நெஞ்சத்தின் நேர்மை அளவே மானிடன்றன் பார்வை அளவு படும் – நேர்மை, தருமதீபிகை 345
நேரிசை வெண்பா
வஞ்சம் படிந்து மனம்கோட்டம் ஆயினான்
வஞ்சன் கொடியனென வாழ்கின்றான் - நெஞ்சத்தின்
நேர்மை அளவேயிந் நீளுலகில் மானிடன்றன்
பார்வை அளவு படும். 345
– நேர்மை, தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
தன் நெஞ்சில் வஞ்சமும், கொடுமையும் மருவின் அம்மனிதன் வஞ்சன், கொடியன் என நிலவுகின்றான்; நெஞ்சத்தின் நேர்மை அளவே இவ்வுலகில் மானிடன் சீர்மை அடைந்து திகழ்கின்றான்.
மனிதனுடைய எல்லா உயர்நலங்களுக்கும் அவனது உள்ளமே மூலகாரணமாயுள்ளது; அந்த உள்ளத்தின் தகுதி அளவே உலகத்தில் அவன் உலாவி நிற்கின்றான். உள்ளம் பழுதுபடின் மனிதன் இழிந்து பாழ்படுகின்றான்.
விளைவுக்கு உரிய நல்ல வித்தில் புழு விழின் அது யாதும் பயன் இன்றி அழிவுறும்; உயர்வுக்கு உரிய புனித நெஞ்சில் புன்மை விழின் அது எல்லா நன்மைகளையும் இழந்து இழிவுறும்.
மனத்தின் அளவே மனிதன் மதிக்கப் படுகின்றான். நல்லவன், பெரியவன் என்று தன்னை எல்லாரும் சொல்ல வேண்டும் என்றே எந்த மனிதனும் சிந்தையுள் ஆவலாய் முந்தி நிற்கின்றான் அங்ஙனம் உலகம் உவந்து சொல்ல வேண்டுமாயின் நல்ல நீர்மையும் பெருந்தகைமையும் தன்னிடம் அமைந்திருக்க வேண்டுமே என்பதை எவனும் உணர்ந்து கொள்வதில்லை. விதையாமலே விளைவு காண விழையும் இழுதை போலத் தகுதியில்லாமலே மிகுதி பூண விழைவது நகைப்புக்கு இடமாகின்றது.
வஞ்சன், கொடியன் என ஒருவனை நேரே குறித்துச் சொன்னால் அவன் நெஞ்சம் பொறான்; சொன்னவனை வெறுத்து மறுக்கின்றான்; ஆகவே அவை ஈன நிலையின என்று அவன் உள்ளம் உணர்ந்துள்ளமை வெளிப்படுகின்றது; உணர்ந்தும் பழக்க வாசனையால் அத்தீமைகளை ஒழித்து விட முடியாமல் களித்து நிற்கின்றான்.
வஞ்சமும், கொடுமையும் நெஞ்சத்தை இழிவுறுத்துகின்றன: அதனால் மனிதன் இழிந்து பாழ் படுகின்றான்; அங்ஙனம் பாழாகாமல் நல்ல குண நீர்மைகளைப் பேணி வாழவேண்டும்.
நேர்மை அளவே மானிடன் பார்வை. என்றது மனச் செம்மையின் மாட்சியின்படியே காட்சி என்பது காண வந்தது. பண்டங்களைத் துலாக்கோலில் வைத்து நிறுத்து நிறை காண்கின்றோம்; மனிதரை உளக் கோலால் ஓர்ந்து உளவு தெளிகின்றோம்.
செல்வம் புறத்திலும், கல்வி அகத்திலும் நின்று மனிதனை மாட்சிமைப்படுத்தி வரினும், எல்லாவற்றிற்கும் உள்ளப்பண்பே உயிர் நிலையமாய் வேரூன்றி உள்ளுறச் சீர் புரிந்துள்ளது.
நேர்மையான மனமுடையவன் சீர்மையான மனிதனாய்ச் சிறந்து திகழ்கின்றான். ஒரு மனிதனை உண்மையாக அளந்து காண அவனுடைய சொல்லும் செயலும் கருவிகளாய் நிற்பினும் தெளிவான அளவு கருவி மனமேயாம்.
The mind is the standard of the man. - Watts
’மனிதனது நிலை மனத்தில் உள்ளது' என வாட்ஸ் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
I do not distinguish by the eye, but by the mind,
which is the proper judge of the man. - Seneca
*மனத்தால் அன்றிக் கண்ணால் நான் சிறப்படையவில்லை; மனமே மனிதனது சரியான நீதிபதி' என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது. கண்ணினும் மன நிலையைக் கருதித் தெளிய வேண்டும்.
திருந்திய மனத்திலிருந்துதான் சிறந்த பெருந்தகைமைகள் யாவும் விளைந்து வருகின்றன. அவ்விளை நிலத்தைப் பழுது படுத்தாமல் பாதுகாத்துப் பண்படுத்தின் இருமை இன்பங்களும் எளிதின் அடையலாம். நிறை பேரின்பம் உறுதல் கருதி வஞ்சமும் கொடுமையும் படியாமல் நெஞ்சம் பேணுக என நினைவுறுத்துகிறார் கவிராஜ பண்டிதர்,