எட்டுவழிச் சாலை

எட்டுவழிச்சாலை என்பது
நாகரிகத்தின் வளர்ச்சியல்ல
இயற்கையை அடியோடு அழிக்கும்
அதிகாரவர்க்கத்தின் முயற்சி
இந்த சாலை வந்தால்
வாகனங்கள் பலவும்
காற்றாகப் பறக்கும்
அதே நேரத்தில் -
நம்கோவணங்கள் யாவும்
காற்றோடு பறக்கும்
மரம் நடுவோம்
மழை பெறுவோம் - இது
இயற்கையைப் பேணும்
பொன்னான வாசகம்
மரங்களை வெட்டும்
மனங்கள் இருந்தால்
எல்லோரும் ஏந்த வேண்டும்
இழிவான யாசகம்
நில், கவனி, செல்
மித வேகம்,மிக நன்று
தலைக் கவசம்
உயிர்க்கவசம்
இவையெல்லாம்
சாலை விதிகள்
மணலை எடுத்து
ஆற்றை மூடிடு
ரசாயனம் விதைத்து
வளங்களை சிதைத்திடு
சோலைகள் அழித்து
சாலைகள் அமைத்திடு
இவை யாவும் - இன்றுள்ள
கோழை விதிகள்
இது நன்மையென்று கூறிப்
பாராட்டுபவன் வயிற்றுக்கும்
இது தீமையென்று எதிர்த்துப்
போராடுபவனின் கைகள்தான்
உணவளிக்கவேண்டும்
நாம் உள்ளத்தால்
உணரவேண்டியது
ஒன்றே ஒன்றுதான்
எட்டு வழிச்சாலை
விவசாயிகளுக்கான
ஒரு வழி சுடுகாடு