வாழைப்பூ வடை

க்ர்ரார்க்க்.....

மூக்குக்கண்ணாடியை தேடி எடுத்து அவசரமாய் போட்டுகொண்டு சத்தம் வந்த திசையை கூர்ந்து பார்த்தேன்.

அப்போது மணி நள்ளிரவு தாண்டி இருக்கும்.

அறையின் கடும் இருட்டிலும் என்னால்
மசமசவென இருக்கும் அந்த உருவத்தை
பார்க்க முடிந்தது.

சுமார் இரண்டு அடி இருக்கும். தவளை.
இரண்டு கால்களால் நின்று கொண்டு என் மேசையை இழுத்து விட்டது.

இரண்டு அடி நீளமான தவளை. விளக்கை போடவில்லை. நான் படுக்கையை விட்டு
எழுந்து நின்று கொண்டு கண் கசக்கி உற்றுப்பார்த்தேன். நிச்சயம் மூன்று அடி இருக்கும்.

கொஞ்சம் வேகமாய் நடந்து ஒரே பாய்ச்சலில் ஓங்கி ஒரு உதை விட்டால் சுருண்டு விடும் என்பதை நன்கு தீர்மானித்து கொள்ளும் முன்னரே என் வீரமும் வேகமும் காற்றில் கலந்து கால்கள் இரண்டும் வெடவெடவென நடுங்கிக்கொண்டே இருந்தது.

அது என்னை கவனிக்காது மேசையில் இருந்து ஃபைலை இழுத்து வைத்து புரட்டிக்கொண்டே இருந்தது. ஒரு தவளை ஃபைலில் என்ன தேடுகிறது?

நான் ஒரு எழுத்தாளன். சமீபத்தில் ஒரே சமயத்தில் ஐந்து தொடர்கதைகளை எழுதி கொண்டிருந்தேன். அதுதான் அந்த கோப்பில் இருக்கிறது. எங்கே கிழித்து தொலைத்து விடுமோ என்ற அச்சத்தில் விளக்கை போட்டேன்.

அது தவளை அல்ல. குட்டிச்சாத்தான்.

இப்போது எனக்கு புரிந்து விட்டது.


வேளுக்குடி மாந்த்ரீகன் ஏவி விட்டது அது.
நான்தான் ஏவி விட சொன்னேன்.

உங்களுக்கும் விளக்க வேண்டும்.

பெரிதாய் ஒன்றும் இல்லை. ஒரு தொடர்கதை எழுதி கொண்டிருந்தேன்.

ஒரு இணைய இதழுக்கு...அதை பத்து பேர் மட்டுமே படிப்பார்கள். ரெண்டு நாள் கழித்து பார்த்தால் அறுபது பேர் என்று  ஸ்டேட்டடிக்ஸ் காட்டும். 

இந்த சிற்றின்பத்தில் மனதை பறி கொடுத்து ராப்பகலாய் எழுதிக்கொண்டு வந்தேன். மேலும் சொல்லும்படி வேலை வெட்டி என்று பெரிதாய் ஒன்றும் எனக்கு இல்லை.

அப்படி எழுதிக்கொண்டிருந்த ஒரு கதையில்தான் ஐந்து கதாபாத்திரங்கள், பதினாறு சம்பவங்கள் இருபத்தியாறு ட்வீஸ்ட்கள் வைத்து பாதி கதை தாண்டியதும் எனக்கே குழம்பி விட்டது. அந்த வேலை இந்த வேலை என்று இணையத்தில் அறிவிப்பை போட்டுவிட்டு மண்டையை குடைந்து கொண்டாலும் ஒன்றும் தோன்றவில்லை.

சரி...புதன் கிரகம் மக்கர் செய்கிறார் போலும் என்று ஒரு ஜோசிய இதழை வாங்கி பரிகாரம் செய்ய ஐடியா கிடைக்கலாம் என படிக்கும்போது கண்ணில் தட்டுப்பட்டதுதான் வேளுக்குடி.

குட்டிச்சாத்தானை ஏவி எதையும் சாதிக்க முடியும் என்று வந்த விளம்பரத்தினை பார்த்து நேரில் சென்றேன்.

விஷயத்தை விலாவாரியாக காதில் கூறியதும் மானாவாரியாக வாயால் திட்ட ஆரம்பித்தார்.

செலவைப்பத்தி கவலையில்லை என்று கூறியதும் ஒளி பொங்கும் முகத்துடன் சோழிகள் உருட்டி கணக்குகள் பார்த்தார்.

அவர் முகம் இருண்டது.

அமைதியோடு யோசித்தார். பின் என் பக்கம் திரும்பி பார்த்து விட்டு தியானம் செய்ய ஆரம்பித்தார். பின் விழித்தார்.

"தம்பி, நாட்டில் இருக்கிற பேய் பிசாசுகள், சாத்தான்,பூதம் எல்லாமே ரொம்ப பிஸி. யாரோ இணையத்தில் பேய் கதை போட்டி நடத்தறதுனாலே எல்லாமே அலறி அடிச்சு நாட்டை விட்டு போயிடுச்சு...இப்போ வெயில் வேற ஜாஸ்தி. ஒண்ணும் வராது போல இருக்கே" என்று கூறவும்... திரும்பவும் சத்தமாய் "செலவைப்பத்தி கவலையில்லை" என்றேன்.

சரி...நீ வீட்டுக்கு போ...ஒரு குட்டிச்சாத்தானை ஏவி விடறேன். அதுவே எல்லாம் முடிச்சு தரும். அவர் இப்படி சொன்னதும் உயிர் வந்தது. பேசிய தொகையை கொடுத்ததும் இன்னும் ஆயிரம் குடுத்துட்டு போங்க என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.GST தொகை அது.

அந்த குட்டிச்சாத்தான் இதுதான்.

ஃபைலை விரித்து வைத்து படித்து கொண்டிருந்தது.

ஹாய் என்றேன்.

நிமிர்ந்து பார்த்துவிட்டு பின் மீண்டும் படிக்க ஆரம்பித்தது.

அந்த கதை இல்ல..பச்சை கலர் ஃபைல் என்றேன்.

உடனே ரோஸ் நிறத்தை மூடி பச்சையை எடுத்து வைத்து கொண்டது.

காரியத்தில் கண்ணாக இருந்தது. தவளை மாதிரி எல்லாம் இல்லை. நல்ல அழகாக இருந்தது. வெல்வெட் தோல். சின்ன அழகான தொப்பை. கால் மட்டும் கோழி கால் மாதிரி இருந்தது. தொட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது. மேலே ஒரு விரலை வைத்ததும் காற்றுக்குள் விரல்  குழிந்து குலைந்தது.

அதற்கு திட உருவம் இல்லை. ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை. அதை தெரிந்து கொள்ளும் ஆசையை அடக்க முடியாது மெல்ல உடம்பு முழுக்க வரி வரியாக பார்க்க ஆரம்பித்தேன்.

இவ்ளோ கேவலமா நீ....என்று சைத்தான் என்னை பார்த்து ஆரம்பிக்க...

நான் என் மனவோட்டத்தை புரிந்து கொண்டதோ என்று பயந்து போய்
" இல்ல  இல்லை எங்கேயும் நான் பாக்கலை"  என்று உலற ஆரம்பித்தேன்.

யோவ்..உன் கதை என்னய்யா இவ்ளோ கேவலமா இருக்கு. ஒரு அஞ்சு பேர வச்சுக்கிட்டு என்னமோ கி.மு கி.பி னு எழுதிட்டே போறே. இதை எல்லாம் எவன்யா படிப்பான்? உனுக்கு அஞ்சு ஸ்டார் வேற... அடுத்தவனை பத்தி கொஞ்சமாச்சும் நினச்சு பாத்து எழுதவே மாட்டியா? எகிறிக்கொண்டே போனது.

நள்ளிரவில் இந்த சனியன் இப்படி திட்டி படுத்துகிறதே என்ற வெறியுடன் அதுக்குத்தான் உன்னை ஹைர் பண்ணி கூட்டிட்டு வந்தேன். GST வேற கொடுத்து இருக்கேன். என்று சொல்லிவிட்டு பின்
எதற்கும் இருக்கட்டுமே என்று சற்று குரலை உயர்த்தி மரியாதையா முடிச்சு கொடுத்திட்டு போகலைனா... என்றும் சேர்த்து சொல்லி வைத்தேன்.

என்னது மரியாதையா..? அந்த வேளுக்குடிக்கு என்னை அடிமைன்னு நினைச்சியா...உன் சங்கை கடிக்கவா என்று கேட்டதும் தொப்பலாகி விட்டேன்.

இது பெண் அல்ல என்பது புரிந்தது.

இல்லை சார்..பாத்து பண்ணிடுங்க னு சொன்னேன் என்று பைனல் இயர் ஸ்டுடெண்ட் மொக்கை ப்ராஜெக்ட்க்கு வாத்தியிடம் பல்லைக்காட்டி கெஞ்சுவது போல கெஞ்சினேன்.

சரி கதையை சொல்லு என்றதும் ஆரம்பத்தில் இருந்து எழுதியவரை சொல்லி முடித்தேன்.

அப்பறம்....என்றது.

அப்பறம்தாங்க எழுத தெரியலை என்றேன்.

ரெண்டு கேரக்டர் ரொம்ப யோக்கியம். நல்லவங்க...நேர்மையானவங்க.

ஆமாங்க...

அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் வீட்டுல ஆடும் இன்னொருத்தர் வீட்டுல மாடும் இருக்கே...

ஆமாங்க... ஆடு மேய்க்க ஒருத்தர் வருவார். மாடு மேய்க்க ஒருத்தர் வருவார்.
அவங்களோட நேர்மைக்கு கிடைச்ச மரியாதை அந்த மேய்க்க வருபவர்கள்.

அப்படியா யாரு அந்த துணை பாத்திரம்?

ஒருத்தர் கிருஷ்ணர் ஒருத்தர் ஜீசஸ்
என்றதும் சாத்தான் ஜிவ்வென்று பல்டி அடித்து பரணுக்குள் பாய்ந்து விட்டது.

சார் சார் என்று கத்தினேன்.

கொஞ்ச நேரம் கழித்து தலையை நீட்டி பார்த்தது. மெல்ல இறங்கியது.

யோவ் உன் ட்விஸ்ட்ல தீய வைக்க...இனி அந்த பேரை எல்லாம் சொல்லாதே.

அதன் வீக்னெஸ் பாய்ண்டை குறித்து கொண்டு அமைதியாக இருந்தேன்.

சைத்தான் ரொம்ப யோசித்து கொண்டே இருந்தது.

நல்லவங்க கெட்டவங்க சண்டை என்னிக்கும் தீராது. பேசாம எல்லோரையும் கெட்டவன் ஆக்கிட்டா வேலை முடிஞ்சுடும்.

இவ்வளவு நாள் ரீடர்ஸ் நம்பி படிச்சி இருக்காங்க இப்போ போய் நாம கெட்டவன் னு சொன்னா...

சரி....வேற மாதிரி மாத்தி சொல்வோம்.
இப்போ நீ செய்யறேனா இந்த அஞ்சு பேரையும் ஆளுக்கு ஒரு கட்சியில் சேர்த்து விடு...தன்னைப்போல் அடிச்சிட்டு சாவானுங்க.

எந்த கட்சியில் சேர்க்க?

ஆளுக்கு ஒரு கட்சி...வேலை முடிஞ்சிடும்.

அப்படி பார்த்தாலும் இவங்க மாமன் மச்சான் மாதிரி அண்ணன் தம்பி மாதிரி நாளைக்கு காது குத்து சீக்வென்ஸ் வச்சா எலும்பு திங்க ஒண்ணு கூடி வந்துருவாங்க.
கதை படுத்திடும். ரீடர்ஸ் ரொம்ப ஓட்டுவாங்க என்றேன்.

யாருயா ஒன்னை ஓட்டுறது? என்றது.

ரெண்டு பேர் சார்...ஒருத்தர் பங்களூர் இன்னொருத்தர் ஏற்காடு மெட்றாஸ் மதுரை னு பொய் சொல்றார்...

சொல்லிட்டே இல்ல...தூக்கிடுவோம்...

என் கதே?

உன் கதேதான் ஒண்ணுக்கும் சரிப்பட்டு வர மாட்டேங்குதே...சரி எதுனாச்சும் படம் பாத்து இருக்கியா? அதை சொருகி விட்ரலாம்.

எல்லா படத்தோட கதையை கலந்துதான் இதை எழுதினேன் என்றேன்.

நினெச்சேன்யா...கி.மு வில் மாட்ரிக்ஸ் னு நீ எழுதினத்தை படிச்சப்பவே சந்தேகம்...ஏன்யா சொந்தமா யோசிக்கவே மாட்டியா...?

எனக்கு அதற்குமேல் பொறுக்க முடியவில்லை. அழுகை வந்து விட்டது.

யோவ்...வாய மூடு. இப்போ எதுக்கு ஒப்பாரி..சரி..இப்போ இந்த நாட்டுல ஒன்னை உருப்படாம ஆக்கணும் னா அரசியல் பண்ணனும் அல்லது பேசணும் அல்லது அரசியல் தெரிஞ்சுக்கணும்.

இந்த அஞ்சு கேரெக்டரையும் அஞ்சு கட்சிக்கு சேர்த்து விட்டு அஞ்சு மாநிலத்துக்கு அனுப்பி விட்டுடு. கதை கந்தல் ஆகிடும்.

இப்போது புரிந்து விட்டது.

சார்...என்று சாத்தானின் கையை தேடினேன். தவளைக்கைகள். பற்றவே முடியவில்லை.

யோவ் என்னை டச் பண்ணினா ஷாக் அடிக்கும் அதுதான் இப்படி காத்து மாதிரி கண்ணுக்கு மட்டும் தெரியறேன். விஷயத்தை மட்டும் சொல்லு. என்றது.

போதும் சார்..நான் இனி கதையை முடிச்சுக்குவேன் என்றேன்.

அப்போ போறேன்...என்றதும் என்னமாச்சும் சாப்பிட்டுவிட்டு போகணும் என்றேன். தமிழன் பண்பாடு. கேட்கணும். கேட்டேன்.

நாலு படி ஆட்டு ரத்தம் தருவியா என்றது.

இல்லீங்க நமக்கு அது சரிப்படாது வேணும்னா இப்போ கீழ வாழைப்பூ வடை இருக்கு கொண்டு வரவா?

இல்ல ஒரு போட்டிக்கு எழுத வாழைப்பூ வடாம் செஞ்சு பார்த்தேன்...அது கொண்டு வரவா என்றேன்.

யாரும் இல்லை.

தெறித்து ஓடி இருக்கும்.


------------------------------------------------------------

எழுதியவர் : ஸ்பரிசன் (19-Jun-19, 5:51 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : vaalaippoo vadai
பார்வை : 188

மேலே