வெல்வோமே

ஈன்ற தாயின் கருணையினால்
இந்த மண்ணில் பிறப்பெடுத்தோம் !
நான்தான் என்ற ஆணவத்தில்
நாளு முழன்று திரிகின்றோம் !
ஆன்றோர் வகுத்த வழியினிலே
அகந்தை யின்றி நடைபோட்டு
வான்போல் பரந்த உளத்தோடு
வாழ்ந்தால் வாழ்வு வரமாகும் !!

செருக்கை விரட்டி அன்பாலே
தெளிந்த அறிவைப் பெறவேண்டும் !
பெருமை மிக்க பண்பாட்டைப்
பேறென் றெண்ணிக் காக்கவேண்டும் !
வருத்தம் நீக்கும் வகையுணர்ந்து
வாட்டம் தணிவித் திடவேண்டும் !
இருக்கும் வரையில் இல்லாருக்(கு)
இயன்ற உதவி செயவேண்டும் !

கூட்டிக் கழித்துப் பார்த்திட்டால்
கூற்றன் வந்து நமையழைக்கப்
பூட்டி வைத்த பொன்பொருளும்
புரிதல் மிக்க உறவுகளும்
கூட்டை விடுத்துப் போகையிலே
கூடத் துணையாய் வருவதில்லை !
ஆட்டம் அடங்கி விடுமுன்னே
ஐந்த டக்கி வெல்வோமே !!


மா மா காய் ( அரையடிக்கு )
அறுசீர் விருத்தம்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Jul-19, 1:31 am)
பார்வை : 111

மேலே