பழிபாவம் யாதொன்றும் பற்றாமல் என்றும் அழியாத வாழ்வு - தூய்மை, தருமதீபிகை 355
நேரிசை வெண்பா
பழிபாவம் யாதொன்றும் பற்றாமல் என்றும்
அழியாத வாழ்வை அடையின் - ஒழியாத
மெய்யறிவின் நற்பயனை மேவினான் எவ்வுயிர்க்கும்
ஐயன் அவனே அறி. 355
- தூய்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
பழிபாவங்கள் யாதும்.அணுகாமல் ஒழுகி என்றும் அழியாத வாழ்வை ஒருவன் அடையின், அவனே பிறவியின் உண்மையான உயர் பயனைப் பெற்றவனாவான்; எவ்வுயிர்க்கும் தலைவனாய்த் திவ்விய நிலையில் நிலவி விளங்குவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
புகழ், புண்ணியங்கள் இகத்திலும் பரத்திலும் உயிர்களுக்கு உயர்நலங்களை நல்கி அருள்கின்றன; ஆகையால் அவை ஆன்ம அமுதங்களாய் அமைந்து யாண்டும் மேன்மைகள் மிகுந்தன.
பழிபாவங்கள் இங்கும் அங்கும் எங்கும் இழி துயரங்களையே விளைத்து வருதலால் அவை கொடிய விடங்களாகக் கருதப்பட்டுள்ளன. புண்ணியத்தை விடுத்துப் பாவத்தை அடுப்பது அமுதத்தை ஒழித்து நஞ்சைக் குடிப்பது போல் நாசமேயாகும்.
பிற உயிர்களுக்குத் துயரமானவைகளை ஒருவன் செய்வானாயின் அவன் பாவி ஆகின்றான்; அத்தீவினையாளனை யாவரும் இகழ்ந்து வெறுக்கின்றனர்; அங்ஙனம் பழியும் பாவமும் வளரின் அவ்வுயிர் ஒளியிழந்து இழிவுறுகின்றது.
அவ்வாறு இழிவு நேராமல் வாழ்பவனே உயர் வாழ்வுடையனாய் ஒளி மிகப் பெறுகின்றான். அப்பேறே அரிய பிறவியின் பெரிய பயனாய் இனிமை புரிகின்றது.
பழி, பாவம் பற்றின் அது இழிவான அழி வாழ்வாமாதலால் அவை பற்றாதது அழியா வாழ்வு என வந்தது.
தான் எடுத்த பிறப்பைச் சிறப்பாக்கி என்.றும் குன்றாத ஆனந்த நிலையை எய்துகின்றவன் வாழ்வின் உயர்ந்த ஊதியத்தைப் பெற்றவன் ஆகின்றான்.
தத்துவ ஞானத்தால் அடையத்தக்க உத்தம நலனை அடைந்த முத்தனை ’மெய் அறிவின் நற்பயனை மேவினான்’ என்றது. பொய் அறிவு மையல் மிகவுடையது; வெய்ய நிலைகளை விழைந்து திரிவதாதலால் அஃதில்லாதது ’மெய்யறிவு’ என வந்தது.
தீய நினைவுகள் ஒழியவே உள்ளம் தூய்மை அடைகின்றது, அந்த மனத்தூய்மையால் உணர்வு ஒளி மிகப் பெறுகின்றது; அதனால் உயர் பேரின்பம் உளவாகின்றது. உள்ளத்தே தூய்மையுடையவன் எல்லா நலங்களையும் ஒருங்கே எய்தி மகிழ்கின்றான்.
’ய்’ ஆசிடையிட்ட எதுகையமைந்த இன்னிசை வெண்பா
தூ’ய்’மை யுடைமை துணிவாம் தொழிலகற்றும்
வா’ய்’மை யுடைமை வனப்பாகும் - தீமை
மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றும்
தவத்தில் தருக்கினார் கோள். 78 திரிகடுகம்
தூய்மை தலைமையான தவம்; வாய்மையும், தீமை செய்யாமையும் அதன் இனிய துணைகள் என இது குறித்திருக்கிறது. எண்ணமும் செயல்களும் புண்ணிய நிலைகளில் வளரவே அம்மனிதன் தரும தேவதையாய்த் தழைத்து வருகின்றான்; அதனால், மனித இனத்துள் அவன் தனியான ஒரு புனித சீலனாய்ப் பொலிந்து விளங்குகின்றான்.
எவ்வுயிர்க்கும் ஐயன் அவன். என்றது தன் உயிரைப் புனிதப்படுத்தினவன் மன்னுயிர்க்கெல்லாம் இனியனாகின்றான்; அதனால், தாயை நினைந்து போற்றும் சேய்கள் போல் அத்தூயனைப் புகழ்ந்து போற்றி யாவும் உவந்து கொள்கின்றன. அவ்வுண்மையும் உரிமையும் உயர்வும் உணர வந்தது.
நெஞ்சம் வஞ்சமாய் மாசுறின் ஈசன் அருளை.அவன் இழந்து கெடுகின்றான்; தூய்மையாயின் தேசு மிகுந்து தெய்வத்தன்மை பெறுகின்றான். தூய்மை கடவுள் தன்மையாதலால் அதனையுடையவன் எவ்வளவு பாக்கியவான் என்பதை எளிது தெளிந்து கொள்ளலாம். தூயான் என்றே கடவுளுக்கு ஒரு பெயர்.
எண்சீர் விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
தோன்றிய எவ்வுயிர்க்குந் துணையாய் நின்ற
தாயானைச் சக்கரமாற் கீந்தான் தன்னைச்
சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும்
வாயானை மந்திரிப்பார் மனத்து ளானை
வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச்
சேயானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. 4 திருவீழிமிழலை, திருநாவுக்கரசர் தேவாரம், ஆறாம் திருமுறை
உள்ளம் தூயராய் இறைவனை எண்ணி உருகாதவர் அல்லல் நிலைகளில் அலமந்துழல்வார் என இது அறிவுறுத்தியுள்ளது
உன் அகத்தைத் தூய்மை செய்; அதிசய மகிமையை அடைந்து உலகம் எல்லாம் துதி செய்து வணங்க நீ உயர்த்து விளங்குவாய் என்கிறார் கவிராஜ பண்டிதர்.