கால முரண்பாடு
முப்பது வருடம் முன்
ஆறு மைல் சேரும் வழி கடக்குங்கால்,
பாதி நாள் ஆகும்படி நடக்கும்தான்!
சேறு வயல் வேகும் வெயில் தகிக்குங்கால்,
மீதி நாள் நோகும்படி கடக்காதே!
இருமருங்கிலும் தடி மரங்கள் வரவேற்கும்.
வழி நெடுகிலும் இதமேற்றும் மிதக்காற்று.
தெருவெங்கிலும் விரைவூர்திகள் சொற்பமட்டும்.
விழி இரண்டிலும் பதமேற்றும் பசும்வயல்கள்.
விரைவறியா விந்தை மாந்தர் பெரு வாழ்வுடன்
பெருமனதுடன் சிந்தை தெளிந்து இருந்தாரே!
குறைவறியா எந்தை முன்னோர் விருந்தோம்பலுடன்
அருமனத்துடன் பந்தம் நிறைந்து சிறந்தோரே!
இன்றோ.....
நூறு மைலும் நொடிப்பொழுதோடும்.
கண்டம் கூட விழி சிமிட்டும் பொழுது.
தூர வானம் தொடும் தூரம். மட்டும்.
அண்டம் கூட அடி அளக்கும் தொலைவு.
சுகம் தரும் குளிர் பதன பெட்டி உண்டு.
விரையும் மகிழுந்து விதவிதமாய் இங்கு.
அகம் புறம் மிளிரும் அழுக்கு பட்டு.
கரையும் பனிக்கட்டியாய் அன்பும் பண்பும்.
வேகம் உண்டு தாகம் உண்டு.
வேண்டுமட்டும் பிறர்நலம் தொலைத்தே!
வீரம் உண்டு சாரமும் உண்டு.
தன்னலம் பேண, தரணியை குலைத்தே!
நிறைவறியா குறை மனதுடன் வெந்தவராய்
குறுமனதுடன் நிந்தை மிளிர்ந்து நொந்தனரே!
பகை செறிந்தே பகல் வேட மாந்தரெலாம் .
சிறுமதியுடனே சிந்தை குலைந்து வீழ்ந்தனரே!