‘கள்ளக் கணக்கு’ கவிதை சொல்லுமா… – ரஞ்ஜனி சுப்ரமணியம் –

வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை, அழகுகளை, அவலங்களை தேசம் கடந்த உணர்வுடன் மனக்காட்சி தன்னில் பதிய வைக்கும் ‘கள்ளக்கணக்கு’ சிறுகதைத் தொகுதியும் எனக்கு கவித்துவம் மிகுந்ததாகவே தோன்றுகின்றது. ஓரு நல்ல படைப்பாளியை இனங்காண பரந்துபட்ட வாசிப்பு அனுபவமும் வித்துவத்துவமும் வாசகருக்குத் தேவையா? என்ற கேள்விக்கு, இல்லை என்ற பதிலைத் தருவது இந்நூலின் சிறப்பாகும். காரணம், அப்பேர்ப்பட்ட உயரிய ரசனையையும் ஜனரஞ்சக அறிவூட்டலையும், பற்பல நாடுகள் தழுவிய 13 சிறுகதைகள் மூலம் ஒட்டுமொத்தமாக ‘கள்ளக்கணக்கு’ என்ற ஒரே நூலின் மூலம், பெற்றுக்கொள்ள முடிகிறது என்பது என் மனக்கணக்கு.

இந்தப் படைப்பின் கர்த்தா பேராசிரியர் ஆசி.கந்தராஜா அவர்கள். இச்சிறுகதைத் தொகுப்பு ‘காலச்சுவடு’ பதிப்பகத்தின் வெளியீடு. எழுத்தாளரின் படைப்புகளில் மிகச் சிறந்தவையாகக் கருதப்பட்ட 13 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அருமையான, அறிவு பூர்வமான தொகுப்பு. இதை வாசித்து முடிக்கும்போது உலகைச் சுற்றி ஒரு வலம் வந்தது போன்ற உணர்வு கிடைக்கின்றது. மனிதரில் இத்தனை நிறங்களா? மன உணர்வுகளில் இத்தனை விதங்களா? என்ற மயக்கமும் ஒருங்கே தோன்றுகிறது.

பேராசிரியர் ஆசி.கந்தராஜா அவர்களின் படைப்புத் திறமையை கடந்த 4 ஆண்டுகளாகத்தான் நான் அறிந்திருக்கின்றேன் என்பது எனது அறியாமை. ஆனால் அறிந்தபின் எனது அபிமானத்துக்குரிய எழுத்தாளராக உயரிய இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கின்றார்.

ஆசி.கந்தராஜா அவர்கள் ஈழத்தில் பிறந்து உயர் கல்வியைப் புலமைப்பரிசில் மூலம் ஜெர்மனியில் பெற்று, இன்று ஆஸ்திரேலியப் பிரஜையாக பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்து வாழ்பவர். கல்வியில் பூங்கனியியல், உயிரியல் தொழில்நுட்பப் பேராசிரியராகவும் உணர்வில் இன்றும் தான் பிறந்த கைதடி மண்ணின் மைந்தராகவும் வாழ்பவர். தந்தையாரின் தமிழறிவும் தான் உயர்கல்வி பயின்ற ஜெர்மன் மொழியறிவும் ஒருங்கே வசப்படும் பேரதிர்ஷ்டம் பெற்றவர். இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வருகைதரு பேராசிரியராகச் சென்று சிறப்பு விரிவுரைகளையும் பயிற்சி வகுப்புக்களையும் நடாத்தியவர். தான் சென்று வந்த மக்களின் கல்வி, கலை, கலாச்சாரம், அரசியல், தொழில்நுட்பம், விஞ்ஞான வளர்ச்சி என்பன அவரது கதைகளுக்கு கருவூலமாயின. அதுவும் தேர்ந்த கலையழகுடன். இன்று தனது பணி ஓய்வுநிலையில், இளமைக்காலத்தில் இடைவெளி விட்டிருந்த எழுத்துப் பணியை பேரெழுச்சியுடன் தொடர்பவர். கல்விமான், எழுத்தாளர், நூலாசிரியர், வானொலி அறிவிப்பாளர், நாடகக் கலைஞர் என பன்முக ஆளுமைகளுக்குச் சொந்தக்காரர். மனதை வசப்படுத்தும் எழுத்துநடை, எழுத்துக்கு உரமூட்டும் தேர்ந்த அறிவு முதிர்ச்சி, வெவ்வேறு துறைசார்ந்த அனுபவங்கள் என்பன இவரது எழுத்துக்கு அழுத்தம் சேர்ப்பவை. இதனால் படித்தவர் பாமரர் என பரந்துபட்ட வாசகர் வட்டத்தை தன்வயப்படுத்தி வைத்திருப்பவர்.

thumbnail_Ranjini[2]ஆசிரியரின் ஆக்கங்களில் பொதுவான சில இயல்புகளை இனம் காணலாம். மனதை மயக்கும் மண்வாசனையையும், மேற்கு நாடுகளின் மேம்பட்ட நாகரிக வளர்ச்சியையும் மிகச்சரியான விகிதாசாரத்தில் கலந்து மிதமான போதையும் புத்தறிவும் தருவதில் சமர்த்தர். சிக்கலான விஞ்ஞான விடயங்களையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவையுணர்வுடன் கூறுவதில் வல்லவர். இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் தனது கதைகளில் கதை சொல்லியாகவோ அன்றி பிரதான பாத்திரமேற்றோ கூடுவிட்டுக் கூடு பாய்ந்தோ கதாசிரியர் ஆங்காங்கே தலைகாட்டுவார். தனக்கே இயல்பான நகைச்சுவை, நக்கல், நையாண்டி தொனிக்க தன் மனது மறக்காத மண்வாசனை மிகுந்த வட்டாரச் சொற்கள், ஒருசில தமிழ் ‘சிலேடை’ சொற்கள் என்பவற்றையும் அங்குமிங்குமாக தேவையறிந்து ரசிப்புக்குரிய விதத்தில் அள்ளித் தெளிப்பது அநாயாசம். பல சமயங்களில் கொடுப்புக்குள் கள்ளச்சிரிப்புடன் கதையின் சந்துபொந்துகளில் இவரைக் காணலாம். சமூக விழுமியங்களுக்கு ஒவ்வாத சில விடயங்களில் முடிவுகளை வாசகரின் ஊகத்துக்கே விட்டுவிட்டு ஒரு பார்வையாளராகவும் வீற்றிருப்பார். சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை அல்லவா? புனைவுக் கட்டுரைகளில் தன் துறைசார்ந்த ஆலோசனைகள், விஞ்ஞான விளக்கங்கள் என்பவற்றையும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சேர்த்துக் கொள்வார்.

கள்ளக்கணக்கு எனும் சிறுகதைத் தொகுப்பில் 10க்கும் மேற்பட்ட உலக நாடுகளைத் தளமாகக் கொண்ட 13 சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. இவ்வளவு நாடுகளின் பின்னணிகளை உள்வாங்கி கதை புனைவது ஒரு அறிவுஜீவியினால் மட்டுமே சாத்தியம். இந்த மாபெரும் திறமையை மலைப்புடன் ரசிக்க மட்டுமே நம்மால் முடிகிறது. இந்தத் தொகுப்பில் எனக்குப் பிடித்த பல கதைகளுள் இரண்டு கதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. ஓன்று, இரு வேறுபட்ட நிகழ்வுகளை ஒன்றாக்கி இணைத்துக் கதாசிரியர் போடும் இறுக்கமான, உருக்கமான முடிச்சுக்காக. மற்றது, மனது ஒப்புக்கொள்ள மறுக்கும் மாறுபட்ட கலாசார விழுமியத்தை நியாயமாக உணரச்செய்யும் ஆசியரின் அணுகுமுறைக்காக. காளைகளுக்கும் கடுவன் நாய்களுக்கும் ‘நலமடித்தல்’ எனும் கைங்கரியத்தை செய்யும் சின்னக்கண்ணுவின் தொழில் லாவகங்களை விலாவாரியாக விபரித்து அந்த வாயில்லா ஜீவன்களின் அவஸ்தையின் அவலக் குரலை நேரில் நின்று பார்ப்பது போன்ற உணர்வினை ஆசிரியர் ஏற்படுத்தும் போதே, ஏன் எதற்கு என்ற சஞ்சலத்துடன் சங்கோஜமும் சேர்ந்த கேள்வி வாசகருக்கு எழுகிறது. இயக்கத்தில் இருக்கும் சின்னக்கண்ணுவின் மகன் சந்திரன் பற்றியும் இயக்க இரகசியங்கள் பற்றியும் அறிவதற்காக ஆமியால் பிடிக்கப்பட்டு ஆமி காம்ப்பில் அதேவகையான சித்திரவதைகளைக் கொடூரமாக அனுபவித்து விதைகள் வீங்கிய நிலையில் நடக்கமுடியாமல் தவழ்ந்துவரும் சின்னக்கண்ணுவைக் காணும்போதுதான் கதைஞர் கச்சிதமாய் போட்ட முடிச்சின் ‘சூக்குமம்’ அவிழ்கிறது.

மற்றது, ‘வெள்ளிக்கிழமை விரதம்’! கற்பு என்பது மனம் சம்பந்தப்பட்டது மட்டுமே என்னும் உயரிய தத்துவத்தைக் கூறும் கதை. பெற்றவருக்கு ‘மணப்பெண்கூலி’ கொடுத்து மணமகளைப்பெறும் வழக்கமுடைய ஆபிரிக்காவைத் தளமாகக் கொண்ட கதை. தன் தந்தை கேட்கும் ‘மணப்பெண்கூலி’யைத் தன் காதலனால் சம்பாதிக்கவே முடியாது என்பதை உணர்ந்து, குளோரியா என்ற பெண் தன் உடலை விற்று பணம் சேர்த்து காதலனுக்கு கொடுக்க நினைக்கிறாள். களங்கமில்லாத தன் மனதைக் காதலனுக்காக வைத்திருக்கிறாள். நமது சமூக விழுமியங்கள் இதனை ஒத்துக்கொள்ளாது என்பதை ஒருபுறம் தள்ளிவிட்டுப் பார்த்தால், இது காதலின் உயர்வைச் சொல்லும் ஒரு மாறுபட்ட நோக்கு. இக்கதையை வாசிக்கும் போது உறுத்தலாய் ஒரு எண்ண ஓட்டம். அதாவது, நமது நாட்டிலும் இதேபோல மணமகனை வளர்த்துப் படிப்பித்து விட்டதற்காக ‘மணமகன்கூலி’ சீதனம், டொனேஷன் என்ற பெயரில் பெறப்படுகிறதே? பெற்றோரின் கடன் தீர்க்க இங்குள்ள ஆண்களும் நல்ல தொகைக்கு விலை போகிறார்கள். ஆனால் ஆணைவிட எந்தவகையிலும் குறைவில்லாத பெண் தன்னைப் பெற்று வளர்த்துப் படிக்கவைத்து நல்ல நிலைக்கு உயர்த்திய தன் பெற்றோரின் கடன் தீர்க்க என்ன செய்ய முடியும்? என்ற கேள்விக்கு ‘ஏடாகூடமாய்’ ஏதும் பதில் எழுதாமல் இருப்பதே நல்லது எனத்தோன்றுகிறது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில், பேராசிரியர் ஆசி. கந்தராஜா அவர்களின் பிறந்த மண்ணும் வாழும் மண்ணும் அவரை எண்ணிப் பெருமை கொள்ளலாம். உலகெங்குமுள்ள மனிதர்களின் உணர்வுகளைப் படித்தவர் என்பதாலோ என்னவோ இத்தனை உச்சங்களைத் தொட்டபோதும் இதயத்தால் எளிமை காப்பவர். இறைவன் அவருக்கு இன்னும் பல உயர்வுகளைத் தரவேண்டும். புதுப்புதுப் படைப்புக்களை அவர் எமக்குத் தரவேண்டும். மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்றென்றும்!

– ரஞ்ஜனி சுப்ரமணியம் – Gnanam December 2018

எழுதியவர் : ரஞ்ஜனி சுப்ரமணியம் – (29-Jul-19, 5:23 pm)
பார்வை : 53

மேலே