ரிலாக்ஸ் ப்ளீஸ்

முன்னாள் ஞாபகம் இந்நாள் வந்தது. இதே தருணம் ஆனால் அனுபவம் வேறு வேறு.

இவ்வமயம் நடக்கக்கூடிய கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எப்படி நிலவியதோ, அதே எதிர்பார்ப்பு தான், 1987 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையிலும்.

ஆறாம் வகுப்பு படித்த அந்த நேரத்தில் கிரிக்கெட்டை வாழ்க்கையாகவே நினைத்துக் கொண்டு சுவாசமாக சுவாசித்ததுண்டு. நேரம், காலம், பொழுது பார்க்காமல் மட்டை, பந்து, பவுலிங், பக்கத்து ஊர்ல மேட்ச் என்று சுற்றிய தருணங்கள். வாழ்க்கையையும், கிரிக்கெட்டையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத பக்குவம். மேட்ச் என்றால் அது இதுன்னு காரணத்தைச் சொல்லி பள்ளிக்கூடத்துக்கு லீவு போட்டு மேட்சை பார்த்து, கரெண்ட் போயிருச்சுன்னா EB காரங்கள கரிச்சுக் கொட்டி ட்ரான்சிஸ்டர் ரேடியோவில கமெண்டரி கேட்டு புளங்காகிதம் அடைந்ததுமுண்டு.

சரி விசயத்துக்கு நேரா வர்றேன். 1987 உலகக் கோப்பையில கபில்தேவின் இந்திய அணியும், கிரஹாம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணியும் இன்றைய நாள் மாதிரியே அரையிறுதியில் மோதின தருணம். 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி 1987-ல் ஜெயிக்கும்கிற எதிர்பார்ப்போட மேட்ச் பார்த்தோம். கிரிக்கெட் மேல பைத்தியமா இருந்த அந்தச் சூழல்ல, போடுற ஒவ்வொரு பந்துலயும் 4, 6 போகணும்னு சொல்லாத வேண்டல்கள் இல்ல. முடிவுல இந்திய தோற்றுப் போகிறது.

தேம்பித் தேம்பி அழுகை. ஒரு நாள் முழுக்க சாப்பிடல. வீட்ல கெஞ்சி கெஞ்சி சாப்பிடுற சொல்றாங்க. ம்ஹூம். அடுத்த நாள் காய்ச்சல். ஒரு வாரம் முழுவதும் அதே நினைப்பு, பேச்சு.

இதே சூழல்தான் இன்றும். ஆனால் மேட்ச் பார்க்க லீவு போடல. ஸ்கோர் அப்போ அப்போ பார்த்துகிட்டாலும் தொடர்ந்து கமெண்ட்ரி பார்க்கல, கேட்கல. இந்திய அணி தோற்றுப் போனது பற்றி உள்ளூர வருத்தம் என்றாலும் மனதளவில் பெரிய பாதிப்பில்லை.

காரணம், நமது மனது பக்குவப் பட்டு விட்டது. விளையாட்டையும், வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்து கொண்டு விட்டது. கிரிக்கெட்டையும் தாண்டி நமக்கான முக்கியத்துவம் என்னவென்று தெரிகிறது. எம் விருப்பமெல்லாம் விளையாட்டை விளையாட்டாக மட்டும் பார்க்க வேண்டும் என்பதே… வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம். விளையாட்டு வீரர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பக்குவம் பெற்றிருப்பார்கள். ஆனால் நமக்குத் தான் மனதுக்குள் வேதனை பெருகும்.

கிரிக்கெட்டை நேசிப்பது போன்றே மற்ற விளையாட்டுக்களையும், அது சார்ந்த விளையாட்டு வீரர்களையும் நாம் நேசிக்கக் கற்றுக் கொள்ளுவோம். குறிப்பாக நம் பாரம்பரிய விளையாட்டுக்களை. மேலும் விளையாட்டுக்களையும் தாண்டி நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விசயங்கள் நிறைய சூழ்ந்துள்ளன. அதிலும் நாட்டம் கொள்ளுதல் வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

ஹீரோ வொர்ஷிஃப் என்று சொல்லப் படக் கூடிய நட்சத்திர துதிபாடல் சினிமாவிலும், விளையாட்டிலும் தேவையா என்பதும் நம் மனதில் எழும் கேள்விக் குறியே.

விளையாட்டை விளையாட்டாகப் பார்ப்போம்.
நிழலை நிழலாகப் பார்ப்போம். நிழல்கள் நிஜமாவதில்லை.

இதே வேளையில் முதல் சுற்றுப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதியில் கடைசி வரை போராடிய விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் பாராட்டுக்குரியவர்களே.

பின் குறிப்பு:
பள்ளி, கல்லூரி காலங்களில் கிரிக்கெட்டை மிக ஈடுபாட்டுடன் விளையாடியதுமன்றி, நடுவராகவும் பணியாற்றிய அனுபவம் நமக்கு உண்டு.

எழுதியவர் : தமிழ் மைந்தன் - ரிச்சர்டு (12-Jul-19, 3:13 am)
Tanglish : relax please
பார்வை : 81

சிறந்த கட்டுரைகள்

மேலே