கஞ்சம் களிக்கும் திருவும் வந்தே அளிக்கும் திருவை அமர்ந்து - தூய்மை, தருமதீபிகை 354
நேரிசை வெண்பா
நெஞ்சம் புனிதம் நிலைபுனிதம் நீயுறையும்
தஞ்சம் புனிதமாய்ச் சார்ந்திருந்தால் - கஞ்சம்
களிக்கும் திருவும் களித்துன்பால் வந்தே
அளிக்கும் திருவை அமர்ந்து. 354
- தூய்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
மனம் வாக்கு, காயம், வாழ்க்கை நிலை, மனோ வாசம் முதலிய யாவும் தூயனவாய் மருவி இருந்தால் திருமகள் உவந்து வந்து உனக்கு பெருமகிழ்வைத் தந்தருளும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
உரை செயல்களுக்கு மூலத்தானமாதலால் நெஞ்சின் புனிதம் முதலில் குறிக்கப்பட்டது. அகம் தூய்மை, புறந்தூய்மைகள் எல்லாவற்றிற்கும் இனிய ஆதாரமாய் இசைந்திருக்கின்றது.
குடியிருக்கும் மனையை நீ உறையும் தஞ்சம் என்றது. வசிக்கும் வீடு, புசிக்கும் உணவு, குடிக்கும் நீர், படிக்கும் நூல் முதலாக அடுத்துள்ள தொழில் நிலைகள் யாவும் புனிதமுடையனவாகப் பேணிவரின் அது மனித வாழ்க்கையின் உயர்தர நிலையில் ஒளி செய்து பேரின்பமாய்ச் சிறந்து விளங்கும்.
அழுக்கும் அசுத்தமும் அருவருப்பானவை. அவற்றில் வெறுப்பில்லாமல் ஒருவன் இருப்பானாகில் அவன் பிறப்பு இழிக்கப்படும். பழக்க வழக்கங்களைக் கொண்டே மனிதன் மதிக்கப்படுகின்றான். செயல்கள் இயல்களின் சாயல்களாய் அயல் வருகின்றன. வெளி வாழ்வு உள் வீழ்வை விளக்கி விடுகிறது.
இழித்த கழிநீர்க் குழிகளை விழைந்து கிடக்கும் பன்றி, நாய்கள் அவற்றின் ஈனப் பிறவியின் இயல்புகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. சார்ந்துள்ள நிலைமைகள் நேர்ந்துள்ள உண்மைகளை ஓர்ந்து கொள்ளச் செய்கின்றன.
அசுத்தங்களில் வெறுப்பின்றி விருப்புற்றுள்ளவர் உயர்ந்த மனிதப் பிறப்பில் தோன்றியிருந்தாலும் அவர் இழிந்த நிலையினர் என்பதைத் தெளிந்து கொள்ளச் செய்கின்றனர்.
உலகில் ஒருவன் பழகிவரும் பழக்கம், வாழ்ந்து வரும் வாழ்க்கை அவனது நிகழ்கால நிலையை உணர்த்துவதோடு அமையாமல் சென்ற காலத்தின் செலவையும், வருங்காலத்தின் வரவையும் தெளிவுறுத்தி நிற்கின்றன.
திருந்திய பண்பும், பெருந்தகைமையும் பரிசுத்த வுணர்வும் மனிதனை மிகவும் உயர்ந்த நிலையில் உயர்த்தியருள்கின்றன. அகம் புனிதமாய் உயர, மனிதன் தனி மகிமை அடைகின்றான். உள்ளம் உயர்ந்து வருகிற மனிதனை உலகம் உவந்து விழைந்து கொள்ளுகின்றது.
“Every step of inward progress makes us worth more to the world.”
'உள்ளம் உயர உயர உலகிற்கு நாம் உதவியாளராகின்றோம்' என்னும் இது ஈண்டு உணரத்தக்கது. ஒருவனுடைய அகத்தின் வளர்ச்சி சகத்திற்கு நன்மையாய்த் தழைத்து வருகின்றது. நல்ல மனித சமுதாயத்திற்கும் மாநிலத்திற்கும் உள்ள உறவுரிமையை இகனால் நன்கு உணர்ந்து கொள்கின்றோம்.
தாமரை மலரில் உவந்து வசிக்கும் இலட்சுமியை ’கஞ்சம் களிக்கும் திரு’ என்றது. கஞ்சம் - தாமரை.
’திரு உன்பால் வந்தமர்ந்து திருவை அளிக்கும்’ என்றது தூய்மையாளர்க்கு உளவாகும் பாக்கியங்களை உணர்த்தி நின்றது. அழகும் பரிசுத்தமும் திருவின் உரிமைகளாதலால் புனிதர்களுக்கு அவள் அருள் இனிது வருகின்றது.
பொருள், போகம், மேன்மை, கீர்த்தி முதலிய உயர்நலங்கள் எல்லாம் உள்ளம் தூயர்க்கு ஒருங்கே உளவாம்.
அசுத்தம் மூதேவிக்கு இடமாதலால் அதனையுடையவர் அல்லலும் வறுமையும் அவமானங்களும் அடைந்து வருந்துகின்றனர். பற்றிய படியே பலன்கள் படிகின்றன.
சுத்தம் சீதேவியின் நிலையமாதலால் அதனையுற்றவர் செல்வம், மகிழ்ச்சி, சீர்த்திகளை எய்திச் சிறந்து நிற்கின்றனர்.
சுத்தம் உடையவனுக்கு இலட்சுமி கடாட்சம் உண்டாகின்றது; ஆகவே இன்ப நலங்கள் யாவும் அவன்பால் அன்பாய் அடைந்து நிற்கின்றன.
பன்னிருசீர் விருத்தம் - இரட்டை ஆசிரிய விருத்தம்
(மா மா காய் காலடிக்கு)
உலகம் புரக்கும் பெருமான்தன்
உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
உவகை அளிக்கும் பேரின்ப
உருவே! எலலாம் உடையாளே!
திலகம் செறிவா ணுதல்கரும்பே'
தேனே! கனிந்த செழுங்கனியே!
தெவிட்டாது அன்பர் உளத்துள்ளே
தித்தித்(து) எழும்ஓர் தெள்ளமுதே!
மலகஞ் சுகத்தேற் கருளளித்த
வாழ்வே என்கண் மணியே,என்
வருத்தம் தவிர்க்க வரும்குருவாம்
வடிவே! ஞான மணிவிளக்கே!
சலகந் தரம்போல் கருணைபொழி
தடங்கண் திருவே! கணமங்கைத்
தாயே சரணம் சரணமிது
தருணம் கருணை தருவாயே, - அருட்பா
திருவின் இயலும் செயலும் இது குறித்துள்ளது.
செல்வ நலங்களுக்கு அதிதேவதையாய் நின்று உயிரினங்களின் தகுதி நோக்கித் திருமகள் இங்ஙனம் அருள் புரிந்து வருதலால் புனித நெஞ்சர்க்கு இனிய தஞ்சமாய் அவள் இசைந்தருளி அரிய இன்ப நலங்களை உரிமையுடன் உதவுகின்றாள்.
தன் இருதயத்தைச் சுத்தம் செய்து கொண்டவன் எல்லாப் பெருமைகளையும் ஒருங்கே பெற்றவன் ஆகின்றான்.
நேரிசை வெண்பா
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமு மெல்லாம் - திருமடந்தை
ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து
போம்போ தவளொடு போம். 29 மூதுரை
வாழ்வின் நலம் எல்லாம் திருவின்பால் உள என்பதும், அவள் அருளால் பொருள் நலங்கள் யாவும் வரும் என்பதும், அவ்வரவு நிலை புண்ணியத்தின் அளவே என்பதும் இதனால் அறியலாகும்.
இத்தகைய பாக்கிய இலட்சுமி மனிதனது உள்ளத் தூய்மையை நோக்கி மகிழ்கின்றாள். தன் உள்ளத்தைப் புனிதமாக்கியுள்ளவன் திருவின் கருணையைத் தனியுரிமையாகப் பெற்றுக் கொள்கின்றான். நெஞ்சத் தூய்மை நிறைந்த பாக்கியமாம்.
நல்ல எண்ணங்களை எண்ணுவதும், எல்லா உயிர்களுக்கும் இரங்கியருள்வதும், இகபர நிலைகளை உணர்வதும் இனிய புண்ணியமாகப் பெருகி வருதலால் அம் மனிதன் புனிதனாய் உயர்கின்றான்.
நேரிசை வெண்பா
இல்லார்க்கொன்(று) ஈயும் உடைமையும் இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள. 68 திரிகடுகம்
உயர்ந்தார் இயல்புகளை இஃது உணர்த்தியுள்ளது.
எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதவன் தருமமூர்த்தியாய்த் தழைத்து வருதலால் அவன் தூய்மையாளனாய்த் துலங்கி நிற்கின்றான். புனித மனம் எவர்க்கும் இனிமை புரிகின்றது.
புண்ணிய கருமங்கள் சித்தத்தைச் சுத்தி செய்து உத்தம நிலையில் உயர்த்தியருள்கின்றது. தூய்மையுடையான் நோய்மையடையான் என்னும் வாய்மையால் அதன் தாய்மை தெளிவாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.