சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த ஊர்தி

சிற்றுந்து உண்டு சென்னையில் செல்ல.
சந்து பொந்து நுழைந்தோடி விரைய.
பேருந்து உண்டு பேரூர் செல்ல.
பட்டி தொட்டி பட்டணத்தை இணைக்கும்.
மகிழுந்தும் உண்டு, மகிழ்வாய் விரைய.
வானேறி பறக்க வானூர்தியும் உண்டு.
விரைந்தோடும் தொடர்வண்டி நகரெங்குமுண்டு
நுழைந்தோடும் ஆட்டோ தெரு ஓரமுண்டு
எல்லோரும் ஏங்கும் ஒரு ஊர்தி உண்டாம்.
வல்லோரும் வேண்டும் சிறு ஊர்தி கண்டோம்.
நல்லோரும் பொல்லாரும் வேண்டும் ஒன்றாம்.
சென்னை குடிநீர் வாரிய ஊர்தி அன்றோ ?
பற்றாக்குறை காலத்தில் பாங்கே தோன்றிடுவாய்.
பெருமழை காலத்தில் பணிவாய் ஒதுங்கிடுவாய்.
வற்றா ஜீவநீர் நகர் முழுக்க நல்கிடுவாய்.
அரும்பணி ஆற்றி நகரையே நிறைத்திடுவாய்.
ஊசி நுழையவும் ஒரு துளி இடமின்றியும்
அதிரடி காட்டி ஆர்ப்பரித்து விரைந்திடுவாய்
பேசி பதறாது பெரும் வண்டிகளை விலக்கிடுவாய்
பதிலடி காட்ட எவருக்கும் மனம் உண்டோ?
நெடுங்கால திட்டம் மறந்ததோர் கூட்டம்
நீர் ஆதாரம் நலிந்தே மறைந்தோட விட்டோம்
கடுங்கோனின் ஆட்டமாய் தினமொரு சட்டம்
தெருவெலாம் ஓடும் தென்தமிழர் கூட்டம் -நீர் தேடி.
வருணனாய் வருவாய் நீர் ஈந்து பல நேரம்.
வெறும் எமனாய் விரைவாய், உயிர்கொண்டு சில நேரம்.
அருமை அறிந்தோம்; அனைவரும் ஏற்றோம்.
பெரும் பணி ஆற்றிடுவாய்; பெருநகரை காத்திடுவாய்.