காணாமல் போன கலைஞன்

காணாமல் போன கலைஞன்
சமீப காலமாக பிரபலமாய் இருந்த திரைப்பட நடிகன் மற்றும் இயக்குநர் மணிகண்டன் காணாமல் போயிருந்தான். தினம் தோறும் அவனை பற்றிய புகைப்படங்கள், பேட்டிகள், கலந்து கொள்ளும் நிகழ்வுகள் ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளிவந்து கொண்டிருந்தது.
இரண்டு மூன்று மாதங்களாக எந்த செய்தியும் மணிகண்டனை பற்றி வரவில்லை.ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் அதை பற்றி கவலைப்படவில்லை, அவர்கள் அடுத்தவனை தேடி சென்று விட்டார்கள். அவர்களை பொறுத்தவரை சுட சுட செய்திகளாக தரவேண்டும், அதில் எந்தளவுக்கு உண்மை பொய் இருக்கும் என்று பார்க்கும் அளவுக்கு பொறுமை இல்லை. அப்படி பொறுமை காட்டினால் அடுத்த ஊடகம் விளம்பரங்களை வாரி கொண்டு போய்விடும்.
இதுவரை நான்கு படங்கள் மட்டுமே கொடுத்திருந்தான் மணிகண்டன். நான்கும் தரமான படங்கள். பெருமளவு திரைப்பட இரசிகர்களுக்கு மட்டுமே இரசிக்கும் மனநிலையில் படம் இருந்தாலும் அதில் அவன் கையாண்ட யதார்த்த மனித வாழ்க்கையின் உண்மை பலரை விரும்பி படம் பார்க்க வைத்தது.
ஹீரோத்தனம் இல்லாத சாதாரண மனித எண்ணங்களும் பராக்கிரமசாலியாக இல்லாத அதே நேரத்தில் அவமானங்களையும், வன்முறைகளையும் ஏற்று கொள்ளும் கதாபாத்திரங்களை இவனே ஏற்று நடித்திருந்ததால் நடிகனாகவும் திரைப்படம் பார்த்தவர்களின் மனதுக்குள் நின்றும் இருந்தான்.
ஊடகங்களில், நேர்முகங்களில் கூட அவனைப்பற்றிய எந்த செய்தியையும் முக்கியப்படுத்துவதை விரும்பாமல் பதில் அளித்திருப்பான். அவனது இளமை கால வாழ்க்கை மிகுந்த சிரமமானதாக இருந்தது என்பதை அவன் மறுத்ததே இல்லை. என்றாலும் அதற்காக அதை பெரிதுபடுத்தவும் விரும்பாதவனாக இருந்தான்.
இப்பொழுது மணிகண்டன் அவசியமாக தேவைப்படுகிறான், தயாரிப்பாளர் ஞானமூர்த்திக்கு.
மணிகண்டன் இப்படிப்பட்டவனாக இருந்தால் தயாரிப்பாளர் ஞானமூர்த்தி அவனை விட மேலானவராக இருந்தார். அவரது படங்களை மட்டுமே மணிகண்டனை போன்றவர்களால் எடுக்கமுடியும். காரணம் ஞானமூர்த்தி ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது தன் மனைவியுடன் ஒரு முறை ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அந்த ஹோட்டல் மிக சாதாரணமான ஹோட்டல். ஆரம்பகாலத்தில் இருந்து ஞானமூர்த்தி இங்கு சாப்பிட வருபவர். அப்பொழுது மூன்று இளைஞர்கள் அவருக்கு முன் இருக்கையில் வந்தமர்ந்தனர்.
மூவருக்கும் சேர்த்து வந்தவர்களில் ஒருவன் “மூன்று செட் இட்லி” சர்வரிடம் ஆர்டர் செய்தான். அது வருவதற்குள் ஒருவன் பேச ஆரம்பித்தான்.
மணி அந்த டைரக்டர் சுகுமார் கிட்ட இருந்து ஏன் விலகிட்டே?
அதை பத்தி இப்ப பேச வேண்டாமே, ஏன் விலகிட்டேன்னு நான் காரணம் சொன்னா அது அவரை சங்கடப்படுத்தறமாதிரி இருக்கும். அதுதான் அவரோட பழக்கமா இருந்து அது எனக்கு பிடிக்காம நான் விலகிட்டதுனால அந்த வழக்கம் தப்புன்னு நான் சொல்றமாதிரி ஆயிடும். எனக்கு என்ன உரிமை இருக்கு, அவரோட வழக்கத்தை தப்புன்னு சொல்ல, என்னால அதை செய்ய முடியலை, நான் ஒதுங்கிட்டேன் அவ்வளவுதான்.
ஏதோ “புரொடியூசர்” படம் தரேனு சொன்னாருன்னு சொல்லிகிட்டிருந்தியே?
ஆமா இப்ப அவரு எனக்கு வாய்ப்பு கொடுப்பாருன்னு தெரியலை, ஏன்னா அவரு டைரக்டர் சுகுமாரோட செல்வாக்குனால, என் கிட்ட சொல்லியிருந்தாரு. சுகுமாரும் எனக்கு ரெகமண்ட் பண்ணியிருந்தாரு.
சே..அருமையான வாய்ப்பை உட்டுட்டே, கொஞ்ச நாள் பல்லை கடிச்சுட்டு இருந்திருந்தா அந்த தயாரிப்பாளர்கிட்ட இருந்து புது படம் கிடைச்சிருக்கும். இப்ப தேவை இல்லாமல் சுகுமாருகிட்ட இருந்து வெளிய வந்துட்டு முழிக்கறே>
முழிக்கறேன்னு ஏன் நினைச்சுக்கறே? இந்த பீல்டுலதான் வரணும்னு ஆறு வருசமா போராடி வந்திருக்கேன். சுகுமார்கிட்ட சேர்ந்து இரண்டு வருசம்தான் ஆச்சு, அதுக்கு முன்னாடி நாலு வருசம் போராடிகிட்டுத்தான இருந்தேன். ஒரு வாய்ப்பு வந்துடுச்சுன்னு உடனே என்னோட இயல்புகளையும் எல்லாம் விட்டுட்டு வாய்ப்புக்காக என் எண்ணத்துக்கு மாறா இருக்கணுமா?
அதுக்கில்லை, வருமானம் அதுதான் ..? இழுத்தான் கூட இருந்தவன். அதற்குள் இவர்கள் கேட்ட இட்லி வந்துவிட சாப்பிட ஆரம்பித்தனர். ஞானமூர்த்திக்கு ஏனோ அந்த பையனின் பேச்சு மனசுக்கு பிடித்திருந்தது. விலகியவரை பற்றி குறிப்பு சொல்லாமல் இருந்தது. அவனது தன்னம்பிக்கையான பேச்சும்.
ஞானமூர்த்தி சாப்பிட்டு விட்டு கையை கழுவிட்டு வந்தபோது, சாப்பிட்டு கொண்டிருந்த மூவரில் பேசிக்கொண்டிருந்தவனின் முதுகில் தட்டியவர், தம்பி இந்தா இது என்னோட கார்டு, முடிஞ்சா மூணு மணிக்கு என்னை வந்து பாரு.
அப்பொழுதுதான் சாப்பிட்டு முடித்து நிமிர்ந்தவன் திடீரென்று இவர் அவன் முதுகை தொட்டு அவரது விசிட்டிங்க் கார்டை கொடுக்கவும் வியப்பானான். அந்த கார்டை எப்படி வாங்குவது? என் ஒரு நிமிடம் யோசித்தாலும் சட்டென இடது கையால் அதை வாங்கி கொண்டான். எழுந்து அவருக்கு நன்றி சொன்னான்.
ஞானமூர்த்தி அவனிடம் நீ பேசுனதெல்லாம் கேட்டுட்டுத்தான் இருந்தேன். நாம இரண்டு பேரும் பேசலாம், மூணு மணிக்கு கட்டாயம் வந்திடு, சொல்லிவிட்டு மனைவியை அழைத்து கொண்டு வெளியேறினார்.
மணிகண்டன் இன்னும் பிரமிப்பில் இருந்தான். ஏதேச்சையாய் தான் பேசிய பேச்சுக்களுக்கு இப்படி ஒரு பிரதிபலிப்பு கிடைக்குமா? அவனுடன் இருந்த இருவரும் இதே போலத்தான் இருந்தனர். சட்டென ஒருவன் தன் நிலை திரும்பி மணிகண்டனின் தோளை தொட்டு உனக்கு நல்ல காலம் தொடங்கிடுச்சுன்னு நினைக்கறேன். நீ எப்படிப்பட்டவன்னு உன் பேச்சை கேட்டு தெரிஞ்ச ஒருத்தர் உன்னைய கூப்பிடறாருன்னா இதைய தவிர வேற என்ன சொல்ல?
மாலை மூன்று மணிக்கு அவருடன் பேச ஆரம்பித்தது இரவு பத்து மணி ஆகிவிட்டது. மணிகண்டனுடன் கூட வந்த நண்பர்கள் அனைவருக்கும் இரவு அங்கேயே டிபன் சாப்பிட வைத்து, அவன் அதுவரை சொல்லியிருந்த ஐந்து கதைகளையும் கேட்டு விட்டு எல்லாமே நல்லாயிருக்கு, இதுல ஒண்ணு நல்லா செலக்ட் பண்ணிட்டு எனக்கு தகவல் கொடு. நாளைக்கே சொல்லியிட்டியின்னா கூட எனக்கு ஓ.கே. வேலைய ஆரம்பிச்சுடலாம்.
சார் நீங்கதான் தயாரிப்பாளர், நான் சொன்ன கதையில எது எடுக்கலாமுன்னு முடிவு பண்னற உரிமை உங்களுக்குத்தான் இருக்கு, மணிகண்டன் அவரிடம் சொன்னான். ஞான்மூர்த்தி சட்டென அந்த உரிமைய உங்கிட்ட கொடுக்கறேன்னு வச்சுக்க. எனக்கு தேவை தரமான படைப்பு. லாபம் மட்டுமே என் நோக்கமும் அல்ல. அதே நேரத்துல அதுல கிடைக்கற வருமானம் இன்னொரு படைப்பை மக்களுக்கு கொடுக்கறமாதிரி இருக்கணும் அவ்வளவுதான்.
இதற்கு மேல் என்ன பதில் சொல்ல? கண்கலங்கிய மணிகண்டன் இரவு முழுக்க யோசித்தான். கடைசியில் ஒரு கதையை முடிவு செய்தான். உடனே எழுந்தவன், ஞானமூர்த்தியின் ‘செல்லுக்கு’ போன் செய்தான்.
சாரி சார் இந்த நேரத்துல உங்களை தொல்லை பண்ணறேன், ஞானமூர்த்தி அந்த பக்கம் சிரித்தார். நீ கட்டாயம் போன் பண்ணுவேன்னு எனக்கு தெரியும், அதுக்காகத்தான் காத்துகிட்டிருந்தேன். நீ போன் பண்ணாம போயிருந்தியின்னாதான் ஏமாந்திருப்பேன்.
இவர் மனிதன்தானா? திகைத்தான் மணிகண்டன். சார், நான் மூணாவதா சொன்ன கதைய எடுக்கலாமுன்னு முடிவு பண்ணிட்டேன். அது “டீன் ஏஜ்” ல இருக்கற பசங்க, பொண்ணுங்களை நாம் எப்படி கொண்டு போகணும்னு சொல்லுது,
குட்., நானும் இதையத்தான் நினைச்சேன், காரணம் இன்னைக்கு இதுதான் தேவை. ஓ.கே நாளைக்கே வேலைய ஆரம்பி. காலையில என்னை வந்து பாரு. அதுக்குள்ள எவ்வளவு செலவு ஆகும்னு கணக்கு போட்டு வை. முழுக்க முழுக்க உன் பொறுப்பு.
மறுநாள் விடிந்த போது மணிகண்டனின் உலகம் வேறாக இருந்தது. இத்தனை நாள் அவனுக்காகவே காத்திருந்தது போல் இருந்தது இன்றைய நாள்.
ஆறே மாதத்தில் படத்தை முடித்து கொடுத்தவன் அவர் கொடுத்த தொகையில் மீதத்தையும் கையில் கொடுத்தான். ஞாமூர்த்திக்கு ஆச்சர்யம், அதற்குள் முடித்து விட்டாயா? உன் சம்பளம்?
என்னால் சம்பளம் கேட்க முடியாது சார், இது என் படைப்பு, மற்றும் நடிப்பு என்னும் திருப்தியே என் உடல் முழுவதும் இருக்கிறது. பணம் வாழ்க்கை இதை பற்றி என்னால் இப்போது யோசிக்க முடியவில்லை.
ஞானமூர்த்தி அவனை வற்புறுத்தவில்லை. படம் விநியோகஸ்தர்களுக்கு போட்டு காட்டபட்டு, நல்ல விலையும் போனது. படம் வெளிவந்து மணிகண்டனுக்கு நல்ல பெயரையும் புகழையும் கொடுத்தது.
அதற்குப்பின் தொடர்ச்சியாக நான்கு படங்களை அவருக்கே எடுத்தான். பல தயாரிப்பாளர்கள் அவனை முற்றுகை இட்டனர். தற்போது வேறு நிறுவனத்துக்கு படம் எடுக்க இயலாது என்றான். ஞானமூர்த்தி என் எண்ணப்படி எனக்கு சுதந்திரம் கொடுத்து படைப்பை உருவாக்க வாய்ப்பு கொடுக்கும்போது வேறொரு நிறுவனத்துக்கு நான் சென்றால் அவர்களின் எண்ணப்படித்தான் நான் செயல்பட முடியும். அப்படி இருக்கும்போது என்னால் வேறு எங்கும் செல்ல முடியாது.
ஞானமூர்த்திக்கும் பெருமையாக இருந்தது. நான்கு படங்களுமே அவருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. மணிகண்டனுக்கு நல்ல சம்பளத்தை கொடுத்தார். ஆனால் அதை அவன் தன்னுடன் கூட இருந்த எல்லாருக்கும் பங்கிட்டு கொடுத்து விட்டான் என்று தெரிந்ததும் அவனை கூப்பிட்டு கடிந்து கொண்டார்.
அடுத்த இரண்டு வாரங்களில் அவன் காணாமல் போயிருந்தான். அவனை வலை வீசி தேடினார் ஞானமூர்த்தி. செல்போனை அணைத்து வைத்திருந்தான். கூட இருந்த நண்பர்களிடமும் அவன் எந்த தகவலையும் தரவில்லை. ஒரு சில பத்திரிக்கைகள் எப்படியோ மோப்பம் பிடித்து தயாரிப்பாளருக்கும், மணிகண்டனுக்கு தகராறு, அதனால் மணிகண்டன் காணாமல் போய்விட்டார் என்று எழுத ஆரம்பித்து விட்டன.
ஞானமூர்த்தியின் மனதுக்குள் பெரும் பாரம் உட்கார்ந்து கொண்டது. தான் கடிந்து கொண்டதால் கோபித்து கொண்டானே? அப்படி ஒன்றும் தவறாக சொல்லி விடவில்லையே?
ஒரு நாள் ஞானமூர்த்தியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு. எடுத்து பார்த்தவர் வியந்து போனார். மணிகண்டனிடமிருந்து. அவசரமாய் எடுத்து ஹலோ..ஹலோ.., எதிர்ப்புறம் அமைதி.. ஹலோ…மணி மணி..இவர் கூப்பிட கூப்பிட அமைதியாகவே இருந்த செல்போன் அணைந்து போனது. மறுபடி மறுபடி முயற்சி செய்தார். ஆனால் அந்த பக்கமிருந்து யாரும் போனை எடுக்கவில்லை.
தனக்கு தெரிந்த காவல் அதிகாரியை போய் பார்த்தவர் மணிகண்டனின் அழைபு வந்ததும் அமைதியானதையும் சொன்னார். அந்த அழைப்பு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்றார்.
காவலதிகாரி தனது செல்போன் கிரைம் பிராஞ்ச் அலுவலகம் மூலம் அதை கண்டு பிடிக்க முயற்சி செய்தார்.
சுத்தமான நகரவாசமே காணாத அந்த கிராமத்துக்குள் கார் நுழைந்து அங்கிருந்த கோயில் திண்ணையில் உட்கார்ந்திருந்த நான்கைந்து பெரியவர்கள் அருகில் நின்றது. அதிலிருந்து இறங்கிய ஞானமூர்த்தி அவர்களிடம் இங்க மணிகண்டன்னு ஒருத்தரு, சினிமாவுல கூட நடிச்சுகிட்டு..இழுத்தார்.
அட நம்ம சங்கரலிங்கம் பையன், பாவம் அவன் உடம்பு சரியில்லாம வூட்டுல கிடக்கான், வந்து ரொம்ப நாளாச்சு.
ஞானமூர்த்தி பதட்டமானார், அதுதான் அவரு வீடு எங்கே இருக்குது? ராசு நீ போய் சங்கரலிங்கம் வூட்டை காட்டிட்டு வா, ஒரு இளைஞன் ஞானமூர்த்தி அருகில் வந்தவன் வாங்க இந்த சந்து வழியா போனா அவங்க வூட்டுக்கே போயிடும்.
காரை நிறுத்திவிட்டு அவசரமாய் அவன் பின்னால் நடந்தார். பழைய சுற்று சுவர் கொண்ட ஒரு வீட்டு முன்னால் போய் நின்றது அந்த வழி. இதுதான் சங்கரலிங்கம் வீடு.
உள்ளே இருளாக இருந்தது, ஐயா ஐயா கூப்பிட்டு பார்த்தார். அந்த இளைஞன் அவங்க யாரும் இப்ப இங்க இருக்கமாட்டாங்க. தோட்டத்துக்கு போயிருப்பாங்க. வாங்க உள்ளே போய் பார்க்கலாம்.
உள்ளே நாராய் கிடந்தான் மணிகண்டன். பார்த்தவுடன் அதிர்ந்து போனார். மணி மணி..சப்தமாய் அழைக்க அந்த உடலில் மெல்ல அசைவு, மெல்ல கண்விழித்து பார்த்தவன்…விழிகளில் கொஞ்சம் பிரகாசத்தை காட்டினான், அவ்வளவுதான் மயக்கத்துக்கு போயிருந்தான்.
ஞானமூர்த்தி சட்டென தன் செல்போனை உசுப்பி யாருக்கோ போன் செய்தார். ஒரு மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று ஊருக்குள் வர மணிகண்டனை எடுத்து ஆம்புலன்சில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.
அதற்குள் மணிகண்டனின் பெற்றோர்கள் வந்து விட்டனர். பாவம் அன்றாட விவசாய கூலிகளாய் வேலைக்கு சென்று வருவார்களாம். இவன் இரண்டு வாரம் முன்பு ஊருக்கு வரும் போது நன்றாகத்தான் இருந்தானாம். மறு நாள் உடல் சரியில்லை என்று படுத்தவன் தான்.
தன் முன்னால் தலைகுனிந்து உட்கார்ந்திருந்த மணிகண்டனை பார்த்த ஞானமூர்த்திக்கு மனதுக்குள் வருத்தமாக இருந்தது. கலை கலை என்று அலைபவர்களாக காட்டிக்கொள்பவர்கள் கூட இது போன்ற மனித வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ள மறுப்பதுதான் ஆச்சர்யமாக இருந்தது.
இவன் இந்த மூன்று வருடங்களில் சம்பாதித்த பணம் அனைத்தையும் இங்கேயே கரைத்து முடித்திருக்கிறான். கொஞ்சம் சேமித்து பெற்றோருக்கு அனுப்பி இருந்தால் கூட அவர்களாவது கொஞ்சம் வசதியுடன் இருந்திருக்கலாம். இப்படி உடல் நிலை சரியில்லாமல் மூன்று மாதங்களாய் படுக்கையில் இருந்து, நல்ல வேளையாக இவர் கண்டு பிடித்து அவனை அழைத்து மூன்று மாதமாய் போராடி, உடல்நிலையை சரி செய்திருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய் மருத்துவத்துக்கு செலவாகி யிருக்கிறது. பணம் அவருக்கு பிரச்சினையில்லை. ஆனால்.. அவனுக்கு என்று வாழ்க்கை இருக்கும்போது..?
ஆறு மாதத்தில் அடுத்த படம் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தவன் அவர் முகத்தை பார்த்தபடியே நின்றான்.
ஞானமூர்த்தி அவன் முகத்துக்கு நேராக சொல்லிவிட்டார். உன் சம்பளம் முக்கால் பாகம் உன் ஊருக்கு சென்றுவிடும். அங்கு உன் அப்பா, அம்மாகிட்ட கொடுத்து வீட்டை சரி பண்ணி தர ஏற்பாடு பண்ணிட்டேன். உன் பேர்ல தோட்டமோ காடோ வந்தா வாங்கி தரவும் சொல்லிட்டேன்.
கையில நான் கொடுக்கற பணத்தை அடுத்த படம் எடுக்கறவரைக்கும் தினசரி வாழ்க்கைக்கு வச்சுக்கோ. புரியுதா?
ஹாஸ்பிடல்ல வேற நிறைய செலவு பண்ணியிருக்கீங்க, மணிகண்டன் மெல்ல சொன்னான்.
ஞானமூர்த்தி சிரித்தார். அடுத்த படத்துல கழிச்சுக்கோ

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-Nov-25, 10:14 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 5

மேலே