நினைவும் உரைசெயலும் நேர்மையேல் உன்னைப் புனையும் உலகம் புகழ்ந்து – நேர்மை, தருமதீபிகை 342
நேரிசை வெண்பா
உள்ளம் கரவாய் உறினோ உயிரவமே
எள்ளும் படியாய் இழியுமே – கொள்ளும்
நினைவும் உரைசெயலும் நேர்மையேல் உன்னைப்
புனையும் உலகம் புகழ்ந்து! 342
– நேர்மை, தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
மனம் கரவுடையதாயின் உயிர் ஒளிகுறைந்து இழிவுறுகின்றது; எண்ணுகின்ற எண்ணமும் பேசுகின்ற பேச்சும் செய்கின்ற செயலும் யாண்டும் நேர்மையுடன் நிலவினால் உன்னை உலகம் புகழ்ந்து போற்றி உவந்து கொண்டாடும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
கரவு என்பது உள் ஒன்று வைத்து, புறம் வேறு பேசி, செயல் மாறுபடுவது. இது பெருமையைக் குலைத்து மனிதனைச் சிறுமைப்படுத்துமாதலால் சின்னத்தனமாய் எண்ணப்பட்டது. இந்த வஞ்சக்கரவை நெஞ்சத்தில் உடையவன் நேர்மை இலனாய்ச் சீர்மை அழிகின்றான்,
’உள்ளம் கரவாய் உறின் உயிர் அவமே இழியும்‘ என்றது அந்த இாண்டிற்கும் உள்ள உறவுரிமையை இனிது உணர்த்தி உறுதி நிலையை ஊன்றி உணர வந்தது.
கருவிழியில் மறு விழுந்தது போல் நல்ல உள்ளத்தில் கரவு படுதல். அது கண்ணைக் கெடுத்துக் குருடு ஆக்கும்; இது கருத்தைக் கெடுத்து முருடு ஆக்கி விடும். கண் கெட்ட மனிதன் போல், உள்ளம் கெட்ட பொழுது உயிர் ஒளி இழந்து இழிவுறுகின்றது.
புகழ் புண்ணியங்கள் எல்லாம் நல்ல எண்ணங்களால் உளவாகின்றன. அந்த எண்ணங்களுக்கு இடமான உள்ளம் இழித்து படின் எல்லா நலங்களும் ஒருங்கே அழிந்து போகின்றன.
அவமே இழியுமே என்றது நல்ல தவநலங்களை அடைந்து உயர் போகங்களை அனுபவிக்க உரிய ஒள்ளிய உயிர் புல்லிய கரவால் புலைப்படுதலை நினைந்து இரங்கி வருந்திக் கூறப்பட்டது.
பிறரை வஞ்சிக்க நேர்ந்தவன் நேர்மையான தன் நெஞ்சத்தைப் பாழ்படுத்தித் தனது இனிய உயிரைக் கெடுத்தவன் ஆகின்றான். அக்கேடு நேராமல் பீடு பெறுகின்றவனே உண்மையான ஆடவன்; அவனே உயர்ந்த பிறவிப் பேற்றை அடைந்து மகிழ்கின்றான். மனம் செம்மையுறின் நன்மைகள் வருகின்றன.
ஏற்றமான ஆற்றல்கள் எல்லாம் மனிதனது உள்ளத்தையே ஊற்றமாய்க் கொண்டு ஊன்றி நிற்கின்றன; நெஞ்சம் நிலைகுலையின் யாவும் புலையாய் இளிவடைகின்றன.
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
தஞ்சமும் தருமமும் தகவு மேயவர்
நெஞ்சமும் கருமமும் உரையு மேநெடு
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்லநாம்
உஞ்சுமோ? அதற்கொரு குறைஉண் டாகுமோ? 85 கும்பகருணன் வதைப்படலம்
இது இராவணனை நோக்கிக் கும்பகருணன் உரைத்தது. இராமனது தன்மைகளையும், தம் மரயின் புன்மைகளையும் சுட்டிக் காட்டி அப்போர் வீரன் கூறியிருக்கும் இவ் வார்த்தைகளை நாம் ஊன்றி நோக்கி ஓர்ந்து சிந்திக்க வேண்டும்.
நம் எதிரி தரும குணசீலன்; நேர்மையாளன். நாமோ நெஞ்சில் வஞ்சம்; உரையில் பொய்; செயலில் பாவங்களையுடையோம்; நமக்கு இனி உய்தி உண்டோ? நாம் இனி விளங்க மாட்டோம்; அடியோடு அழிந்தே தொலைவோம்’ என மனம் உடைந்து வயிறு எரிந்து இவ்வாறு அவன் பேசியிருக்கிறான். இப்பேச்சில் அவனுடைய உள்ளத்தையும் உணர்ச்சியையும் உறுதியான உண்மை நிலையையும் ஒருங்கே காண்கின்றோம்.
எவ்வளவு வல்லமைகளையும், எத்துணைச் செல்வங்களையும் புறத்தே ஒருவன் எய்தியிருந்தாலும் அகத்தே நல்ல தன்மை இல்லையாயின் அத்தனையும் பாழாய் இழந்து அவன் அழிந்தே போவான் என்பதை இவ்வுரையால் உணர்ந்து கொள்கின்றோம்.
நெஞ்சம் பாழ்படின் மனிதன் சுகமாய் வாழ முடியாது; தாழ்வடைந்து தளர்ந்து வீழ் நிலையனாய் விளிந்தே தொலைவான் என்பது தெளிந்தோர் மொழிகளில் விளங்கி நிற்கின்றது.
வெற்றியும் புகழும் விழுமிய வாழ்க்கையும் உள்ளத்தின் நீர்மையைப் பற்றியே நிலைத்து வருகின்றன; அதனை மாசுபடுத்தாமல் மாண்பு செய்து கொண்டவன் ஈசன் அருளை எய்தி இன்பம் மிகப் பெறுகின்றான்.
‘நினைவும் உரைசெயலும் நேர்மையேல்’ என்றது மனம், மொழி, மெய்கள் யாண்டும் செம்மையாகப் பேண வேண்டும் என்னும் தன்மை தெரிய வந்தது.
அகமும் புறமும் யாதொரு கரவும் சேராமல் யாரிடமும் நேர்மையாய் ஒழுகி வருபவனே சிறந்த சீர்மையாளனாய் உயர்ந்து திகழ்கின்றான்.
“Clear and round dealing is the honour of man’s nature.” (Васon)
'தெளிவான நேர்மை மனித இயல்பில் மிகவும் கண்ணியமானது' என பேக்கன் என்பவர் இங்ஙனம் கூறியிருக்கிறார்.
தன் நெஞ்சில் ஒருவன் கரவு கொண்டால் தொற்று வியாதி போல் பலர் நெஞ்சங்களிலும் அது பரவ நேர்கின்றது; வஞ்சம் படிந்து பல உள்ளங்கள் பாழ்படுவதற்கு இவன் மூல காரணமாகின்றான். அவ்வாறே தான் நேர்மையாளனாயின் அந்நீர்மை பலரும் நேர்மையுறும்படி சீர்மை புரிந்தருள்கின்றது.
தன் உள்ளம் செவ்விதாய்த் திருந்திய பொழுது அம்மனிதனுக்குத் திவ்விய மேன்மைகள் தாமாகவே உளவாகின்றன. ஆகவே எல்லாரும் அவனைப் போற்றி மகிழ்கின்றார்.
’உன்னை உலகம் புகழ்ந்து புனையும்’ என்றது தன்னைச் செம்மையாகத் திருத்திக் கொண்டவனுக்கு இம்மையில் விளைகின்ற நன்மைகளை விளக்கிக் காட்டியது.
வஞ்சமும், சூதும், கரவும், கள்ளமும் மலிந்த உலகத்தில் செம்மையான உள்ளமுடையானைக் காணவே எல்லா உயிர்களும் உவந்து கொண்டாடி உறவாய் விழைந்து கொள்ளுகின்றன.
உன் நெஞ்சம் கோடாமல் யாண்டும் நேர்மையாய் ஒழுகினால்: பஞ்ச பூதங்களும் உன்னைப் பாராட்டி மகிழும் என்பது கருத்து. உள்ளம் தகவுற உயிர் உயர்வுறுகின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர்.