நம்பிக்கை மனிதர்கள் 5 - கவிஞர் சல்மா

அடுக்கு மொழிகளையோ , அலங்கார வார்த்தைகளையோ , அழகுணர்ச்சியையோ கவிதையாக சொல்லப்படுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, வேறு தளத்தில் , வலி நிறைந்த துயரங்களை எளிய மொழியில் தம் கவிதைகளாய் எழுதியவர்.

தனது 13 ஆம் வயதில் இருந்து வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு , வெறும் ,ஒற்றை ஜன்னல் மட்டுமே வெளியுலக தொடர்பாக கொண்டு , ரகசியமாக கவிதைகளை எழுதி , எழுதும் காரணத்திற்காகவே அடக்குமுறைகளை சந்தித்த போராட்ட வாழ்க்கையை வாழ்ந்து, அதனை தன் எழுத்தை ,நம்பிக்கையை மட்டுமே கொண்டு வென்று காண்பித்தவர் "போராளி" ," கவிஞர்" , "சாதனைப் பெண்மணி " தோழர் சல்மா அவர்கள் .

கிடைக்கும் துண்டு காகிதங்களில் நடுநிசியிலும் , கிடைக்கும் நேரத்தில் கழிப்பறையில் நின்றுகொண்டும் கவிதைகள் எழுதியவர் இவர் .பெண்களின் சொல்லாத துயர்களை துணிந்து தம் கவிதை மூலம் சொல்லும் இவர் நவீன தமிழ்க் கவிதை உலகத்தின் முன்னணி படைப்பாளி .

இவரது கவிதை தொகுப்புகளான ஒரு மாலையும் இன்னொரு மாலையும் , பச்சை தேவதை , சிறுகதைகளின் தொகுப்பான "சாபம்" நெடுங்கதைகள் " இரண்டாம் ஜாமங்களின் கதை " , "மனமியங்கள் " போன்றவை ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பற்றிருக்கின்றன .


"நம்பிக்கை இன்னும் மீதமிருக்கிறது " - "your hope is Remaining " என்னும் தன்னார்வ அமைப்பை 2010 இல் தொடங்கி சம உரிமைக்காகவும் , பெண்களின் மீதான அடக்கு முறைக்கு எதிராகவும் தொடர்ந்து இயங்கி வருபவர்.இந்த அமைப்பு, பெண் குழந்தைகளுக்கான கல்வி ஆலோசனைகளையும் , சீருடைகளையும் இலவசமாக கொடுத்தல் , விளிம்பு நிலை மக்களுக்காக சுகாதார முகாம்களை நடத்துதல் , குழந்தை திருமணங்களை தடுத்தல் , கல்வி நிறுவனங்களின் மூலமாக பெண்கள் உரிமைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என ஆக்கப்பூர்வமாக செயலாற்றி வருகிறது . இந்த அமைப்பின் பல்வேறு செயல்பாடுகளை yourhopeisremaining என்ற இணையதள முகவரியில் அறியலாம் .மறவாமல் அனைவரும் சென்று பாருங்கள் .

இவரது வாழ்கை "சல்மா " என்ற பெயரிலேயே படமாகவும் வந்திருக்கிறது .இங்கிலாந்தை சார்ந்த "கிம் லாங்-கி-நாட்டோ " அவர்களால் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகெங்கிலும் உள்ள திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டும் , அவ்விழாக்களில் பாராட்டுகளும் விருதுகளும் வாங்கிக் குவித்துள்ளது .

இவர் தமிழ்நாடு சமூக நல வாரியத்தின் தலைவராகவும் , பொன்னம்பட்டி துவரங்குறிச்சி பேரூராட்சி தலைவராகவும் இருந்துள்ளார் . சமூக சேவைக்காக 2018 ம் ஆண்டிற்கான பெரியார் விருதையும் , 2019 ஆம் ஆண்டிற்கான மகாகவி கன்னையாலால் சேதியா இலக்கிய விருதையும் பெற்றவர் .

மிச்சிகன் தமிழ் சங்கத்தின் சார்பாக நடந்த , கவியரங்கத்திற்கு தலைமை ஏற்று நடத்திய அவரிடம் கவியிரங்கத்திற்கு முன்பும் , பின்பும் , கவிதையை பற்றி , அது எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி , தற்கால அரசியில் சூழல் பற்றி , எப்படி ஒரு சித்தாந்தம் கட்டமைக்கப்படுகிறது என்ற சான்றுகளை பற்றி , செயல்பட வேண்டிய அவசியத்தையும் , தமிழகம் எதிர் கொள்ள இருக்கும் பிரச்சனைகளையும் பற்றி என ஒரு நீண்ட உரையாடல் நடத்தும் வாய்ப்பு கிடைத்தது ,

கவிதை ஒரு போராட்ட வடிவம் , கதையோ ,கட்டுரையோ போராட்ட களத்தில் முன்னெடுக்கப் படுவதில்லை . உங்கள் கவிதைகள் அனுபவத்தில் இருந்து வர வேண்டும் , அவை அரசியில் பேச வேண்டும் என்றார் .

எழுதியவர் : பாவி (21-Jul-19, 7:55 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 248

சிறந்த கட்டுரைகள்

மேலே