ஐரோப்பாவில் ஜாதிக்கலவரம்

ஒஷ்லோ மாநகரம் பல்லின மக்களை உள்வாங்கி தனித்துவமாய் ஓங்கி நிற்கின்றது நோர்வே நாட்டில். நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்தவர்கள் முதலாம் தலைமுறையாகவும், இரண்டாம் மூன்றாம் தலைமுறையாகவும் வசிக்கும் இந்த நாட்டில்தான் லவனி பிறந்தாள், வளர்ந்தாள், படித்தாள், பட்டமும் பெற்றாள் என்பது அவளுக்கே உரிய தன்னிகரில்லாத பெருமை. பெற்றோர் எப்பொழுதும் அவளை நினைத்து பெருமையடைவதுண்டு. அதுமட்டுமல்ல பார்ப்பவர்கள் எல்லோரும் எப்படி உங்கள் பிள்ளையை இப்படி வளர்த்தெடுத்தீர்கள் இந்த நாட்டில்,என்று ஆச்சரியப்படும் அளவிற்கு தன் கலாச்சாரத்திற்கே உரிய பண்பு கலைந்து போகாத அதேநேரம், தான் பிறந்து வளர்ந்த நோர்வே நாட்டில் ஆழ வேரூன்றி அறிவுடையவளாய் இருப்பதும்தான் அதிசயம்.

லவனியினுடைய தந்தை இளம் வயதில் இலங்கையிலிருந்து இனப்பிரச்சனை காரணமாக 1980 களில் நோர்வே நாட்டில் தஞ்சம் புகுந்தவர். வல்வெட்டித்துறை என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவருக்கு திருமண வயது எட்டவே, பெற்றோர் தம்முடைய குலத்தில் ஒரு பெண்ணை திருமணம் பேசி நோர்வே நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். அழகும் மிகவும் மிருதுவான சுபாவம்மும் கொண்ட மனைவியோடு இல்லற வாழ்வில் இனிதே இணைந்த தம்பதியினருக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.

தன் தாய்நாட்டை விட்டு பிரிந்த நாள் முதல் தஞ்சம் புகுந்த நாட்டில், கிடைத்த வேலையை பிடித்த வேலையாகக் கருதி உழைப்பில் ஈடுபட்ட தந்தை, தன் தாய் நாட்டின் கனவுகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டார். புலம்பெயர் நாட்டில் நடைபெறும் ஈழ நாட்டுக்கோரிக்கைக்கான பல பிரச்சாரங்களில் தன்னை ஈடுபடுத்தியது மட்டுமன்றி தன் உழைப்பின் ஒரு பகுதியை எப்பொழுதும் ஈழ நாட்டின் வெற்றிக்காகவும் வளர்ச்சிக்காகவுமே செலவாக்கியவர்.

தன் பிள்ளைகளையும் அந்த வழியிலேதான் வளர்த்தெடுத்தார். தலைவர் குடும்பத்தை மாமா மாமி என்றும் போராளிகளை தங்கள் கதா நாயகர்கள் என்றும் சொல்லிக்கொடுத்து வளர்த்தார். வளர்ந்து பெரியவளாகிய பின்பு, இன்றும் அவள் அப்படித்தான் கூறுவாள். எல்லா வசதிகளும் கொண்ட ஓர் வேற்று நாட்டில் வாழும் இவளால் எப்படி இப்படி தன் தாய்நாட்டுப் பற்றோடு ஊறிவிட முடியும். இது அவளைச் சுற்றியுள்ள எல்லோருடைய கேள்வியுமாக இருந்தது.

கடல்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட வல்வெட்டித்துறையில் பிறந்து வாழ்ந்த பெற்றோர், ஒரு நாளேனும் தம் பிள்ளைகளுக்கு ஜாதிபற்றி பேசியதில்லை. அதற்கான தேவையும் இங்கிருக்கவில்லை. நோர்வே நாட்டில் யாரும் யாதிபற்றி பேசுவதில்லை. தொழிலை அடிப்படையாக வைத்து சமூகத்தை வகைப்படுத்தும் வழக்கம் ஐரோப்பியர்களுக்கு பழக்கமில்லாத ஒன்று. துப்பரவு செய்யும் தொழிலாளர்கள் முதல் நாட்டை நிர்வகிக்கும் பிரதமர் வரைக்கும் சாதாரண மனிதர்கள்தான்.

எல்லாத்தொழில் செய்பவர்களுக்கும் மதிப்பளிக்கும் நாடு இது. இங்கு கீழ்மட்ட தொழில் என்று சொல்லும் அளவுக்கு எந்த தொழிலும் இல்லை. கழிவறைகளை துப்பரவு செய்பவர்கள் கூட மகிழூந்து பங்களா என வசதியாக வாழும் அளவிற்கு ஊதியம் வழங்கப்படுகின்றது. ஜாதி பற்றி இங்கு யாரும் கதைப்பதுகூட இல்லை.

பல்வேறு நாட்டவர்கள் வாழும் நாடு என்பதால் இன மத ரீதியான துவேசம் மக்களிடையே அவ்வப்போது துளிர் விட்டாலும், அவற்றிலிருந்து மக்களைக் காக்க சட்டம் துணை நிற்கின்றது. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதுதான் இன் நாட்டு மக்களின் தாரக மந்திரமாக காணப்படுகின்றது. இப்படியான குழுமத்தில் வாழும் லவனிக்கு, ஜாதி பற்றி அறியும் சந்தர்ப்பம் ஏற்படும் என்று அவள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

நோர்வேஜிய பள்ளிக்குச்செல்லும் சம காலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழ் பள்ளிக்குச் சென்று தமிழை எழுதவும் வாசிக்கவும் சரளமாகக் கதைக்கவும் கற்றுக்கொண்டாள் லவனி. இதன் பயனாக தமிழ் பள்ளியால் நடாத்தப்படும் உதவிப்பாடத்திட்ட வகுப்புக்கு தன்னை ஆசிரியராக இணைத்துக்கொண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப்பாடம் கற்பித்தாள். இங்கு அவளோடு தமிழ் பள்ளியில் கற்ற இன்னும் சில நண்பர்களும் ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றார்கள். இவள் இப்போது நோர்வேஜிய பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்றுக்கொண்டிருக்கின்றாள். சனிக்கிழமைகளில்தான் இவ்வாறு ஆசிரியப்பணியில் தன் நேரத்தை செலவிடுவது இவளது வழக்கமாய் இருந்தது.

மீன் போன்ற அழகிய பெரிய விழிகளையும், நன்கு நீண்டு வளர்ந்த அடத்தியான சுருண்ட கூந்தலையும், பெண்களுக்கே உரித்தான அழகான மானிறத்தையும் கொண்ட இவள் ஐந்தடி ஆறு அங்குலத்தை தன் உயரத்தின் அளவாகக் கொண்டிருந்தாள். எப்பொழுதும் தன்னை அலங்கரிப்பதில் அவளுக்கு அலாதி பிரியம். என்னேரமும் நல்ல கடுமையான வர்ணங்களையே தன் சொண்டுகளை அழகுபடுத்த தேர்ந்தெடுப்பாள். இமைகளுக்கு மஷ்காரா போடும்போது, மேல் இமைகளுக்கு மட்டுமே போட வேண்டும், அப்போதுதான் கண்கள் பெரிதாக தோன்றும் என்பாள்.

என்னேரமும் தன் புருவங்களை நேர்த்திப்படுத்தி கருமை நிறம் கொண்டு கோடிட்டிருப்பாள். பெரியோர் சிறியோர் என்ற வேறுபாடின்றி எல்லோரையும் எப்பொழுதும் புன்னகைத்து வரவேற்கும் இவளுக்கு தன் இனத்தவர்களைக் கண்டால் அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் உதவ முன்வரவேண்டும் என்ற ஆர்வத்தை சட்டென்று வெளிப்படுத்திவதில் ஒருபோதும் தயங்குவதில்லை.

அன்று ஒரு நாள் சனிக்கிழமை வகுப்பெடுக்கச் சென்றவளுக்கு ஓர் புதிய அனுபவம் கிடைக்கப்போகின்றது என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இடைவேளை நேரமது. தன்னோடு பணி புரியும் சக தோழியோடு பேசிக்கொண்டிருந்தாள். கையில் இருந்த தேனீர்க்குவளையை சுழற்றியவாறே அவள் தோழி “ உனக்கு இன்று நான் ஒரு ரகசியம் சொல்லப்போகின்றேன் என்றாள்” இவளுக்கு சட்டென்று பட்டுவிட்டது. பருவ வயதினரிடம் வேறு என்ன இரகசியம் இருக்க முடியும்.

தோழி தொடர்ந்தாள். உனக்கு தெரியும்தானே சுகந்தனை, எங்களோடு படித்தவன். அவனும் நானும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றோம். நீண்ட நாள் தொடர்பு. எங்கள் வீட்டுக்காரருக்கும் இது பற்றி தெரியும். அவர்களுக்கும் எங்கள் விருப்பத்தில் சம்மதம். ஏனெனில் நாங்கள் இருவருமே ஒரே ஜாதி. ஓ அப்படியா மகிழ்ச்சி என்று பதிலளித்தவளுக்கு உள்ளூர ஒரு குடைச்சல். ஜாதியா? அப்படியென்றால் என்ன? இவளுக்கு எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை.

இவளுக்கு இப்போது பதினாறு வயது. தோழியிடம் ஜாடை மாடையாக கதை கொடுத்து ஜாதிபற்றி சிறிது தெரிந்து கொண்டவளுக்கு, தான் என்ன ஜாதி என்று அறியும் ஆவலில் வீடு செல்லும் நேரத்தை கணிப்பிட்டுக்கொண்டிருந்தாளே தவிர, அன்றைய
மிகுதி நேர வகுப்பு எடுத்ததே நினைவில்லை.

வீட்டிற்கு வந்தவள் முதலில் தன்னைவிட இரண்டு வயது மூத்த சகோதரியிடம் ஜாதி பற்றி உனக்கு ஏதும் தெரியுமா என்று கேட்டு தன் தோழி கூறிய விடயம்பற்றி கூறினாள். அவளும் அதுபற்றி அறிந்திருக்கவில்லை என்றபோது, அன்று மாலை இரவு நேர போசனத்திற்காக எல்லோரும் ஒன்று கூடியிருந்த வேளையில், உணவிற்கு பின் அன்று தாயார் தயாரித்த பழக்கலவையை மென்றவாறே மெல்லக் கதை தொடுத்து கேட்டாள். “ அம்மா ஜாதி என்றால் என்ன?”

அம்மா மௌனமாகவே இருந்தார். ஆனால் அப்பாவின் கண்கள் கோபத்தால் சிவந்தன. “ உனக்கு யார் இதெல்லாம் சொன்னது” என்று சற்று சினந்தபடியே கேட்டவர், பின் அமைதியாகி சுருக்கமாக ஜாதிபற்றி கூறி முடித்தார். தலைவர் போராட்டம் தொடங்கியதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஜாதி ஒழிப்பும் ஒரு காரணம்தான். அவர் ஆட்சி செய்தகாலத்தில் ஜாதி பற்றி கதைக்கவே எல்லோரும் அஞ்சுவார்கள் என்று தன் கருத்தைக்கூறினார் அம்மா.

இப்பொழுது இவளுக்கு இருபத்து ஐந்து வயது. இன்று இவள் மருந்தக ஆலோசகராக தனது ஐந்து ஆண்டு கால பட்டப்படிப்பை பல்கலைக்களகத்தில் பூர்த்தி செய்து. மிகப் பிரபலமான வைத்தியசால ஒன்றில் நோயாளர்களின் விடுதிகளுக்குச்சென்று மருந்துகளின் பாவனை பற்றி ஆலோசனை வழங்கி வரும் பணியில் ஈடுபட்டிருக்கின்றாள். இவளுக்கு காதல் என்று யார்மீதும் வந்ததில்லை. அதற்கு அவள் இடங்கொடுத்ததுமில்லை. இவளோடு படித்த ஆண் நண்பர்கள் சிலரோடு நட்பாய் இருக்கிறாள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு ஜாதிக்காரர்கள். நண்பர்கள் என்ற எல்லையைத் தாண்டி அவர்கள் பழகுவதில்லை.

இவள் சகோதரிக்கு ஊரில் இருந்தே மாப்பிள்ளை எடுத்தார்கள். என்னதான் தன் கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்ந்தாலும். பல்லின மக்கள் வாழும் நாட்டில் பிறந்து வளர்பவர்களுக்கும் ஓர் இனக்கலாச்சாரச் சூழலில் வாழ்ந்தவர்களும் திருமணத்தில் இணையும்போது, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படுகின்றது. புதிய மொழி,புதிய தொழில், புதிய சமூகம் என்பதில் இசைவாக்கம் அடைவது அவ்வளவு எளிதல்ல. இதை நேரில் பார்த்தவள் இவள்.

இதனால் எப்படியாவது இந்த நாட்டிலேயே வளர்ந்த அதுவும் தன் இனத்திலேயே பிறந்த ஒருவரை வாழ்க்கைத்துணையாக்க வேண்டும் என்பது இவள் கனவு.

பெற்றோர் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்தான். எல்லா ஜாதியும் தம் யாதிதான் என்றுதான் கூறுவார்கள் இவள் பெற்றோர். தலைவர் வழி வந்தவர்கள் அல்லவா இவர்கள். கிட்டத்தட்ட பதினையாயிரம் தமிழர்கள் மட்டுமே வாழும் இந்த நோர்வே நாட்டில் பல ஜாதிப்பிரிவினர்களைக் கொண்ட தமிழ் குமுகாயத்தில் இவள் கனவு நிறைவேறுவது எப்போது?


“குருதியின் வர்ணம் எல்லோருக்கும் ஒன்று என்றாலும் குருதியின் வகையும், வெண்குருதியின் வகையும் வேறு வேறு அல்லவா! இறைவன் வகுத்த நீதியா ஜாதி என்னும் சேதி?
.............
யோகராணி கணேசன்
28.ஆவணி 2019

எழுதியவர் : யோகராணி கணேசன் (11-Sep-19, 3:14 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 104

மேலே