யாருக்குத்தான் போராட்டம் இல்லை

யாருக்குத்தான் போராட்டம் இல்லை?

சே…பாத்ரூம் கிடைக்கறதுக்கு பெரிய போராட்டமே நடத்த வேண்டி யிருக்கு, தலையை துவட்டியபடி அறைக்குள் வந்த மாணிக்கத்திடம் உள்ளே கட்டிலில் உட்கார்ந்திருந்த சோணங்கி “உங்க அம்மா கூப்பிட்டாங்க” அப்புறமா நான் பேசுனதா சொல்லுன்னு சொன்னாங்க,
அம்மா போன் பண்ணினாளா? சட்டென மனதுக்குள் ஒரு ‘திடுக்’ வந்தது, இதுக்காத்தான் இருக்கும் என்று மனசு சொன்னாலும், ஒரு பக்கம் வேற ஏதாச்சும் இருந்தா? என்னும் கேள்வியும் முளைத்தது.
ஏதாச்சும் சொல்லுச்சா? சோணங்கியிடம் கேட்டான்,
ஒண்ணும் சொல்லலை, போனை எடுத்தவுடன் அவனில்லையா? அப்படீன்னு கேட்டுச்சு, குளிக்க போயிருக்கான்னு சொன்னேன், இவ்வளவு நேரமாயிடும்மான்னு கேட்டுச்சு, எங்களுக்கு பாத்ரூம் எப்ப கிடைக்குதோ அப்பத்தான் குளிக்க முடியும்னு சொன்னேன், சரி காலையில சாப்பிட் டீங்களா? அப்படீன்னு கேட்டுச்சு, அதெல்லாம் முடிஞ்சுதுன்னு சொன்னேன்.
சோணங்கியின் முகத்தை பார்த்த மாணிக்கத்தை “வேற என்ன பண்ண சொல்றே? காலையில சாப்பிடலை அப்படீன்னு சொல்ல முடியுமா? நாங்க மதியம் ஒரு நேரந்தான் சாப்பிடறோமுன்னு சொன்னா என்னாகும்? வேண்டாம் அவங்களுக்கு எதுக்கு மன கஷ்டம், அதனால சப்பிட்டாச்சுன்னு சொல்லிட்டேன்.
அவன் சொல்வதும் சரிதான், கம்பியில் தொங்கி கொண்டிருந்த பேண்டை எடுத்து மாட்டி கொண்டான். சட்டையை எடுத்து மாட்டி பொத்தான்களை போட்டபடியே, சரி நான் என்னன்னு கேட்டு வைக்கிறேன், மொட்டை மாடிக்கு செல்போனுடன் ஏறினான்.
இவன் குரல் கேட்டதும் அம்மா குரல் உடைவது போலிருந்தது, சாப்பிட்டியாடா? அந்த தம்பி சொல்றப்பவே பொய்யின்னு தெரிஞ்சுது,
சாப்பிட்டாச்சும்மா, நீ ஏம்மா கவலை படறே?
ஏண்டா எங்களுக்கு ஒரே பையண்டா நீ , இப்படி சினிமா சான்சு வேணும்னு பிடிவாதமா சோறு தண்ணி உங்காம எங்கியோ கிடைக்கறே, எங்களுக்கு வயிறு வாயி எரியாதா?
அம்மாவின் புலம்பல்கள் கேட்டு கேட்டு பழகிவிட்டதால், அம்மா இப்ப எதுக்கு கூப்பிட்ட?, அதை சொல்லு, நான் இங்க நல்லாத்தான் இருக்கேன்.
பாலு மாமா சொன்ன பொண்ணு வீட்டுக்காராங்க உன்னைய பாக்க சென்னைக்கு வர்றாங்க, அதை சொல்றதுக்குத்தான் கூப்பிட்டேன், நாளைக்கு காலையில் ஸ்டேசன்ல இறங்கி உன்னைய பார்க்க வருவாங்க, நீ ஸ்டேசன் போயி அவங்களை கூட்டிட்டு போயிடு.
“அம்மா” உனக்கு எத்தனை வாட்டி சொல்றது? இப்படி கல்யாணம் கல்யாணமுன்னு என் உசிரை வாங்காதன்னு, நான் சொன்னனா எனக்கு கல்யாணம் பண்ணி வையுன்னு, அவங்களை வர வேணாமுன்னு சொல்லிடு.
டேய் என்னைய ஏண்டா வையுறே? உங்க ‘பாலு மாமன்’ கிட்ட பேசு, இப்ப என்ன அவங்க உன்னைய பாக்க வர்றது உனக்கு புடிக்கலையா? இல்லை அந்த பொண்ணையவே புடிக்கலையா?
ஐயோ அம்மா புரிஞ்சுக்க மாட்டேங்கறயே, நான் உங்கிட்ட எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன், எனக்குன்னு “சினிமாவுல” ஒரு வாய்ப்பு கிடைக்கற வரைக்கும் இதை பத்தி பேசகூடாதுன்னு.
அம்மா சட்டென்று கோபமானாள், ஆமாண்டா இப்படி சொல்லி நாலு வருசம் ஓடி போச்சு, நீயும் சினிமாவுல நடிச்ச பாட்ட காணோம், உன்னோட கல்யாணத்தையும் நாங்க பாக்காம போறோமோன்னு பயமாத்தான் இருக்கு.
இதற்கு என்ன பதில் சொல்வது? அதற்கு முன்னால் நாளை வரப்போகும் பொண்ணு வீட்டுக்காரர்களை எப்படி இங்கு கூட்டி வருவது? என்னும் சிந்தனையே மனதுக்குள் ஓடியது.
கிட்டத்தட்ட மூன்று மாடி கொண்ட “சினிமா வாய்ப்பு” தேடி, பல ஊர்களில்,மாவட்டங்களில், மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் நிரம்பிய ஐம்பது அறைகள் கொண்ட உலகம் இது. ஒவ்வொரு அறையிலும் ஐந்தாறு பேர்களாவது படுத்தும் உருண்டும் ஏதோ ஒரு இடம் கிடைத்ததே என்னும் மகிழ்ச்சியில் வசிப்பவர்கள் இதில் இவனும் சோணங்கியும், மேலும் மூன்று பேர்கள் தங்கியிருந்தது இரண்டாவது மாடியில் நான்காவது அறை. சோணங்கி இதில் மிகுந்த நட்பாகிவிட்டதால் இருவரும் நெருக்கமாக பழகி கொண்ட வர்கள். தங்கியிருந்த அறைக்குள்ளோ போட்டது போட்டபடி இருக்கும் அழுக்கான குப்பைகள் நிறைந்த இடம். நாளை மாப்பிள்ளை பார்க்க வந்தவர்களை இங்கு கூட்டி வந்தால், என்னை பற்றி என்ன நினைப்பார்கள்? ஊரில் அம்மா அப்பா இருவரும் கெளவரமாய் இருக்கும்போது இவன்…!
சோணங்கி இதை கேட்டதும் சற்று புன்னகைத்தான். “அடி சக்கை” உனக்காவது உங்க அம்மா “பையன் எப்படி இருந்தாலும்” ஒரு கல்யாணத்தை பண்ணி குடித்தனம் பண்ணறதை பாக்க ஆசைப்படறாங்க. என்னைய சொல்லு இருக்கானா இல்லையான்னு கூட கேட்கமாட்டேங்கறாங்க.
“ச்” நீ வேற ஏண்டா ஏதாவது ஐடியா சொல்லுன்னா..
ஒரு ஐடியாவும் வேண்டாம், அவங்க வந்து நீ தங்கியிருக்கற இடத்தை பார்த்த உடனே முடிவு பண்ணிடுவாங்க, “இவனுக்கு பொண்ணே கொடுக்க வேணாடாமுன்னு” சிரித்தான்.
ஆமா இல்ல, அதுவும் சரிதான், நாளைக்கு வேணுமின்னே இங்க கூட்டி வருவோம், அதுக்கப்புறம் இந்த பேச்சை எடுக்கமாட்டாங்கல்ல, சூப்பர் ஐடியா
இவன் பாராட்டும் அளவுக்கு தான் ஒன்றும் சொல்லவில்லை என்று தெரிந்தாலும் சோணங்கி தலையாட்டி கொண்டான்.
இரவு இவனது செல்போனுக்கு ஒரு அழைப்பு, எடுத்து பார்க்க “பெயர் தெரியாத எண்ணாக தெரிய” “அலோ யாருங்க? கேள்வி கணையுடன் எடுத்து காதில் வைத்தான்.
ஹலோ நாங்க உங்க பாலு மாமாவுக்கு தெரிஞ்சவங்க, நீங்க மாணிக்கம்தானே?
ஆமா..
நாளைக்கு நீங்க ஸ்டேசனுக்கு வர வேண்டாம், நானும் என் சம்சாரமும் நேரா அங்கயே வர்றோம், நீங்க கட்டடத்து வாசல்ல நில்லுங்க அது போதும், சட்டென போன் வைக்கப்பட அதிர்ச்சியானான்
டேய் சோணங்கி அவங்க புருசனும் பொண்டாட்டியுமா வர்றாங்கடா, அதுவும் ஸ்டேசனுக்கு வர வேண்டாம், நாங்க நேராவே வர்றேன்னு சொல்றாங்க, அப்படீன்னா இந்த இடம் அவங்களுக்கு தெரிஞ்ச இடம் போல இருக்கு
சோணங்கியும் திகைத்து “தான் சொன்ன ஐடியாவில்” ஓட்டை விழுந்து விட்டதற்கு வருத்தப்பட்டான்.
காலை ‘ஐந்தரை’ இருக்கலாம், இருவரும் கட்டிடத்து வாசலில் நின்று கொண்டிருக்க, அங்கு வந்த “கால் டாக்சியில்” இருந்து கணவனும் மனைவியுமாக இருவர் இறங்கினார்கள்.
சோணங்கியையும், மாணிக்கத்தையும் புன்னகையுடன் பார்த்தார்கள், இருவருக்கும் வணக்கம் வைத்து விட்டு, மாணிக்கத்தை நோக்கி நீங்கதான மாணிக்கம்?
ஆமா எப்படி கண்டு பிடிச்சீங்க?
உங்கம்மா போட்டோ கொடுத்தாங்க, அதில பார்த்துட்டோம்.
எல்லாம் இந்த அம்மா..வால, மனதுக்குள் பல்லை கடித்தாலும், முகத்தில் போலியாய் பல்லை கட்டினான்.
வாங்க ரூமுக்கு போலாம், அழைத்தான்.
அவன் சொல்வதற்கு முன்பாகவே கணவன் மனைவியுமாக இருவரும் வேகமாக படியேறி கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்துக்கும் சென்று ஒவ்வொரு இடமாக சுற்றி சுற்றி வந்தார்கள்.
அங்கங்கு நின்று கொண்டிருந்தவர்கள் சட்டு சட்டென தாங்கள் கட்டியிருந்த லுங்கிகளை இழுத்து விட்டவண்ணம் ஆச்சர்யமாய் பார்த்தனர்.
நடுத்தர வயதுக்கு மேலுள்ள ஆணும் பெண்ணும் இப்படி இந்த கட்டிடத்துக்குள் சுற்றி வந்தது அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் பின்னாலேயே சுற்றி வந்த சோணங்கிக்கும், மாணிக்கத்திற்கும் தான் வெட்கமாக இருந்தது.
எல்லாம் சுற்றி விட்டு கீழ் தளத்துக்கு வந்தவர்கள் வெளியே வந்தவுடன் பின்னால் வந்தவர்கள் இருவரையும் புன்னகையுடன் திரும்பி பார்த்து கிட்டத்தட்ட இருபத்தி இரண்டு வருசமாச்சு, நானும் உங்களை மாதிரி இந்த கட்டிடத்துல மூணாவது மாடியில இருந்தேன். அப்ப இவங்க என்னை பார்க்க அடிக்கடி இதே நேரத்துல வருவாங்க, நாங்க இரண்டு பேரும் அதோ அங்க இருக்கு பாருங்க “கோயிலு” அங்க போய் உட்கார்ந்து அரை மணி நேரம் பேசிகிட்டிருப்போம்.
இவங்க சென்னைவாசியா?
இல்லை, நம்ம ஊர் பக்கம்தான், எனக்கு எப்படி சினிமாவுல ஒரு ‘ரவுண்டு’ வரணும்னு ஆசையில சென்னையில தங்கியிருந்தேனோ, அதே மாதிரி இவங்களும் சினிமாவுல “காமிராவுமனா” சாதிக்கணும்னு வந்து தங்கியிருந்தாங்க. நானாவது நடிப்பை பத்தி அதிகமா தெரியாம வாய்ப்புக்காக அலைஞ்சுகிட்டிருந்தேன். இவங்க ‘பிலிம் இன்ஸ்டியூட்டுல’ படிச்சு முடிச்சு வாய்ப்புக்காக அலைஞ்சுகிட்டிருந்தாங்க. இரண்டு பேரும் கிட்டத்தட்ட மூணு வருசம் போராடுனோம், அப்பத்தான் இதே மாதிரி ஒரு நாள் “கோயில்ல” வச்சு முடிவு பண்ணோம், சாதிக்கணும்னா “சினிமாவுல” மட்டும்தான் சாதிக்கணுமா? நம்ம ஊருக்கு போயி ஒரு விளம்பர கம்பெனி ஆரம்பிக்கலாம், அப்படீன்னு முடிவு பண்ணிணோம்.
இப்ப எங்க விளம்பர கம்பெனி விளம்பரங்கள் நம்ம ஊருக்குள்ளே வெளிவராத இடமே இல்லையின்னு கொண்டு வந்திட்டோம். அப்பத்தான் உங்க ‘பாலுமாமா’ இவளுக்கு தூரத்து உறவு, அது மட்டுமல்ல எங்களோட ஏஜண்ட், அவருதான் எங்க பொண்ணுக்கு உங்க பையன் சரியா இருக்கும்னு சொன்னாரு, ஆனா அவன் சென்னையில “சினிமாவுல” பெரிசா வரணும்னு அலைஞ்சுகிட்டிருக்கான்னு சொன்னாரு.
நாங்க உடனே முடிவு பண்ணிட்டோம், கண்டிப்பா உங்களை பார்க்கணும்னு, வாங்க வெளியில ஒரு ஓட்டல்ல உட்கார்ந்து மத்ததெல்லாம் பேசலாம்.
மாணிக்கம் ஆட்டுக்குட்டியாய் அவர்கள் பின்னால் சென்று கொண்டிருந்தான், அவனை தொடர்ந்து சோணங்கி “அதிர்ஷ்டம் அடித்தால் இப்படி அடிக்கணும், பையன் கொடுத்து வச்சவன்” மனதுக்குள் நினைத்த வண்ணம் அவன் பின்னால் சென்று கொண்டிருந்தான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (19-May-25, 3:53 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 7

மேலே