காதலுக்கு முடிசூட வா

காதலுக்கு முடிசூட வா...!

இதயச்சாளரம் வழியே
இப்பிரபஞ்சத்தை துளாவுகையில்
எங்கும் நீயே கண்படுகிறாய்.....
நினைவு உப்பரிகையில் நித்தம் உலவி
நிலைதடுமாறிட மோதுகிறாய்...,,
நாசியில் சுவாசமாய் பிரவேசித்து
நேசத்தில் உயிரை குடிக்கின்றாய்...

காளிங்கன் உச்சந்தலையில் நர்த்தனமாடிய கண்ணனாய்
களிகாதலில் ஆலிங்கனம் செய்கிறாய்......
கட்டாய் ஐம்புலன்களையும் ஆள்கிறாய்.....

நடமாடி மொழிந்திடும் அதரங்கள் கூட்டி
தடமாகி முத்தங்கள் பொழிந்திடுவாய் கோடி
வடமாகி வாலிபத் தேரை நகர்த்திட
சுடரேந்தும் விளக்காகி ஒளியேற்ற வா...

வேரூன்றிய விருட்சக் கிளையில் இணங்கி இணைந்த கூட்டுக்குள் பறவைகளாய்....
காரிருட்டில் உரிமைகொண்டு காதல்களம் கண்டிட
தோரணங்கள் ஊரெங்கும் கட்டி
ஆரணங்கு எனக்கு மாலை சூடவா...?

காலம் பருவத்தைக் களவாடும் முன்னே
கன்னியென் உருவத்தைக் கரைத்துண்ணும் முன்னே
கடிவாளப் பாதையை தகர்த்தெறிந்து வா....
கனிந்த நம் காதலுக்கு முடிசூட வா...

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (22-Jun-19, 9:34 pm)
பார்வை : 72

மேலே