ஒரு கவிதையின் கதை
அவளே ஒரு கவிதை
அவளை எழுதியவன்
இன்பியலாகத்தான் தொடங்கினான்
அவன் எழுதுகோல்
அவளை எழுதும் போது
அழகின் சிகரமாய் எழுதி
அவனியில் பிறக்க விட்டான்
இந்த அவனியோ அந்த
ஏந்திழையை ஏனோ
அவதியில் உழலவிட்டு
அழுவதற்காகவே விழிகளை
அவனியில் தந்ததாய்
அழவைத்து வேடிக்கை பார்த்தது
படிக்க போன இடத்தில்
பாழாய் போன பருவம் அவளை
இடித்து தள்ள
இடறினாள் நல்லவேளை
தடுமாறினாலும் விழாமல்
தனை தக்க வைத்து கொண்டாள்
வேலைக்கு போகும் போதோ
வேலை யற்றவர்களின்
பார்வைகணைகளால்
நீர்த்துபோனாள்
வெட்கம் ஒருபுறம் கூடவே
வேதனைக்கு காதல் என்ற பேரில்
வேண்டாத உணர்வுகள் ஓர் புறம்
புறந்தள்ளி முன்னே போனாள்
அலுவலகங்களில்
ஆயிரமாயிரம் பார்வை கணைகள்
அலட்சியப்படுத்தி முன்னே போனாள்
நக்கல் நைய்யாண்டிகள் எதிர்ப்பட்டன
பக்குவமாய் முன்னே சென்றாள்
இத்தனைக்கும் பின்னால்
இரவுகளில் அவள் கண்ணீர்
இடை வரை நனைத்தது யாருக்கு தெரியும் ?
கல்யாணம் அவளுக்கு
கானல் நீராகவே போனது
கணவன் என்று யாரும் அவளுக்கு இல்லை
கற்பை மட்டும் சமூகம்
கற்கோட்டையாய் அவளுக்கு வைத்தது
முப்பதுகளை தாண்டி
நாற்பதை தொட்டும்
முள்காடுகள் அவளை சீண்டி
கிழிக்காமல் விட்டதில்லை
அவள் மனதின் ரணங்களை
அடிக்கடி கிண்டி கிளறும்
அற்பர்களின் வாய்க்கு அவள் தானே
தினம் தினம் மெல்லும் அவல்
அத்தனையும் தாண்டி அவள்
மேலேறி வர அவளை
ஒரே வார்த்தையில் கொன்று போட்டது
அவள் ஒரு மாதிரியாம் என்று
அவளின் வியர்வையும் கண்ணீரும்
அந்த கணமே குருதியாய் பாய பாவம்
அவள் இதயம் அந்த வேகத்தை தாங்காமல்
அமைதியாகிப் போனது அவள்
சடலம் ஆனாள் அந்த கவிதை
சாகும் வரையில் துன்பத்தை சுமந்து
சருகாகி உதிர்ந்தது இந்த
துன்பியல் கவிதைகள்
ஒன்றிரண்டல்ல முடிவதற்கு
ஒறாயிரம் தொடர்ச்சியாய் வருகிறது