வருங்காலங் கண்டு வரவறிந்து வகையோர்ந்து செய்யும் மதியுடையார் - சீர்மை, தருமதீபிகை 306
நேரிசை வெண்பா
வருங்காலங் கண்டு வரவறிந்து வாழ்வின்
மருங்கான யாவும் மதித்துச் - சுருங்கா
வகையோர்ந்து செய்யும் மதியுடையார் சீரின்
தொகையார்ந்து நின்றார் தொடர்ந்து. 306
- சீர்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
எதிர்கால நிலையை எண்ணி, உரிய வரவின் அளவை உணர்ந்து, மனை வாழ்க்கையின் வகைகளையெல்லாம் நன்கு சிந்தித்து யாண்டும் குறைவுறாமல் கூர்ந்து பேணி வருவோரே தேர்ந்த சீர்மையாளராய்ச் சிறந்து விளங்குவார் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், எதையும் எதிர் நோக்கி வாழ்க என்கின்றது.
மனிதன் சிறந்த மதிநலம் உடையவன்; முன்னும் பின்னும் எண்ணி நோக்கும் இயல்பினன்; இறந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என்னும் கால நிலைகளைக் கருதியுணர்ந்து உறுதி நாடும் நிலையினன்; இத்தகைய உயர்ந்த நிலையை அடைந்திருந்தும் தகுந்த பயனை அடையாமல் அயர்ந்து விடுகின்றான். அவ்வாறு அயர்ந்து வீழாமல் யாண்டும் விழிப்பாய் உயர்ந்து வாழவேண்டும் என இது உணர்த்துகின்றது.
வந்த காலத்தின் அனுபவத்தைக் கொண்டு, பின்பு நேர்கின்ற காலத்தின் நிலைகளை நன்கு தெரிதலை ’வருங் காலம் கண்டு’ என்றது. இங்ஙனம் கருதி வாழ்பவன் வாழ்வு பெரும் பயனுடையதாய் உறுதி மிக அடைகின்றது.
எதிரதாக் காக்கும் அறிவினர்க்(கு) இல்லை
அதிர வருவதோர் நோய். 429 அறிவுடைமை
வருவதை முன் அறிந்து பேணும் அறிவுடையானுக்கு யாதொரு துன்பமும் நேராது; அவன் யாண்டும் மன அமைதியுடன் இனிது வாழ்வான் என்றமையால் கருதி வாழ்வது குடும்ப வாழ்க்கைக்கு எவ்வளவு உறுதியுடையது என்பது உணரலாகும்.
குடிவாழ்க்கையின் பலவகையான நிலைகளை வாழ்வின் மருங்கு என்றது. மருங்கு - பக்கம், ஒழுங்கு.
தந்தை தாயரைப் பேணுதல், வந்த விருந்தினரை உபசரித்தல், மைந்தரை வளர்த்தல், மதி நூல் கற்பித்தல், தொழில் முறையில் நிற்பித்தல், ஊருடன் உழைத்தல், நாடுடன் நயத்தல் முதலாகப் பலவகை நெறிகளிலும் நிலை திரியாமல் நெடிது பேணி வருதல் குடி வாழும் குலமகனுக்கு உரிய கடமையாகும்.
தனக்கு நேர்த்துள்ள வாழ்க்கை வகைகளில் யாதொரு வழுவும் நேராமல் வளமும் வனப்பும் எவ்வழியும் பெருகி வரும்படி செய்து வருவோனே செவ்விய சீர்மையாளனாய்ச் சிறந்து நிற்கின்றான். அந்நிலையினை அடைதல் நிறைபெருந் திருவாம்.
பொருளும் புகழும் குறையாது புரிதலை ’சுருங்கா வகை ஓர்ந்து’ என்றது. செம்மையான நெறிகளில் பண்படுத்தி வாழ்க்கையை உயர்ந்த குறிக்கோளுடன் வளர்த்துவரின் அது சீரிய குடும்பமாய்ச் சிறந்து மிளிர்கின்றது.
தன் மதி நலத்தால் விதி விலக்குகளைக் தெளிந்து உலக ஒழுக்கையும் உணர்ந்து நிலையை உயர்த்தி ஒழுகலே நேரிய சீர்மையாம். செவ்விய ஒழுக்கு எவ்வழியும் இனிமை புரிகின்றது.
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
எவ்வகை உலகத் துள்ளார்
..இயல்புடன் ஒழுகு கின்றார்
அவ்வகை ஒழுக்கின் நின்றே
..அழிவன வருமுன் காத்துத்
தவ்வெனும் பழிபா வங்கள்
..தபுதிஎய் தாமை அஞ்சிச்
செவ்விய நெறியில் நாளும்
..செலுத்துக பொறிகள் ஐந்தும்.
இவ்வாறு நெறிபுரிந்து வாழின் நிலையான புகழும், தலையான இன்பமும் தழைத்து வரும். அவ்வரவுகளை உரிமை செய்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.