’மறுசந்திப்பு’ ----------------ஐசக் பாஷவிஸ் சிங்கர்- ---------------------------தமிழாக்கம் டிஏபாரி

தொலைபேசி அடித்ததில் டாக்டர். மேக்ஸ் க்ரீட்சர் விழித்தெழுந்தார். படுக்கையின் அருகே மேசையில் இருந்த கடிகாரம் எட்டு மணிக்கு இன்னும் பதினைந்து நிமிடம் காட்டியது. “இந்த காலை நேரத்தில் யாராக இருக்கும்?” என முனகியவாறே தொலைபேசியை கையில் எடுத்தார். ஒரு பெண்குரல் ஒலித்தது, “டாக்டர் க்ரீட்சர், இந்த நேரத்தில் அழைப்பதற்கு மன்னிக்கவும். ஒருகாலத்தில் உங்கள் அன்புக்குரியவராக இருந்த பெண்மணி இறந்துவிட்டாள். லிஸா நெஸ்ட்லிங்.”



”அடக் கடவுளே!”



”இன்று காலை பதினொரு மணிக்கு இறுதிச் சடங்கு. நீங்கள் அறிந்து கொள்ள விரும்புவீர்கள் என நினைத்தேன்.”



”நீ சொல்வது சரி. தகவலுக்கு மிக்க நன்றி. லிஸா நெஸ்ட்லிங் என் வாழ்வில் பெரும்பங்கு வகித்தவள். நான் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் எனத் தெரிந்து கொள்ளலாமா?”



“அது முக்கியமானதல்ல. உங்கள் இருவரின் பிரிவுக்குப் பிறகு நானும் லிஸாவும் நண்பர்களானோம். வழிபாடு நடைபெறும் இடம் கட்கெஸ்டால்ட்டின் (Gutgestalt’s) இறுதிச்சடங்கு சிற்றாலயம். உங்களுக்கு முகவரி தெரியும்தானே?”



“ஆம், நன்றி.”



அந்த பெண் தொலைபேசியைத் துண்டித்தாள்.



டாக்டர் க்ரீட்சர் சற்றுநேரம் உறைந்த நிலையில் கிடந்தார். அவ்வாறெனில் லிஸா மறைந்துவிட்டாள். அவர்களின் உறவு முறிவுக்குப் பின் அதற்குள் பனிரெண்டு ஆண்டுகள் கடந்துவிட்டிருந்தன. அவள் அவருடைய ப்ரியத்துக்குரிய காதலியாக இருந்தவள். அவர்களது உறவு பதினைந்து ஆண்டுகள் நீடித்தது – இல்லை, பதினைந்தல்ல; பதிமூன்று. கடைசி இரண்டு வருடங்கள் பல்வேறு தவறான புரிதல்கள் மற்றும் முரண்பாடுகளால் நிரம்பியிருந்தன, அக்காலகட்டத்தின் மிகை உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. எந்த ஆற்றல்கள் இக்காதலை கட்டமைத்ததோ அதுவே அதை முற்றாக அழிக்கவும் செய்தது. டாக்டர் க்ரீட்சரும் லிஸாவும் அதன்பின்னர் சந்தித்துக் கொள்ளவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் எழுதிக்கொள்வதுமில்லை. அவள் ஒரு நாடக இயக்குநராக ஆகப் போகிறவனிடம் உறவு கொண்டுள்ளாள் என அவளின் நண்பனொருவன் மூலம் அறிந்து கொண்டார், ஆனால் அவளைப் பற்றி அவர் கேள்விப்பட்டது அது மட்டுமே. லிஸா இன்னமும் நியூ யார்க்கில் இருப்பதுகூட அவருக்குத் தெரியாது.



துயரச் செய்தியின் தாக்கத்தில் மிகுந்த மனவேதனையில் இருந்ததால் உடை மாற்றிக் கொண்டது குறித்தோ அல்லது இறுதிச்சடங்கு ஆலயத்திற்கு வழிகண்டறிந்து சென்றது குறித்தோ டாக்டர் க்ரீட்சரின் நினைவில் சுத்தமாக இல்லை. அங்கு சென்றடைகையில் வீதியில் உள்ள கடிகாரம் ஒன்பது மணிக்கு இன்னும் இருபத்தைந்து நிமிடம் காட்டியது. உள்ளே சென்றதும் வரவேற்பாளர் அவர் மிக முன்னதாகவே வந்துவிட்டதாகக் கூறினாள். பதினொரு மணிக்கு முன்பாக வழிபாடு தொடங்க வாய்ப்பில்லை.



”இப்போது அவளைப் பார்க்க முடியுமா? நான் அவளுடைய மிகநெருங்கிய நண்பன், மேலும்…” மேக்ஸ் க்ரீட்சர் கேட்டார்.



”அவள் தயாராகிவிட்டாளா எனக் கேட்டுப் பார்க்கிறேன்.” அந்த பெண் கதவுக்குப்பின் மறைந்தாள்.



அவள் கூறியதின் அர்த்தம் க்ரீட்சருக்குப் புரிந்தது. இறந்தவர்கள் மிகவிரிவாக ஒழுங்குபடுத்தப்பட்டப் பின்னரே குடும்பத்தினருக்கும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் மற்றவருக்கும் காட்டப்படுவார்கள்.



விரைவிலேயே அந்தப் பெண் திரும்பி வந்து, ”எல்லாம் தயாராகிவிட்டது, நீங்கள் பார்க்கலாம். நான்காவது தளம், அறை எண் மூன்று” என்றாள்.



கருப்பு உடையணிந்த ஒரு மனிதன் அவரை மின்தூக்கியில் அழைத்துச் சென்று மூன்றாம் எண் அறையை திறந்து விட்டான். லிஸா தோள்கள்வரை திறந்த ஒரு சவப்பெட்டியில் கிடந்தாள், முகம் ஒரு மென்துணி வலையால் மூடப்பட்டிருந்தது. அவளென்று முன்னரே தெரிந்ததால் மட்டுமே அவரால் அவளை அடையாளம் காண முடிந்தது. அவளது கருங்கூந்தல் சாயத்தால் மங்கியிருந்தது. கன்னங்களில் இளஞ்சிவப்பு சாயம் பூசப்பட்டு, மூடிய கண்களைச் சுற்றியிருந்த சுருக்கங்கள் ஒப்பனையால் மறைக்கப்பட்டிருந்தன. அவளது சிவப்பிடப்பட்ட இதழ்களில் புன்னகையின் மெல்லிய தீற்றல்கூட தென்பட்டது. அவர்கள் எப்படி புன்னகையை உருவாக்குகின்றனர்? மேக்ஸ் க்ரீட்சர் வியப்புற்றார். லிஸா ஒருமுறை அவர் ஒரு இயந்திரத்தனமான நபராக நடந்து கொள்வதைப் பற்றி குற்றம் சாட்டியுள்ளாள், உணர்ச்சிகளற்ற ஒரு இயந்திர மனிதன். அப்போது அதுவொரு பொய்யான குற்றச்சாட்டு, ஆனால் தற்போது வினோதமான வகையில் அது உண்மையாகிவிட்டதுபோல் தெரிகிறது. அவர் மனம் தளர்வுறவும் இல்லை அச்சப்படவும் இல்லை, சலனமற்றிருந்தது.



அறையின் கதவு திறக்கப்பட்டு லிஸாவின் விசித்திரமான உருவ ஒற்றுமையோடு ஒரு பெண் உள்நுழைந்தாள். ”அவளது தங்கை, பெல்லா,” மேக்ஸ் க்ரீட்சர் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். கலிபோர்னியாவில் இருக்கும் அவளது தங்கை குறித்து லிஸா அடிக்கடி சொல்லியிருக்கிறாள், ஆனால் அவர் ஒருபோதும் அவளை சந்தித்ததில்லை. அவள் சவப்பெட்டியை நோக்கி வந்ததும் அவர் ஒதுங்கி நின்றார். அவள் ஒருவேளை வெடிப்புற்று அழுதால், சமாதானம் செய்ய அருகில் இருக்க வேண்டும். அவள் எவ்வித விஷேச உணர்வையும் காட்டவில்லை. எனவே அவளை அவளது சகோதரியுடன் தனியாக விட்டுவிடலாம் என முடிவு செய்து கிளம்ப முற்பட்டபோது அவருக்கு ஒன்று தோன்றியது, சொந்த சகோதரியாக இருப்பினும் ஒரு பிணத்துடன் தனியாக இருக்க அவள் அச்சப்படக் கூடும்.



சிலநொடிகள் கழித்து அவள் திரும்பி, “ஆம், அது அவள்தான்” என்றாள்.



”நீ கலிபோர்னியாவிலிருந்து வருவாய் என எதிர்பார்த்தேன்,” ஏதேனும் பேசவேண்டுமே என்பதற்காக மேக்ஸ் க்ரீட்சர் சொன்னார்.



”கலிபோர்னியாவில் இருந்தா?”



”உன் அக்காள் ஒருகாலத்தில் எனக்கு நெருக்கமாக இருந்தவள். அவள் அடிக்கடி உன்னைப்பற்றி சொல்லியிருக்கிறாள். என் பெயர் மேக்ஸ் க்ரீட்சர்.”



அந்தப் பெண் சிறிது நேரம் அமைதியாக நின்று அவரது சொற்களை யோசிப்பதுபோல் தெரிந்தது. பின்னர், ”நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்” என்றாள்.



”தவறாகவா? நீ அவளது தங்கை பெல்லா இல்லையா?”



”மேக்ஸ் க்ரீட்சர் இறந்துவிட்டது தங்களுக்குத் தெரியாதா? செய்தித்தாள்களில்கூட ஓர் இரங்கல் செய்தி வந்துள்ளது.”



மேக்ஸ் க்ரீட்சர் புன்னகைக்க முயன்றார். “அநேகமாக வேறொரு மேக்ஸ் க்ரீட்சராக இருக்கும்.” இந்தச் சொற்களை உதிர்க்கும்போதே அவர் உண்மையை புரிந்து கொண்டார்: அவர் மற்றும் லிஸா இருவருமே இறந்துவிட்டார்கள் – சற்றுமுன் அவரிடம் பேசிய பெண் பெல்லா அல்ல, அது லிஸாவே தான். உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம் துயரத்தால் நிலைகுலைந்திருப்போம் என்பதை உணர்ந்தார். வாழ்வின் மறுபக்கத்தில் இருக்கும் ஒருவரால் மட்டுமே தான் காதலித்த நபரின் இறப்பை அத்தனை விலகலுடன் எதிர்கொள்ள முடியும். எனில் நாம் அனுபவித்துக் கொண்டிருப்பது ஆன்மாவின் அமரத்துவத்தையா என வியந்தார். அவர் நினைத்தால் தற்போது சிரிக்க முடியும், ஆனால் உடலின் மாயத்தோற்றம் மறைந்துவிட்டிருந்தது; அவருக்கும் லிஸாவுக்கும் அதன்பின்னர் புறத்தோற்றம் இருக்கவில்லை. ஆனால் இருவராலும் தங்கள் இருப்பை உணர முடிந்தது. குரலே இல்லாமல் அவர் கேட்டார், “இது சாத்தியமா?”



லிஸாவின் சாமர்த்தியமான பதில் அவருக்கு கேட்டது, ”நடப்பது உண்மையெனில், இது சாத்தியமே.” அவள் தொடர்ந்தாள், ”உனக்கு மேலுமொரு தகவல், உன் உடலும் இங்கேதான் உள்ளது.”



”இது எப்படி நடந்தது? நேற்றிரவு நான் ஆரோக்கியமான நிலையில்தான் உறங்கச் சென்றேன்”



”இது நடந்தது நேற்றிரவு அல்ல நீ அப்போது ஆரோக்கியமான நிலையிலும் இல்லை. இந்த செயல்முறையின்போது ஓரளவு நினைவிழப்பும் இணைந்து கொள்கிறது என நினைக்கிறேன். இது எனக்கு நேற்று முன்தினம் நிகழ்ந்தது, ஆகையால் –”



”எனக்கு மாறடைப்பு ஏற்பட்டது?”



“இருக்கலாம்.”



”உனக்கு என்ன ஆயிற்று?” அவர் கேட்டார்.



”என்னை பொருத்தவரை, எல்லாம் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். அது போகட்டும், என்னைப் பற்றி உனக்கு எப்படித் தெரிந்தது?” அவள் வினவினாள்.



”நான் படுக்கையில் படுத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். எட்டு மணிக்கு பதினைந்து நிமிடம் இருக்கையில் தொலைபேசி அடித்தது, ஒரு பெண் உன்னைக் குறித்து சொன்னாள். அவள் தன் பெயரை அளிக்க மறுத்துவிட்டாள்.”



“எட்டு மணிக்கு பதினைந்து நிமிடம் இருக்கையில், உன் உடல் ஏற்கனவே இங்கு வந்துவிட்டிருந்தது. நீயே உன்னைச் சென்று காண விரும்புகிறாயா? நான் பார்த்து விட்டேன், நீ அறை எண் ஐந்தில் உள்ளாய். அவர்கள் உன்னைக் கொண்டு ஒரு க்ராசாவெட்ஸ் உருவாக்கியுள்ளனர்.”



பலவருடங்களாக அவர் க்ராசாவெட்ஸ் என்ற சொல்லை யாரும் உபயோகித்துக் கேட்டதில்லை. அதற்கு அழகான மனிதன் என்று பொருள். லிஸா ரஷ்யாவில் பிறந்தவள் என்பதால் அடிக்கடி இச்சொல்லை உபயோகிப்பாள்.



”இல்லை, எனக்கு ஆர்வமில்லை.”



சிற்றாலயத்தில் எல்லாம் அமைதியாக இருந்தது. சுருள் முடியும் நன்கு மழிக்கப்பட்ட முகமும் கொண்ட பகட்டான கழுத்துப் பட்டை அணிந்த ரப்பி1 ஒருவர் லிஸாவைக் குறித்து ஒரு உரையாற்றினார். “அவள் ஒரு புத்திசாலியான பெண்மணி, அச்சொல்லின் சரியான அர்த்தத்தில் சொல்கிறேன். அவள் அமெரிக்காவுக்கு வந்த வந்த பிறகு பகல் முழுக்க ஒரு கடையில் உழைத்து இரவில் கல்லூரிக்குச் சென்று உயரிய முறையில் பட்டம் பெற்றாள். அவளுடைய துரதிர்ஷ்டத்தால் அவள் வாழ்வில் பல விஷயங்கள் மோசமாக சென்றிருந்தாலும் அவளுடைய நேர்மையை ஒருபோதும் அவள் கைவிட்டதில்லை.”



”நான் அந்த மனிதரை கண்டதேயில்லை. அவருக்கு எப்படி என்னைப் பற்றி தெரிந்தது?” லிஸா கேட்டாள்.



”உன் உறவினர்கள் அவரை வாடகைக்கு எடுத்து தகவல்களை கொடுத்துள்ளனர்,” என்றார் க்ரீட்சர்.



”இந்த தொழில்முறை பாராட்டுகளை நான் வெறுக்கிறேன்.”



”சாம்பல்நிற மீசையுடன் அங்கு முதல்வரிசையில் அமர்ந்திருக்கும் நபர் யார்?” க்ரீட்சர் வினவினார்.



லிஸா புன்னகை போன்ற ஒன்றை உதிர்த்தாள். “என் கணவனாக இருந்தவன்.”



”திருமணம் செய்து கொண்டாயா? உனக்கு ஒரு காதலன் இருப்பதாக மட்டுமே நான் கேள்வியுற்றேன்.”



”நான் அனைத்தையும் முயற்சித்துப் பார்த்தேன், ஆனால் எதிலும் வெற்றி கிட்டவில்லை.”



”சரி, நீ எங்கே செல்ல விரும்புகிறாய்?”



”உன் இறுதி சடங்கிற்குச் சென்று பார்க்கலாம்.”



”கண்டிப்பாக வேண்டாம்.”



”இது என்ன மாதிரியான இருத்தல் நிலை?” லிஸா தொடர்ந்தாள், “நான் அனைத்தையும் காண்கிறேன். ஒவ்வொருவரையும் அடையாளம் காண முடிகிறது. அதோ என் அத்தை ரைஸல், அவளுக்கு நேர் பின்னால் இருப்பது அவளது மகள் பெக்கி. ஒருமுறை உன்னை அவளிடம் அறிமுகம் செய்துள்ளேன்.”



“ஆம், நினைவுள்ளது.”



”வழிபாட்டறை பாதிக்கும் மேல் காலியாக உள்ளது. பல சந்தர்ப்பங்களில் நான் பிறரிடம் நடந்து கொண்டதை வைத்துப் பார்க்கையில் இது எனக்கு தகுதியானதுதான். ஆனால் உன் வழிபாட்டறை முழுவதுமாக நிரம்பியிருக்கும் என்று நிச்சயமாக சொல்வேன். நீ காத்திருந்து காண விரும்புகிறாயா?”



”அதை அறிந்து கொள்வதற்கான சிறிதளவு ஆர்வம்கூட எனக்கில்லை”



ரப்பி தன் புகழ்மொழியை முடித்தவுடன் ஒரு பாடகர் ஓதத் துவங்கினார் “கடவுள் கருணையோடு இருக்கிறார்.” அவரது ஜபப் பாடல் மிகவும் அழுகையுடன் ஒலித்தது. ”என் சொந்த தந்தைகூட இம்மாதிரி ஒப்பாரி வைத்திருக்கமாட்டார்.”



”விலைக்கு வாங்கப்பட்ட கண்ணீர்.”



”என்னால் இதற்கு மேலும் இங்கிருக்க முடியாது, நாம் செல்வோம்” லிஸா கிளம்பினாள்.



அவர்கள் இறுதிச் சடங்கு ஆலயத்திலிருந்து வீதிக்கு மிதந்து வந்தனர். அங்கு பாடைகளுடன் ஆறு இறுதி ஊர்வல ஊர்திகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒட்டுனர்களில் ஒருவன் ஒரு வாழைப்பழத்தை தின்று கொண்டிருந்தான்.



”இதுதான் இறப்பு என்பதா? அதே நகரம், அதே வீதிகள், அதே கடைகள். நானும்கூட அதே மாதிரித் தெரிகிறேன்” லிஸா கேட்டாள்.



”ஆம், ஆனால் உடல் இல்லாமல்.”



”பின்னர் நான் என்ன? ஒரு ஆன்மாவா?”



”உண்மையில், உன்னிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை, நீ பசியை உணர்கிறாயா?”



”பசியா? இல்லை.”



”தாகம்?”



”இல்லவே இல்லை. நீ இதற்கெல்லாம் என்ன விளக்கம் சொல்வாய்?”



”நம்பமுடியாத, அபத்தமான, மிகவும் நாகரீகமற்ற மூடநம்பிக்கைகள் கூட உண்மையென்று நிரூபனம் ஆகின்றன,” மேக்ஸ் க்ரீட்சர் சொன்னார்.



”ஒருவேளை சொர்க்கமும் நரகமும் உள்ளதா என்பதைக்கூட நாம் இன்று கண்டுபிடிக்கலாம்.”



”இந்தச் சூழலில் எதுவும் சாத்தியமே.”



”ஒருவேளை நாம் புதைக்கப்பட்டப் பிறகு மேலே உள்ள நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நம் பாவங்களுக்கு கணக்கு கேட்கப் படுவோமா?”



”அதுவும் நடக்கலாம்.”



”சரி, நாம் இருவரும் சேர்ந்திருக்குமாறு எவ்வாறு ஆனது?”



”தயவுசெய்து இதற்குமேல் கேள்விகள் கேட்காதே. எனக்கும் உன் அளவுக்கு குறைவாகவேத் தெரியும்.”



”இதன் அர்த்தம் நீ வாசிக்கும் மற்றும் எழுதும் தத்துவார்த்த படைப்புகள் எல்லாம் ஒரு மிகப்பெரிய பொய் என்று சொல்லலாமா?”



”மிகவும் மோசம் – அவையெல்லாம் சுத்த உளறல்.”



அப்போது நான்கு பாடைதூக்குபவர்கள் இணைந்து லிஸாவின் உடல் இருந்த சவப்பெட்டியை சுமந்து சென்றனர். அதன்மீது ஒரு மலர்வளையம் வைக்கப்பட்டு அதில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டிருந்தது: ”மறக்கமுடியாத லிஸாவுக்கு அன்பின் நினைவாக.”



”அது யார் வைத்த மலர்வளையம்?” லிஸா தன்னைத் தானே கேட்டுக் கொண்டு பதிலளித்தாள், “இதை வைப்பதற்கு அவன் கஞ்சத்தனம் காட்டவில்லை போலும்.”



”நீ அவர்களுடன் இணைந்து கல்லறை வரைச் செல்ல விரும்புகிறாயா?” க்ரீட்சர் கேட்டார்.



”வேண்டாம் – எதற்காக? அந்த போலிப் பாடகர் எனக்காக இறுதி வழிபாட்டுக் கீதம் ஒன்றை ஊளையிடுவார். அங்கு செல்லாதிருத்தலே மேல்”



”நீ என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறாய்?”



லிஸா தன்னையே கவனித்துப் பார்த்தாள், அவள் எதையும் வேண்டவில்லை. ஒரு விருப்பம்கூட இல்லாத அசாதாரண நிலை. நினைவறிந்த நாள் முதலே அவளது ஆசைகளும், ஏக்கங்களும், அச்சங்களும் அவளை விடாமல் அலைகழித்திருக்கின்றன. அவளது கனவுகள் தளராத நம்பிக்கைகளாலும், பரவசங்களாலும், தீவிர லட்சியங்களாலும் நிரம்பியிருந்தன. வேறெந்த பேரழிவையும்விட அவள் அச்சப்பட்டது இறுதி நாளைக் குறித்துதான், அக்கனவுகள் யாவும் அணைந்துபோய் கல்லறையின் இருள் தொடங்கும் தினம். ஆனால் இங்கோ அவள் கடந்தகால நினைவுகளுடன் அவ்வாறே இருக்கிறாள், க்ரீட்சர் மீண்டும் அவளுடன் இணந்துள்ளார். அவள் அவரிடம் “இறுதி இதைவிட மிகவும் நாடகத்தனமாக இருக்கும் என நினைத்திருந்தேன்” என்றாள்







”இது இறுதி என்று நான் நம்பவில்லை, ஒருவேளை இரண்டுவிதமான இருத்தல்களுக்கிடையே நிலைமாறும் காலமாக இருக்கலாம்”



”எனில், இது எத்தனை காலம் நீடிக்கும்?”



”காலமே பொருளற்றதாகிவிட்ட பின், காலவரையறைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை.”



”ஹ்ம்ம், உனது முரண்பாடுகளும் புதிர்பேச்சுகளும் இன்னும் மாறவில்லை. வா, உன் இறுதிச் சடங்கிற்கு வந்தவர்களை தவிர்க்க வேண்டுமெனில் நாம் இங்கிருக்க கூடாது,” லிஸா கூறினாள். “நாம் எங்கு செல்வது?”



”நீயே வழிகாட்டு.”



மேக்ஸ் க்ரீட்சர் அவளது நிழலில்லா கைகளைப் பிடித்ததும் அவர்கள் எந்த நோக்கமுமின்றி உயர்ந்து இல்லாத இலக்கை நோக்கிப் பறந்தனர். ஒரு வானூர்தியில் இருந்து காண்பது போல அவர்கள் கீழ்நோக்கி பூமியைக் கண்டனர்.. நகரங்கள், ஆறுகள், வயல்கள், ஏரிகள் – அனைத்தையும் ஆனால் மனிதர்களைத் தவிர.



”நீ ஏதோ சொன்னதுபோல் இருந்தது?” லிஸா கேட்டாள்.



மேக்ஸ் க்ரீட்சர் பதிலளித்தார். “அமரத்துவமே நான் இதுவரை அடைந்த ஏமாற்றங்களுள் ஆகப்பெரியது.”



***

ரப்பி1 – யூத மதகுரு

***

மூலம்: The Reencounter (1983)

எழுதியவர் : ’ ஐசக் பாஷவிஸ் சிங்கர்---------- (12-Jul-19, 8:05 pm)
பார்வை : 76

மேலே