ஈற்றடிக்கு வெண்பா

வேலை நிறுத்தமென வீணாய்க் கழிக்காமல்
ஆலைப் பணியாற்றி(டு) அன்றாடம் - வேலையெதும்
இல்லையேல் பட்டினியால் இன்னுயிர்க்கா பத்ததனால்
நில்லா(து) இயங்கிடுவாய் நீ.

ஊருக்குச் சென்றுவர உன்தயவும் தேவைதான்
நேரும் விபத்துக்கு நீபொறுப்பா? - பேருந்தே!
மல்லுகட் டாமலே மாநகர வீதிகளில்
நில்லா(து) இயங்கிடுவாய் நீ.

வதைக்கும் வலியால் வதங்கி விடாதே
பதமாய் மருத்துவம் பார்ப்பேன்! - இதயமே!
வெல்வதற்குன் நற்றுணை வேண்டும்! துடிப்பொடு
நில்லா(து) இயங்கிடுவாய் நீ.

தாவிக் குதித்துத் தலையாட்டும் பொம்மையே
சாவி கொடுத்ததும் சாய்ந்ததேன்? - ஓவியமாய்
மெல்லவெழு! பேத்தி விளையாட வந்திடுமுன்
நில்லா(து) இயங்கிடுவாய் நீ.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Jun-19, 2:12 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 57

மேலே