வாளுடைய மன்னர் பலர்வந்து மாண்டொழிந்தார் - காட்சி, தருமதீபிகை 425

நேரிசை வெண்பா

நாளும் பொருள்வருவாய் நாடுகின்றீர் நல்லுயிர்மேல்
ஆளும் படியை அறியகிலீர் - வாளுடைய
மன்னர் பலர்வந்து மாண்டொழிந்தார் இவ்வுலகில்
என்னபலன் கண்டீர் இருந்து. 425

- காட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தம் உயிர்க்கு ஒரு நலமும் காணாமல் பொருள் வரவையே விழைந்து நாளும் மருள் கொண்டு அலைகின்றீர்! வாள் வலியுடைய அாசர் பலர் வந்து அழிந்து போயினர்; இவ்வுலகில் இருந்து நீர் என்ன பலனைக் கண்டீர்? என்கிறார் கவிராஜ பண்டிதர். இது உறுதி நலனைக் கருதுக என்கின்றது.

அறிவு, இச்சை, செயல் என்பன மனிதனிடம் நெறிமுறையே நிகழ்ந்து வருகின்றன. ஒரு பொருளைக் காணுகின்றான்; அங்ஙனம் கண்ட பின்பே அதன் மேல் விருப்பம் உண்டாகின்றது. விரும்பியதை அடைந்து கொள்ள வேண்டும் என்று முனைந்து முயலுகின்றான். காட்சியும் கருத்தும் மனித வுலகத்தை ஆட்சி புரிந்து வருகின்றன. வாழ்வின் வரவுகள் தாழ்வுகளில் தாவுகின்றன.

தேக போகங்களையே விழைந்து எங்கும் யாவரும் ஆவல் மீதூர்ந்து திரிகின்றனர். நாசமான நிலைகளில் ஆசைகள் வளர்ந்து வருதலால் அவை அவலங்களாய் முடிகின்றன.

அசுத்தமும், துக்கமும், அழிவுமான உடல்களை ஓம்ப விரும்பிக் கடல் கடந்தும், மலைகள் ஏறியும், கடுவனங்கள் நடந்தும் படாத பாடுகள் படுகின்றனர். முடிவான பயனை ஒரு சிறிதும் உணராமல் முடிந்து போகின்றனர். அறிய உரியதை அறிந்து, அடைய வேண்டியதை அடைகின்றவன் பெரிய பாக்கியவானாகின்றான். அவனே பிறவிப்பயனப் பெற்ற பேரின்ப நிலையினன்.

உயிர் ஆளும் படியை அறிதலாவது தூய சிந்தனைகளோடு நல்ல வினைகளைச் செய்து மேலான கதிகளின் அதிபதிகளாய் வருகின்ற ஆன்ம நலன்களை உணர்ந்து தெளிதலாகும்.

உலக மையலில் இழிந்து ஒழியாமல் எவ்வழியும் உயிர்க்கு உய்தி காண்பவனே உண்மையான காட்சியாளனாய் உயர்ந்து திகழ்கின்றான். நான் என்னும் சொல்லுக்கு உரிய உண்மைப் பொருளை ஓர்ந்துணர்ந்து அதனைப் புனிதமாகப் போற்றி வருபவன் புத்தேளுலகமும் போற்ற மகிழ்கின்றான்.

உண்மை நிலையை உணராமல் மருள் மண்டியிருக்கும் அளவும் புன்மையும் துயரங்களும் குடி கொண்டிருக்கின்றன.

’மன்னர் பலர் வந்து மாண்டொழிந்தார்’ என்றது உலக வாழ்வின் நிலைமையை உன்னி உணர வந்தது.

பெரிய ஒரு தேசத்தை ஆளுகின்ற அதிபதிக்கு மன்னன் என்று பெயர். அறிவு, திரு, ஆற்றல் முதலிய பலவகை வன்மைகளை மருவி நின்று மனு முறைப்படி மன்னுயிர்களை இனிது காப்பவன் என்னும் மகிமையை அப்புனித நாமம் பொருந்தியுள்ளது.

அத்தகைய உயர்நிலையுடைய அரசர்கள் பல்லாயிரம் பேர் தோன்றிச் செல்வச் சீர்களோடு சிறந்து நின்று எல்லாரும் ஒருங்கே இறந்து போயினர். இருந்தவர் எவரும் இலர். யாவும் அழிந்து மறைவதே யாண்டும் இயல்பாயுள்ளது.

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

வந்துடன் வணங்கும் வானோர்
..மணிபுனை மகுட கோடி
தந்திரு வடிகள் ஏந்தும்
..தமனியப் பீடம் ஆக
இந்திர விபவம் பெற்ற
..இமையவர் இறைவர் ஏனும்
தந்திரு உருவம் பொன்றத்
..தளர்ந்தனர் அனந்தம் அன்றோ? 1

மக்களின் பிறவி யுள்ளும்
..மன்னர்தம் மன்னர் ஆகித்
திக்கெலாம் அடிப்ப டுத்தும்
..திகிரியம் செல்வர் ஏனும்
அக்குலத்(து) உடம்பு தோன்ற
..அன்றுதொட்(டு) இன்று காறும்
ஒக்கநின் றார்கள் வையத்(து)
..ஒருவரும் இல்லை யன்றே. 2 யசோதர காவியம்

வான் ஆண்ட இந்திரரும், மண் ஆண்ட மன்னர்களும் மாண்டு போன படியை இவை வரைந்து காட்டியுள்ளன. தெளிவு கொண்டு உய்ய வேண்டும் என்று கருதி இந்த அழிவு நிலைகளை இங்ஙனம் விழி தெரிய விளக்கியது.

இவ்வுலகில் இருந்து என்ன பலன் கண்டீர்? இந்தக் கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்ல நேர்ந்தால் பரிதாப நிலைகள் விழி எதிரே தெளிவாய்க் தோன்றும்.

யானை ஏறிச் சிவிகை ஊர்ந்து, மாட மாளிகைகளில் இங்கே மகிமையோடு வாழ்ந்தாலும் உயிர்க்கு உறுதி நலனை ஓர்ந்து கொள்ளாதவர் துயர்க்கே நிலையமாய்த் தாழ்ந்து ஒழிகின்றார். ஒழிவு நிலையை உணர்ந்து உயர் நலம் உறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Sep-19, 9:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

மேலே