நாளை நமதே

==============
கூடுகின்றக் கார்மேகம் கொட்டிவிட மறக்குமெனில்
=குவலயமே பாலைவன மாகும்
நாடுகின்ற மாமழையும் நமக்கின்றிப் போகுமெனில்
=நற்பயிர்க்கு தானிங்கு சேதம்
தேடுகின்ற நிழல்பரப்பி தெருவோரம் நிற்கின்றத்
=திடமா ன மரங்கூட வாடும்
ஓடுகின்ற நதிவற்றி ஊர்முழுதும் பசுமையின்றி
=உரசுமுன்பு தீப்பிடிக்கக் கூடும்.
==
ஆடுவெட்டி மாடுவெட்டி அவசியமே இல்லாமல்
=அத்தனையும் உண்ணுவது போலும்
காடுவெட்டிக் காசாக்கிக் கைக்குள்ளே போடுகின்றக்
=காரியங்கள் விட்டாலே போதும்
பாடுபட்டு உழைப்பதற்குப் பாங்கான நிலைதோன்றி
=பார்மீண்டும் பழையதுபோ லாகும்
நாடுகெட்டுச் சீரழியும் நாசங்கள் இல்லாத
=நாளையிங்கு நமக்காகக் கூடும்
=
= மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-Jul-19, 2:02 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 228

மேலே