எங்க ஊர் ராமநாதபுரம்

கலங்கரை விளக்குகள் பார்த்துதான்
கடல் நீர் பாதையில் நடக்கிறோம்

ஆகாசம் கடலையே போத்திடும்
போர்வை யா என திகைக்கிறோம்

மீனவன் தேவைகள் நீரிலே முடியுது
மீன் விற்ற பிறகுதான் எங்கள் வாழ்க்கை சிறக்குது

கறைகளை தேடவே நினைவு கூறுது
கன்னிப்பெண் கூட்டம் கட்டுமரமாய் மாறுது

பாறைகள் சுற்றிய சாலை இருக்குது
பாம்பன் பாலம் வழிவிட கப்பல் பறக்குது

நெத்திலி வாசம்தான் நித்தமும் இனிக்குது
நித்திரை மறந்துதான் நெஞ்சங்கள் சிரிக்குது

மீன் கூட்டம் இசைகேட்டு பொழுது போகுது
மீளாத சோகம்தான் நெஞ்சை ஆளுது

......கலங்கரை விளக்குகள் பார்த்துதான்
கடல் நீர் பாதையில் நடக்கிறோம்



கூரை வீட்டை நீக்கி பார்த்தா மின்சாரம் தெரியுது
கூறுகெட்ட குப்பத்துல நிலவு வெளிச்சம் எரியுது

ஆழம்பார்த்து நீளம் தாண்டி மீன்பிடிக்க போகிறோம்
எல்லைத்தாண்டி வந்தோம்னு சுட்டுத்தானே சாகுறோம்

சேதுமன்னன் ஆண்டவம்சம் நாதியத்து கடக்குது
சேர்ந்து வாழும் நாங்க இங்கே யாரைத்திட்டி தீர்ப்பது

தனுஷ்கோடி இடமெல்லாம் சிறப்பதான் இருக்குது
தாலிகட்டி வந்தமக தாலியத்து நிக்குது

எங்கள் ஊரில் தீவுகள் எத்துணை இருந்தாலும்
எங்கள் வாழ்க்கைக்கு தீர்வு இருக்குதா

......கலங்கரை விளக்குகள் பார்த்துதான்
கடல் நீர் பாதையில் நடக்கிறோம்



நீரும் இங்கே நிரைந்திருந்து என்னபயன் இருக்குது
தாகம்வந்து குடிக்கும்போது உப்பாய்தான் ருசிக்குது

கடலலைகள் வருகை தந்து கதவை மெல்ல தட்டுது
மீனவனின் அன்பினாலே எல்லைத்தாண்டி நிற்குது

புயல் வந்து போனதால உருமாறி இருக்குது
பயங்கள் மறைந்து போனதாலே கண்கள் மெல்ல விழிக்குது

வருமானம் இங்கேயும் குறைவாதான் வருகுது
வாழ்க்கையின் பஞ்சங்கள் மெது மெதுவாய் விலகுது

அப்துல் கலாம் வாழ்ந்த நாடு சுவடுகள் இருக்குது
இன்னொரு கலாம் வருவதற்கு சுமைதான் தடுக்குது

கச்சத்தீவு எல்லைகள் பக்கமாய் இருந்தாலும்
கடந்து போகதான் வழிகள் இருக்குதா...

BY ABCK

எழுதியவர் : (9-Sep-19, 3:11 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 158

மேலே