அம்மா நீ இல்லாத வாழ்க்கை கசக்கிறது
வீட்டில் செல்லலமாய் வளர்ந்த பெண் பூஜா. சிறு வயதிலிருந்தே அவள் ஆசையெல்லாம் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும். எதற்கும் அவ்வளவாக ஆசை படமாட்டாள். ஆனால், துக்கம் சிறிதாயினும் அழுதுவிடுவாள். அழுது முடித்து சிறிது நேரத்தில் சமாதானமும் ஆகிவிடுவாள். தாய் தந்தைக்கு உயிரே இவள் தான் என்றும் கூறலாம். இவளும் வள்ளல் போல்தான் பாசம் பொழிந்திடுவாள். ஆசை ஆசையாய் வளர்த்து நல்ல வரன் தேடி தேடி இறுதியில் ஒரு மாப்பிளை முடிவு செய்து திருமணம் நடத்தி முடித்தனர்.
இரண்டு வருடங்களுக்கு பின் இன்று தன் தாயின் இறப்பு செய்தி கிடைத்தது. பூஜாவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அழுகவோ புலம்பவோ இல்லை. கண்ணீர் துளிகள் சிறிது சிதறின. அவள் உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்கவும் வழியில்லை.
அவளின் உறவினர்கள் அவளிடம் "மனசுக்குள்ளேயே போட்டு வைக்காதம்மா. அழுது தீர்த்திடு. இல்லனா மனசு ரணமாயிடும்" என்றனர். மேலும் சிலர் "கல்யாணம் ஆகிட்டா அவ்ளோதான் போல. பூஜா அழுகவே இல்ல. வருத்தம் மாதிரி ஒன்னும் தெரியல" என தங்களுக்குள் பேசி கொண்டனர்.
இதயெல்லாம் கண்டு செல்விக்கு மனம் கொள்ளவில்லை. அவளிடமே பேசிவிட வேண்டும் என அவளிடம் விரைந்தாள்.
செல்வியும் பூஜாவும் பள்ளிப்பருவத்திலிருந்தே தோழிகள். எந்த ஒளிவு மறைவும் இல்லை அவர்களுக்குள். "என்னடி ஆச்சு உனக்கு?.ஏன் இப்படி இருக்க?.உனக்கு அழுகையே வரலையா இல்ல அழ கூடாதுனு ஏதும் சபதமா?".என படபடவென செல்வி கேட்க பூஜா, "என்னடி சொல்ல சொல்ற. எனக்கு வருத்தமில்லாம இருக்குமா. கல்யாணம் ஆனதுல இருந்தே நிறைய அழுத்திட்டுதாண்டி இருக்கேன். இதுவரை நான் பார்த்திராத கேட்டிராத பல அதிர்ச்சிகளை அனுதினமும் சந்திச்சிட்டு வரேண்டி. ஆனா, எல்லா கஷ்டத்தையும் விட என் தாய் என்ன விட்டு பிரிஞ்சு இந்த நஷ்டம் யாருனாலயும் ஈடு கட்ட முடியாதது " என கூறிக் கொண்டிருக்கும்போதே செல்வி குறுக்கிட்டாள்
"எதுக்கு இப்படி குழப்பிக்கிற? குடும்பம் என்றால் ஆயிரம் சந்தோஷம் வரும் போகும். கஷ்டங்கள் என்ன விதிவிலக்கா? ஆனா அம்மாவோட இழப்பு பேரிழப்பு. எதுக்கு வருத்தப்படலேன்னாலும் இதுக்கு அழுது தீர்த்திடுடி. உன்ன இப்படி பாக்கவே கஷ்டமா இருக்கு" என சொல்லி முடிக்க பூஜா தெளிவாய் கூறினாள்
எனக்கு அழுகை வரலடி. அதுக்காக நான் மனசுக்குள்ளேயே போட்டுவச்சு மன அழுத்தம் ஆயிடுமோனு பயப்படாதே. எனக்கு எல்லாம் புரியுது. இப்படியே நான் சரிந்து அழுதுட்டு இருந்தா எங்க அப்பா அண்ணனை எல்லாம் யார் தேத்தறது?
"அதுவும் சரிதான் பூஜா. இனிமே அம்மா ஸ்தானத்துல இருந்து நீதான் குடும்ப பொறுப்பை எடுத்துக்கணும். தைரியமா இரு. உன்னோட எல்லா சுக துக்கங்கள்லயும் நான் எப்பவும் கண்டிப்பா இருப்பேன்" என சொல்லி விடைபெற்றாள் செல்வி.
சாங்கியங்கள் சம்பிரதாயங்கள் என ஒரு மாத இடைவேளைக்கு பின்பு தன் கணவருடன் இல்லம் திரும்பினாள் பூஜா. வீடு சென்ற மறுநாள் காலை எழுந்ததும் கைபேசியை எடுத்து தன் தாயின் எண்ணை எடுத்து அதையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். என்றும் அவள் செய்யும் முதல் வேலை இது தான். தன் தாயிற்கு அழைத்து அவரின் உடல் நிலை தந்தையின் உடல் நிலை விசாரிப்பில் ஆரம்பித்து காலை உணவு என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என நீண்ட நேர பேச்சுக்கள். இப்பொழுது அது நடக்காது என புரிந்தவளாய் சமயறையை நோக்கி செல்லும் கட்டாயம்
தாயை இழந்த போது கூட அவ்வளவு வலி தெரியவில்லை "தாயில்லா புள்ளை அவள்" என்று ஒவ்வொருவரும் சொல்லும்போது தான் அவள் மேலும் மேலும் வலியை உணர்கிறாள் "புள்ளய எப்படி வளக்கிறதுனு பெரியவங்க சொன்னா அமைதியா கேட்டுக்கோ. உன்னோட தாய் தான் தவறிட்டாங்கல்ல" என்று அமிலத்தை வார்த்தைகளால் அல்லி தெளிக்கும் கொடுமையும் அனுபவிக்கிறாள்.
பிள்ளை பள்ளி செல்ல ஆரம்பித்தது. விவரமும் தெரிய தொடங்கியது.
"அம்மா எல்லாரும் லீவு விட்டா தாத்தா பாட்டி வீட்டுக்கு போறாங்க. பாட்டி விதவிதமா ஸ்னாக்ஸ் செஞ்சு தருவங்களாம். ஒரு மாசம் அங்க தான் இருக்கப்போறாங்களாம். எனக்கு மட்டும் ஏன் மா பாட்டி இல்ல. என் மேல அவங்களுக்கு ஏதாவது கோவமாமா?" என பிள்ளை கேட்கும் கேள்விக்கு தானும் பிள்ளையாகி அழுதிடுவாள் பதில் கூற இயலாமல்
தனக்கு தான் தாயில்லை என் பிள்ளைக்காவது தாய் வேண்டுமே என அந்த குழந்தைக்காக பூஜா வாழ்ந்து கொண்டிருக்கிறாள்..
இதைவிட என்னை உன்னால் தண்டிக்கமுடியாது
தந்தையே, தைரியம் கொள்ளுங்கள் தனித்து போராட பழகிடுவோம்
சகோதரனே, சகித்துக்கொள்
சந்தோஷங்கள் எல்லாம் மைல்கல் தான் இனி நமக்கு
கணவனே, பொறுத்துக்கொள்
கரைந்துபோகும் வரை கதறி கொண்டுதானிருப்பேன்
தோழமையே, கடந்துசெல்
துக்கத்தை துடுப்பிட்டு கடக்க நேரமாகும் எனக்கு
மகளே, முடிந்தவரை மகிழ்ந்துகொள்
மடிந்துவிடுவேன் நானும் ஒருநாள்
தாயே, பொறுமையுடன் காத்திருங்கள்
தாலாட்டு பாடல் நீங்கள் பாட
நிச்சயம் வருவேன் உங்கள் கன்னங்களில்
நான் முத்தமிட
வருத்தம்கொள்ளாமல் என்னை வாரியணைத்துக்கொள்ளுங்கள்