இழிபழி எய்தாமல் உள்ளம் கருதி ஒழுகுவார் - மேன்மை, தருமதீபிகை 298

நேரிசை வெண்பா

எள்ளள வேனும் இழிபழி எய்தாமல்
உள்ளம் கருதி ஒழுகுவார் - எள்ளும்
குறைசிறிது நேர்ந்தால் குலைகுலைந்து சோர்வார்
நிறைபெருகி நின்றார் நிலை. 298

- மேன்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

குண நலங்கள் நிறைந்த மேலோர் எவ்வகையானும் யாதொரு பழியும் அடையாமல் தன் உள்ளத்தைச் செவ்வையாகப் பாதுகாத்து ஒழுகுவார்; ஏதேனும் ஒரு சிறுகுறை நேர்ந்தாலும் பெரிதும் வருந்தி உளைந்து அயர்வார் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், உயர் தலைமையின் இயல்பு கூறுகின்றது.

இழிவான எண்ணங்களும் செயல்களும் பழிகளாய் வெளி வருகின்றன. அவை எவ்வழியும் யாதும் நம்மை அணுகாமல் பாதுகாப்பவரே நல்ல மேன்மக்களாகின்றனர்.

உயிரைப் பழுதுபடுத்தி விடுதலால் பழியைக் கொடிய விடமாகக் கருதி ஒழிக்க வேண்டும். வசை ஒழியவே இசை விளையும்.

புகழ் அமுதம் அனையது; உயிர்க்கு ஊதியமாய் உய்தி தருவது. இன்ப நிலையமான அதனை மருவி வாழ்பவரே எங்கும் மாண்புடையராய் மகிமையுறுகின்றனர்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

வானமும் திசையும் பொங்கும்
..புகழ்மையும், வானம் பேணும்
ஞானமும் பொறையும் குன்றா
..நன்றியும் ஊக்கப் பாடும்
தானமும் கொடையும் அன்பும்
..வரிசையும் தகைசால் நண்பும்
மானமும் தவம்செய்(து) ஈன்ற
..மகவுபோல் வளர்க்க வல்லார்.

என்றபடியே குணநலங்களை நல்லார் பேணி வருகின்றனர்.

குறை சிறிது நேர்ந்தால் குலைகுலைந்து சோர்வார். என்றது மேலோரது நிலை தெரிய வந்தது. குலை இரண்டனுள் முன்னது உள்ளம்; பின்னது நடுக்கம்.

புகழ் புண்ணியங்களையே யாண்டும் பேணி வருகின்ற கண்ணிய சீலர்கள் பழி தீமைகளைக் காண நேர்ந்தால் நஞ்சைக் கண்டதுபோல் அஞ்சி நடுங்குவர்; ஆகவே அவருடைய நெஞ்சின் தூய்மையும் நீர்மையும் நேர்மையும் நன்கு புலனாம்.

தீவினையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்;
தீவினை என்னும் செருக்கு. 201 தீவினையச்சம்

இழிந்த பழிபாவங்களை அஞ்சுகின்ற அளவே விழுமிய மேன்மை வெளியாகின்றது என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது.

தம்மைப் பாழாக்கி யாண்டும் பழி துயரங்களை விளைக்கின்ற தீய எண்ணங்களை உடைமையால் மனிதர் தீயராய் இழிந்து ஒழிந்து போகின்றார். தூய எண்ணங்களை உடையவர் தூயராய் உயர்ந்து துலங்கி நிற்கின்றார்.

பழிகளைத் தழுவிப் பாழாகாமல் நல்ல வழிகளில் ஒழுகி மாண்புறுக; அதுவே அரிய பிறவியை எய்தி வந்துள்ள உனக்கு உரிய பயனாய் உய்தி புரியும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jun-19, 10:54 am)
பார்வை : 47

சிறந்த கட்டுரைகள்

மேலே