு எல்லோருக்கும் போட்டா என்ன ஆவும்?
நல்லாயிருக்குங்க...கேக்கவே...
ஆனா செய்ய மாட்டோம். செய்யவும் விட மாட்டோம்.
இப்படியே போனா நாடு என்ன ஆகும்?
இந்த பத்து நாளா பேப்பரில் என்ன விடாம வந்துட்டு இருக்கு?
குடிநீர் பிரச்சனை...
பொள்ளாச்சி கேஸ்?
அதுபத்தி தெரியலிங்க? கோர்ட்டுக்கு வராங்க போறாங்க போலிருக்கு.
நீ வேணும்னா அதை போய் விசாரிக்க வேண்டியதுதானே?
அது எப்டீங்க...என் அக்கா தங்கையா மாட்டி இருக்கு. நொம்பலப்பட்டவன் பாத்துக்குவான். எனக்கு என்ன?
இதான் தம்பி. தமிழனுக்கு தமிழன். இப்போ புரிஞ்சுதா?
கொஞ்சமா புரியுதுங்க.
போக போக புரியும். ஆனா ஒண்ணு. படிச்சவன், படிக்காதவன்,ஏழை பணக்காரன், ஜாதி மதம் எதுவும் நமக்கு கிடையாது. மக்கள்நலம் மட்டும்.
இப்போ நல்லா புரியுதுங்க.
இப்போ நாட்டு நிலமை சரி இல்லை. அதுக்கு காரணம்?
பார்ப்பனீயம்.
க்ரேட். ஊருக்கு ரெண்டு மூணு ஐயர்தான் இருப்பான். அதை மக்களுக்கு யோசிக்க விட கூடாது. அட யோசிக்கவும் மாட்டான்.
ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் கூட்டு போட்டு சாராயத்தை எதுக்கு ஊத்தி விட்டுட்டு இருக்கு.
முன்னாடி பதினோரு மணி காட்சின்னு ஊருக்கு ஊர் செக்ஸ் படம் ஓட்டிட்டு மக்களை பைத்தியமாக்கி ஓட்டை வாங்கி வள்ளல்னு பேர் வாங்கி செத்த கதையெல்லாம் நிறைய இருக்கு. அப்போ
இன்டர்நெட் இல்லை. இப்போ வந்தாச்சு.
அதை பயன்படுத்திக்கணும்.
நாமளே கருத்து போட்டு நாமளே ஜாதி மதம் வச்சு திட்டணும். அப்பறம் பாக்கிற கிறுக்கன் தானா எழுத ஆரம்பிப்பான்.
இப்போ நல்லா புரியுதுங்க.
எந்த கட்சியும் நமக்கு பகை கிடையாது. எந்த ஜாதி மதமும் இனமும் மொழியும் பகை கிடையாது. உண்மையை சொன்னா நம்ம மக்கள் எல்லோரும் ரொம்ப நல்லவங்க. இந்த ஒண்ணுதான் நமக்கு பலம். ஜனநாயகத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ய முடியாது. பேசி பேசி வருவதற்குள் காலம் ஓடிடும்.
இரண்டாயிர வருட அடிமைன்னு ஒருத்தனை கிள்ளி விடணும். தீவிரவாதி னு ஒருத்தனை கிள்ளி விடணும். ரௌடிப்பயல் னு ஒருத்தனை ஏத்தி விடணும். ஒவ்வொரு ஜாதி மதத்துக்கும் ஒரு மஹாத்மாவை பரப்பி விடணும்.
இப்படி மக்களை ரெண்டுங்கெட்டானா வச்சிட்டு இருந்தா போதும். அவன் மூல எரிச்சலுக்கு கூட அடுத்த ஜாதி மதத்தை முறைச்சு பாக்கணும். இது இருக்கிற வரைக்கும் எந்த கட்சியும் நம்ம கட்சிதான்.
ஒரே ஒரு சந்தேகம்...
என்ன?
மக்கள் முன்ன மாதிரி இல்லை. படிக்க ஆரம்பிச்சு தெளிவா இருக்காங்க. இன்னும் எதிர்காலத்தில் நல்லா படிச்சு நம்மளை கேள்வி கேட்டா...
தம்பி...இப்போ படிச்சவன் கொடுத்த ஐடியாவை கேட்டுத்தான் ரொம்ப கட்சி இப்படி இருக்கு. நீ ரொம்ப படிச்சவந்தான். இப்போ எங்கே வந்து நிக்கிறே?
இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை.
________________________________________