சீலங்கள் எடுத்து மொழிந்தாலும் வெவ்வினையர் கேளார் - வாழ்நாள், தருமதீபிகை 435

நேரிசை வெண்பா

காலன்வாய்ப் பட்ட கவளம்போல் உள்ளாய்,நின்
மூலம் அறிந்துய்க முன்என்று - சீலங்கள்
எவ்வளவோ கோடி எடுத்து மொழிந்தாலும்
வெவ்வினையர் கேளார் விரைந்து. 435

- வாழ்நாள், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நீ காலன் வாயில் அகப்பட்ட கவளம் போல் இருக்கின்றாய்! உனது நிலைமையை உணர்ந்து உய்தி காணுக என எவ்வளவோ உண்மைகளை மேலோர் இரங்கி உரைத்தாலும் தீவினையாளர் விரைந்து கேளார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தனது நிலைமையைத் தானாக உணர்ந்து கொள்பவன் உத்தமன்; பிறர் உணர்த்த உணர்பவன் மத்திமன்; உணர்த்தியும் உணராதவன் அதமன். இந்த அதம நிலைமைகள் உலகத்தில் படர்ந்துள்ள விதங்களை நினைந்து இப்பாசுரம் வருந்தி வந்துள்ளது.

சீவர்களுடைய தோற்றங்களும் மறைவுகளும் இயற்கை நியமங்களாய் யாண்டும் நிகழ்ந்து நிலவுகின்றன. பிறந்து வருகிற பிராணிகள் எல்லாம் இறந்து மறைகின்றன. இன்று இவ்வுலகில் காணுகின்ற சீவகோடிகளை நூறு ஆண்டுகள் கழித்து வந்து பார்த்தால் ஒன்றையுமே காண முடியாது. யாவும் புதியனவே காணப்படும். இறப்புகளுக்கெல்லாம் பிறப்புகள் ஈடு செய்து வருகின்றன. மேலே எறிந்த கல் கீழே விழுதல் போல் பிறந்து எழுவது இறந்து விழுவதற்கே உரிமையாய் இசைந்திருக்கின்றது.

“Our birth is nothing but our death begun.” (Young)

'நம் பிறப்பு நமது இறப்பின் ஆரம்பமே அன்றி வேது ஒன்றும் இல்லை” என்பது ஈண்டு எண்ணத்தக்கது.

Death borders upon our birth. - Bishop Hall

'இறப்பு பிறப்பின் அருகானது' என பிஷப் ஹால் என்பவர் இவ்வாறு உரைத்திருக்கிறார் மரணத்தைக் குறித்து மேல்நாட்டார் கருதியுள்ளமை இவற்றால் அறியலாகும்.

’காலன் வாய்ப்பட்ட கவளம்போல் உள்ளாய்’ என்றது மனிதனது உண்மை நிலையை உணர வந்தது.

பகல் இரவாய் நாள் கழிந்து கொண்டே வருகிறது; ஆள் அழிந்து கொண்டே வருகிறான். எமன்வாய் இரையாயுள்ளமையை அவன் உணராமையால் உள்ளம் களித்து நிற்கின்றான்.

கவளம் - வாயில் கொள்ளும் உணவுத் திரளை. வாயுள் வைத்த கவளம் உளளே விழுங்கப் படுதல்போல் மனிதன் ஆயுள் முடிந்து அழிகின்றான். தனது நிலைமையைக் கருதியுணர்ந்து விரைந்து கதிநலம் காண ’காலன் வாய்க் கவளம்’ என்று காட்டியது.

நேரிசை வெண்பா

தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் ; ஆற்ற
அறஞ்செய்(து) அருளுடையீர் ஆகுமின்; யாரும்
பிறந்தும் பிறவாதார் இல். 7 செல்வம் நிலையாமை, நாலடியார்

உங்கள் வாழ்நாளை எமன் உண்டு வருகிறான். இந்த உண்மையைக் கண்டு உய்தி பெறுங்கள் என இது உணர்த்தியுள்ளது. சூரியனை நாழியாக் கொண்டு மக்களுடைய ஆயுளை மொண்டு கூற்றுவன் நாளும் உண்ணுகின்றான் என்னும் இவ் வுருவகம் தெளிவான உணர்வுக் காட்சியாய் வெளியாகி நின்றது. பகல் இரவுகள் கழிவதை உயிரழிவதாகக் கருதி உணர்ந்து தருமம் தழுவி அருளுடையராய் உயர்வடைய வேண்டும்.

தன்னுடைய அபாய நிலையை உணர்ந்து உயிர்க்கு உபாயம் தேடிக் கொள்ளுகின்றவனே உண்மை உணர்வுடையவனாய் நன்மை அடைகின்றான்; இம்மையும் மறுமையும் அவனுக்கு இனிமை ஆகின்றன. மெய்யுணர்வு, தத்துவ ஞானம் என்பன எவை? அவை எங்கே உள்ளன? அந்த நாமங்களைக் கேட்டவுடன் நாம் வியந்து கொண்டாடி மகிழ்ந்து கொள்கின்றோம்.

தன் உயிர்க்கு உய்தி செய்து கொள்ளுகின்றவன் எவனோ அவனே தத்துவஞானி ஆகின்றான். பிறவித் துன்பங்கள் நீங்கி என்றும் குன்றாத இன்ப நிலையை அடைவதே சீவன்முத்தி என மேவி மிளிர்கினறது. ஆன்ம சாந்தி மேலான ஆனந்தமுடையது.

உடல் அழிந்து விழுமுன் உயிர்க்கு ஆவதை அறிந்து கொள்ளாதவர் அவமே கழிந்து அநியாயமாய் ஒழிகின்றார்,

உரிய கருவி உள்ள பொழுதே அரிய பயனை அடைந்து கொள்ள வேண்டும்; அங்ஙனம் அடையாவழி அவலங்கள் மிக அடையுமாதலால் ஆயுள் அளவையும், அழிவையும் விழிதெளிய நூல்கள் விளக்கியருள்கின்றன. வழி தெரிந்து போக வேண்டும்.

காலன் வாயிலிருந்து எவ்வழியும் யாதும் தப்ப முடியாத நிலையிலுள்ள மக்கள் உய்யும் வழி நாடாமல் இருப்பது ஊனமாய் முடிதலால் அது ஈன மடமையாய் இழிக்கப்பட்டது.

கொலைத் தண்டனை அடைந்த ஒருவனைக் கொல்லும் பொருட்டுக் கொலைக் களத்திற்குக் கொண்டு போயினர். குறித்த நேரம் வந்தது; அங்கே.அவன் தலையை வெட்டி வீழ்த்த நிலையான கொலையாளிகள் கூரிய வாள்களை ஓங்கி நின்றார், அந்தப் பரிதாப நிலையைப் பார்க்க விரும்பிய சனத்திரள் அச்சமும் திகிலும் உடையராய் அயலே திரண்டு நின்றனர். வெட்டு எப்பொழுது கழுத்தில் விழுமோ என்று விழித்த கண் இமையாமல் வெருவி நிற்குங்கால் நகரிலிருந்து ஒரு போர் வீரன் குதிரைமேல் ஏறி அதிவேகமாய் வந்தான். தூர வரும்போதே வெள்ளைக் கொடியை வீசி நில், நில் என்று கூவி அடைந்தான்.

அவ்வீரன் என்ன சொல்லப் போகின்றானோ? என எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்துச் செவி சாய்த்து நின்றார். ’அரசனுக்கு இப்பொழுது ஆண் குழந்தை பிறந்துள்ளது; அதனால் கொலையை நிறுத்தி அவனை விடுதலை செய்தருளுமபடி உத்தரவாயது' என்று அவன் உரைத்தருளினான். அவன் பிழைத்து உய்ந்த நிலையினையும், விதியின் வலியினையும் வியந்து எல்லாரும் மகிழ்ந்து சென்றார். நிகழ்ந்த அந்நிகழ்ச்சியிலும் நம்முடைய நிலை மிகவும் அபாயம் உடையது; அதனை உணராதிருக்கின்றோமே! என்று உள்ளம் பரிந்து ஒரு பெரியார் தம் அருகே உள்ளவரிடம் அப்பொழுது உரைத்தருளினார். அயலே வரும் பாடலையும் காண்க.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

கோள்வலைப் பட்டுச் சாவாம்;
..கொலைக்களம் குறித்துச் சென்றே
மீளினும் மீளக் காண்டும்;
..மீட்சிவொன் றானும் இல்லா
நாளடி இடுதல் தோறும்
..நம்உயிர் பருகும் கூற்றின்
வாளின்வாய்த் தலைவைப் பாக்குச்
..செல்கின்றோம் வாழ்கின் றோமே! 10 குண்டலகேசி

கூற்றுவன் நம் உயிரைப் பருகிக் கொண்டே இருக்கின்றான்: அவனது வாள் வாயில் நம் தலை போய்க்கொண்டே இருக்கின்றது; நாம் வாழ்கின்றோமோ? சாகின்றோமோ? நிலைமையை ஓர்ந்துய்ய வேண்டும் என இது உணர்த்தியுள்ளது.

மனிதனுடைய வாழ்வு .அவலக் கவலைகள் பல படிந்து பரிதாப நிலையில் உருவாகியிருக்கின்றது. அந்த உண்மையைக் கருதியுணர்ந்து உறுதிநலனை விரைவில் அடைந்து கொள்வதே பிறவியின் பயனாய்ப் பெருகி நிற்றலால் காலக்கழிவைக் கண் காணக் காட்டி மேலோர் சாலவும் போதித்து வருகின்றனர்.

காலன் வாய்ப்படுமுன் கதியைக் கைக்கொண்டவன் அதிசய பாக்கியவானாய்த் துதி செய்யப் பெறுகின்றான்; அல்லாதவன் மதி கேடனாயிழிந்து மாய்ந்து கழிகின்றான்.

அழிவு நேருமுன்னே ஆவதைச் செய்து கொள்வது ஆன்ம ஊதியமாய் அமைதலால் அது பிறவிப் பேறாய்ப் பெருமகிமை பெற்றது. பிறந்து வந்த நாம் நாளும் இறந்து படுகின்றோம்; அந்தப் பாடு அறிந்து பீடு பெற வேண்டும்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

சுமைத்தயிர் வேய்ந்த சோற்றின்
..துய்த்தினி தாக நம்மை
அமைத்தநாள் என்னும் நாகம்
..விழுங்கப்பட்(டு) அன்ன தங்கண்
இமைத்தகண் விழித்தல் இன்றி
..இறந்தபா(டு) எய்து கின்றாம்:
உமைத்துழி சொறியப் பெற்றாம்
..ஊதியம் பெரிதும் பெற்றாம். 2617 விசயமா தேவியார் துறவு, முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி

காலம் என்னும் பாம்பு நாளும் நம்மை நல்ல தயிர்ச்சாதம் போல் விழுங்கி வருகின்றது; முழுவதும் விழுங்கப்படுமுன் விழி திறந்து உய்க என உறுதி கூறியுள்ள இது ஈண்டு ஊன்றி உணரவுரியது. தினவு தின்ற இடத்தே சொறிந்து இன்புறுதல் போல சுனைவுகள் ஒன்றி மனமகிழ்ந்து வருகின்றோம்; இந்த மாய வாழ்விலிருந்து தூய உயர்நிலையை விரைந்து அடைய வேணடும்.

’எவ்வளவு மொழிந்தாலும் வெவ்வினையர் கேளார்’ என்றது பாவ சன்மங்களின் பரிதாப நிலைமையைக் கருதி வந்தது. உறுதி உண்மையைத் தெளிவாக உரிமையுடன உருகி உரைத்தாலும் யாதும் உணராமல் மந்த மதியினராய்ப் பலர் சிந்தை இழிந்துள்ளனர். அந்த அறிவுக் கேடு அவலத் துயர்களாம். முடிவு தெரியாமல் மடிவது கொடிதாகின்றது.

எமன் வாய் இரையாய் உள்ளோம் என்பதை எண்ணியுணர்ந்து புண்ணியம் பொருந்திப் புனிதமுற வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Sep-19, 10:07 pm)
பார்வை : 87

மேலே