சுத்தம் எனைத்துணைய மேன்மை இதை நினைத்து வருக நிதம் - தூய்மை, தருமதீபிகை 352

நேரிசை வெண்பா

சுத்தன் எனும்பெயரைத் தொன்மைக் கடவுளும்
வைத்து மகிழும் வகைதெரியின் - சுத்தம்
எனைத்துணைய மேன்மை இதை,நீ இனிதாய்
நினைத்து வருக நிதம். 352

- தூய்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பரிசுத்தன் என்னும் திருநாமத்தைத் தனக்குக் தனி. உரிமையாய்க் கொண்டு கடவுள் உவந்திருக்கிறாராதலால் சுத்தம் எவ்வளவு மேன்மையுடையது என்பதை நீ நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அமலன், அனகன், சுத்தன், தூயன், புனிதன் எனக்கடவுள் துதிக்கப்பட்டுள்ளார். சுத்தம் என்பது தெய்வத் தன்மையாம் என்னும் உண்மை இதனால் தெளிவாகியுள்ளது. இத் தன்மையைத் தோய்ந்து நிற்பவன் எவ்வகையிலும் திவ்விய மகிமைகள் வாய்ந்து நிற்கின்றான். மனம், மொழி, மெய் என்னும் மூவகை நிலைகளிலும் மனிதன் புனிதமுடையனாயின் அவன் தெய்வீக நிலையில் சிறந்து உய்தி சுரந்து உயர்ந்து திகழ்கின்றான்.

மாசிலாமணி என ஈசனைப் போற்றி வருதலால் மாசுடைமையின் நீசம் தெரிகின்றோம். ஒருவனுடைய மனம் மாசு படியாமல் தூய்மையாயிருப்பின் அது ஈசனுடைய ஆலயமாய்த் தேசு மிகுந்து திகழ்கின்றது.

பாசம் படிந்த பொழுது சீவான்மா பரமான்வைப் பிரிந்து பரிதபித்து நிற்கின்றது; பாசம் நீங்கின் அது.ஈசனாய் இலங்குகின்றது. பாசம் நீசம் ஆக்குதலால் அதனை நாசமாக்கி விட வேண்டும்.

காசம் படர்ந்த கண் ஒளியிழந்து குருடுபடுகின்றது; பாசம் படர்ந்த உயிர் தெளிவழிந்து இளிவுழந்து தெருமரலடைகின்றது.

தன்னை நீசன் ஆக்கி நிற்கும் மாசினை நீக்கியபோது மனிதன் ஈசனை நோக்கி எழுகின்றான். அழுக்கு இல்லாத கண்ணாடியில் யாவும் தெளிவாய் விளங்குதல் போல், இழுக்கு நீங்கிய உள்ளத்தில் எல்லா உண்மைகளும் எளிது துலங்குகின்றன. மனிதன் தெய்வ பிண்டம் ஆயினும் மாசு படிந்தமையால் மதிமயங்கி நிற்கின்றான். மாசு தீரின் தன்னையும் தலைவனையும் நன்னயமாக அவன் நன்கு தெளிந்து கொள்கின்றான்.

அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
அழுக்கற்ற நெஞ்சில் இழுக்கற்ற பொருள் தோன்றுமெனல்

ஆசு தீர்ந்த மனத்தினிடை
..அன்றி உணர்வு தோன்றாது
மாசு தீர்ந்த ஆடியிடை
..அன்றி வதனம் தோன்றுமோ?
பாச நீங்கு பரஞ்சுடரை
..நினைக்கும் நினைவாற் பற்றுமனம்
காச நீங்கு கண்போலத்
..தன்னைக் காண விளங்குமால். 14

நானே சிவமென்று எண்ணியவன் சிவமே யாவன் எனல்

வானம் அல்லேன் வளியல்லேன்
..அழல்நீர் அல்லேன் மண்அல்லேன்
ஞானம் அல்லேன் வினையல்லேன்
..நானே சிவமென்(று) எண்ணினேன்
ஊனம் இல்லா ஒருசிவமே
..ஆவன் இவ்வா(று) உன்னாதான்
ஈனம் எல்லாம் உடையவுடம்(பு)
..எடுத்துச் சுழலும் எஞ்ஞான்றும். 15

தன்னைச் சிவம் என உணரானுக்குப் பிறப்பே துணை எனல்

தன்னைச் சிவமென் றறிந்தவனே
..அறிந்தான் தன்னை உண்மையாத்
தன்னைச் சிவமென் றறியாதான்
..அறியான் என்றும் தன்னுண்மை
தன்னைச் சிவமென் றென்றறிவன்
..அன்றே பாசம் தனைநீப்பன்
தன்னைச் சிவமென் றறியாதான்
..தனக்குப் பிறப்பே துணையாகும்.16 மனோலய கதி, பிரபுலிங்க லீலை

மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவுரிமையை உறுதியாக இஃது உணர்த்தியுள்ளது. உண்மையை உள்ளத் தெளிவுடன் ஓர்ந்து உணர்த்து நன்மை அடைந்து கொள்ள வேண்டும்.

"தன்னை மறந்து தரணியில் பிறந்தேன்; பின்னை நினைந்து பெரும்பதம் அடைந்தேன்' என முன்னம் ஒரு முனிவர் மொழிந்ததும் அறிக. நெடிய மறவி கொடிய பிறவி ஆயது.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

*முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!

* 2,3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

சீவன் என்றுநீ சீரழி கின்றனை
தேவன் என்றுனைத் தேர்ந்து தெளிந்துகொள்
பாவ பாசம் படியின் படிமிசை
ஏவ மான பிறவிகள் எய்துமே,

என்னும் மெய்மையை எண்ணி உணர்ந்து இதம் உற வேண்டும்.

உன் சித்தத்தைச் சுத்தி செய்; இத்தனை காலமும் இழந்திருந்த தெய்வப் பேற்றையும் பேரின்பத்தையும் பெற்று மகிழுவாய். உய்தியை உடனே செய்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jul-19, 2:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

மேலே